கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததையடுத்து, புதிய முதல்வராக பிரமோத் சவாந்த் நேற்று முன் தினம் நள்ளிரவு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியை நள்ளிரவு நடத்தியதை பாஜக் கூட்டணியில் இடம் பிடித்துள்ள சிவசேனா விமர்சித்துள்ளது.
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:- “ கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பேரம் தீவிரமாக நடைபெற்றது.இறுதியில், பிரமோத் சாவந்த் மற்றும் 2 துணை முதல்வர்களின் நள்ளிரவு பதவியேற்பு நிகழ்ச்சியுடன் அந்த அதிகாரப் போட்டியை பாஜகவினர் முடித்துக்கொண்டனர்.
மறைந்த முதல்வர் பாரிக்கரின் அஸ்தி குளிரும்வரை கூட அவர்களால் பொறுத்திருக்க முடியாதது ஏன்? செவ்வாய்க்கிழமை காலை வரை கூட அவர்களால் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடியாதா?
அவ்வாறு ஒத்திவைத்தால் தற்போது பாஜக அரசில் துணை முதல்வர்களாப் பொறுப்பேற்றுள்ள கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களான விஜய் சர்தேசாயும், சுதின் தவாலிகரும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து, தங்களுக்கு உரிய பதவியை பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான் பாஜகவினர் அவ்வளவு அவசரமாக பதவியேற்றுக்கொண்டனர்.
கோவாவில் வெறும் 19 எம்எல்ஏக்களைக் கொண்ட கூட்டணியில் 2 பேருக்கு துணை முதல்வர் பதவி அளித்துள்ளது வெட்கக்கேடானதாகும்.எந்தவொரு மாநிலத்திலும் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படாது என்று 4 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக அறிவித்தது. அதன் காரணமாகத்தான் மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவில்லை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.