உணர்வோசை

“உன் இதயத்தை இரவலாகத் தந்திடண்ணா.. அப்பாவின் கலைஞர்” : எழுத்தாளர் தஞ்சாவூர்க் கவிராயர் உருக்கம் !

“உன் இதயத்தை இரவலாகத் தந்திடண்ணா.. அப்பாவின் கலைஞர்” : எழுத்தாளர் தஞ்சாவூர்க் கவிராயர் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்து தமிழ் திசை நாளிதழின் 03.08.2023 அன்றைய பதிப்பில் ‘அப்பாவின் கலைஞர்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய கட்டுரை பின்வருமாறு :-

“அப்பா ஒரு விசித்திரர். அவருக்குக் கலைஞரையும் பிடிக்கும் காந்தியையும் பிடிக்கும். அவர் தமிழாசிரியர். அந்தக் காலத்தில் தமிழாசிரியர்கள் ஒன்று தி.மு.க.காரர்களாக இருந்தார்கள். இல்லாவிட்டால் தி.மு.க. அனுதாபிகளாக இருந்தார்கள். "இடைநிலை ஆசிரியர்களாக இருந்த எங்களைத் தேர்வு எழுதி தமிழாசிரியராக வழிசெய்தவர் கலைஞர்” என்பார் அடிக்கடி. எனக்குப் புரியாது. ஆனால், அவர் கலைஞர் மீது காட்டிய நன்றி உணர்வு என்னைக் கலைஞர் மீது நாட்டம் கொள்ள வைத்தது. கலைஞர் டீக்கடை

அப்பாவை வழியில் பார்க்கிறவர்கள், "என்ன வாத்யாரைய்யா,இன்னிக்குத் திலகர் திடல்ல மூனா கானா மீட்டிங் இருக்கே போகலையா?" என்பார்கள். “போகணும்... போகணும்...* என்பார் சிரித்தபடி. அப்பா கையைப் பிடித்துக்கொண்டு நானும் கிளம்பி விடுவேன்.

நேராகக் குதிரைக்கட்டித் தெருமுனையில் இருக்கும் கலைஞர் டீக்கடைக்குப் போவோம். இந்தக் கடைக்காரர் செல்லப்பா தீவிரமான தி.மு.க. விசுவாசி. கடையைத் திறந்து டபரா, டம்ளர் எல்லாம் கழுவி வைப்பார். பாய்லரைத் துடைப்பார். ஆனால், பற்றவைக்க மாட்டார். அன்றைக்கு வந்திருக்கும் முரசொலியில் கலைஞரின் உடன்பிறப்புக்கான கடிதத்தை, கலைஞர் குரலிலேயே சத்தம்போட்டு வாசிப்பார். மாற்றுக் கட்சி நண்பர்களும் நின்று கேட்டு ஒரு மந்தகாசப் புன்னகையுடன் செல்வார்கள். இரவு நேரத்தில் கட்சிஊர்வலங்களில் செல்லப்பாவைத் தலையில் பெட்ரோமாக்ஸ் லைட்டுடன் பார்க்கலாம். அந்தத் தேர்தலில் கலைஞர் வெற்றிபெற்றார். முதல்வராகவும் ஆகிவிட்டார்.

முதல்வரின் கார் கரந்தை வழியாகச் சென்றது. சாலையோரம் இருந்த செல்லப்பாவின் தேநீர்க் கடையைக் கலைஞர் கவனித்துவிட்டார். காரைவிட்டு இறங்கி, “என்ன செல்லப்பா, சௌக்கியமா?” என்று கேட்டதுடன் செல்லப்பா பயபக்தியோடு போட்டுக் கொடுத்த டீ டம்ளரைத் தன் துண்டில் சுற்றிக் குடித்து விட்டு, முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். கட்சியின் கடைமட்டத்தொண்டனிடம் ஒரு மாநில முதல்வர் காட்டிய அன்பு அனைவரையும் நெகிழவைத்தது. திலகர் திடலில் வலித்த புறநானூறு

திலகர் திடலில் கலைஞர் பேசுகிறார் என்றால் கூட்டம் சொல்லிமாளாது. கலைஞர் கடைசியாகத்தான் பேசுவார். கூட்டம் முடிய இரவு 12, 1 மணிகூட ஆகிவிடும். காலையில் அப்பா பக்கத்து வீட்டு ஞானசம்பந்தம் சாரிடம், "நேத்திக்கு திலகர் திடலுக்கு நீங்க ஏன் வரலை? கலைஞர் புறநானூற்றுப் பாடல் களுக்குச் சொன்ன விளக்கம் பிரமாதம்! என்பார். கலைஞர் பேசுவது சில நேரம் வகுப்பில் தமிழ்ப் பாடம் கேட்பது போலவே இருக்கும்.

திராவிட நாற்காலி

அப்பாவுடன் சலூனுக்குப் போவது உண்டு. சலூன் கடைக்காரர் அப்பாவுக்குத் தனி மரியாதை தருவார். அவருக்கு ஒரு சுழல் நாற்காலி தனியாக இருக்கும். அப்பாவை அதில்தான் உட்கார வைத்து சிகை திருத்தம் செய்வார். அப்புறம்தான் என்னிடம் காரணம் சொன்னார், "தம்பி, இது திராவிட நாற்காலி. தஞ்சாவூரில் நாடகம் போட வர்ற தி.மு.க.காரவுங்க கிருஷ்ணா டாக்கீஸ் இருந்த இடத்தில்தான் தங்கி இருப்பாங்க. கலைஞர் இதில் உட்கார்ந்துதான் முடிவெட்டிக்கொள்வது வழக்கம். ராதா அண்ணன், அண்ணா எல்லாரும் இதில்தான் உட்கார்ந்து முடிவெட்டிக் கொள்வார்கள். இந்த நாற்காலியில் வேறு யாரையும் உட்காரவிட மாட்டேன். உன்னோட அப்பா புலவர்ங்கறதால அவருக்குத் தனி மரியாதை* என்பார். அப்பாவிடம் சொன்னேன் சிரித்துக்கொண்டார்.|

தளையசிங்கம் பார்வையில்...

தஞ்சை ப்ரகாஷின் இலக்கியச் சங்கத்துக்கு அப்பா ஒருமுறை வந்தார். அங்கே நடந்த இலக்கியப் படைப்புகள் பற்றிய பேச்சின் நடுவே அப்பா கலைஞரின் எழுத்தைச் சிலாகித்துப் பேசினார். அங்கிருந்த இலக்கியத் தீவிரவாதிகளால் அப்பாவின் கருத்தைத் தாங்க முடியவில்லை.

வெறும் அடுக்கு மொழியும் போலி இலக்கியப் பார்வையும் கொண்ட கலைஞரின் எழுத்துகளில் அரசியலைத் தவிர எதுவுமே இல்லை என்று வாதிட்டனர். அப்பா மௌனமாக இருந்தார். ப்ரகாஷ் குறுக்கிட்டு கலை இலக்கியத்தில் மிகவும் கூர்மையான பார்வை கொண்டவர் என்று நீங்கள் கொண்டாடும் இலங்கை எழுத்தாளர் மு.தளையசிங்கம் கருணாநிதி பற்றி என்ன சொல்கிறார் என்று படிக்கிறேன் கேளுங்கள் என்றார். 'மு.க.வின் கலை ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு' என்கிற கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசித்தார்.

"இன்றும்கூட பராசக்தி' திரைப்படத்தைப் பார்க்கும்போது அல்லது அதன் கதை வசனத்தைக் கேட்கும்போது மு.கருணாநிதியின் கலைத் திறமைச் சிதறல்களைக் காணலாம். அகிலனைவிடத் திறமையுள்ள

ஒரு கலைஞன்.

புதுமைப்பித்தன், மௌனி ஆகியோரைவிடக் கலையின் நோக்கத்தைப் பூரணமாகப் புரிந்து கொண்டவன். அத்துடன் பாரதியைப் போல் போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி.* நண்பர்கள் வாயடைத்துப் போயினர். அப்பாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. இதயத்தை இரவலாகத் தந்திடண்ணா!

அண்ணா காலமாகி சில நாள்களில் சி.ஐ.டி. ஏட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.

*அண்ணா போயிட்டார்... அண்ணா போயிட்டார்..." என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதவர், திடீரென்று அண்ணா மறைவை ஒட்டி கலைஞர் எழுதிய கவிதையைப் பாட ஆரம்பித்தார்.

*உன் இதயத்தை இரவலாகத் தந்திடண்ணா... நான் வரும்போது அதைக் கொண்டுவந்து உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா என்கிற வரிகளை அவர் பாடியபோது அப்பா குலுங்கி அழுதார். நானும் அழுதேன். (ஆகஸ்டு 7:- கலைஞர் நினைவுநாள்)

நன்றி : 'இந்து தமிழ் திசை’ (03.08.2023)

banner

Related Stories

Related Stories