பெண்களுடன் பேசும் கலை!
பெண்களிடம் பேசுவது குறுகுறுப்பு நிறைந்தது. புதிதாய் பேசும் ஆண்களுக்கு பெண் என்னும் பாலினம் கொடுக்கும் குறுகுறுப்பு இருக்கும். ஏற்கனவே பேசிப் பழகிய ஆண்களுக்கு முதல் குறுகுறுப்பே ஒவ்வொரு முறையும் தோன்றும்.
இணையவெளியில் chat என்கிற விஷயம் வந்த பிறகு, பெண்ணிடம் ஆண் பேசுவதில் ஏற்படும் குறுகுறுப்பின் பரவசம் பல மடங்காகிறது. அதே நேரத்தில் அத்தகைய chat-ல் ஏற்படும் சிக்கலும் அதிகமாகிறது.
சிக்கலற்று ஒரு பெண்ணிடம் இயல்பாக ஓர் ஆண் chat செய்ய முடியாதா? செய்யலாம். அதற்கு முதலில் ஆணுக்கு தெளிவு வேண்டும்.
எதற்கு chat செய்ய வேண்டும்? காதலுக்கா, காமத்துக்கா, நட்புக்கா, திருமணத்துக்கா, பின்பற்றுவதற்கா? காரணத்தை வரையறை செய்யுங்கள்.
காரணம் வரையறுத்துவிட்டால் பிறகு தெரிந்து கொள்ளுங்கள், உங்களால் பெண்ணுடன் பேச முடியாதென. ஏனெனில், காரணங்களை கொண்டு முயற்சி செய்வதற்கு பெண் ஒன்றும் வெல்லப்படுவதற்கான கோப்பை அல்ல.
'பேசுவது எப்படி' என்கிற சூழலில் சமூகம் ஆணை ஒரு கட்டம் வரை வைத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு பிறகு பெண்ணுடன் பேசுதல் என்பது இயல்பாகவே வாழ்வின் ஓட்டத்தில் அமைய வேண்டும்.
பெண்களிடம் பேசுவது என்கிற நிலை வருகையில் அனைவரையும் போலவே நானும் எப்படி பேசுவது என மருகியிருக்கிறேன். நல்லவேளையாக பெரியார், ஓஷோவெல்லாம் படிக்கத் தொடங்கியதால் பெண் ஒன்றும் அத்தனை பிரச்சினைக்குரியவ உயிர் அல்ல என்கிற புரிதல் உருவானது.
பெண்ணை இச்சமூகம் என்னவாக கட்டமைத்திருக்கிறது என்பதை பெரியார் ஒரு பக்கம் தூக்கிப் போட்டு உடைத்தபோது, காதல், காமம் போன்ற இச்சைகளெல்லாம் பெண்ணுடன் நமக்கு ஏற்படும் மிகச் சிறிய அனுபவம் என்றும் பெண் அவற்றையும் தாண்டியவள் எனவும் ஓஷோ மறுபக்கத்தில் எனக்குள் பர்னிச்சரை உடைத்தார்.
சமூகம் கட்டமைத்திருக்கும் பெண்ணை பற்றிய பிம்பமும் உங்களுக்கு அவள் மீது கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் உடையத் தொடங்கும். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்குகையில் உங்களோடு சேர்ந்து உங்களை போலவே கடுமையான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிற ஒரு சகஜீவி அவள் என்ற உண்மை புரிய வரும். அவளுக்கு உதவ முனைகையில் உங்களின் ஆண் நண்பர்கள் தொடங்கி, இச்சமூக மொத்தமும் பேசுகிற பேச்சை வைத்து பெண்ணை நாம் என்னவாக பார்க்கிறோம் என்கிற பேருண்மை முகத்தில் அறையும்.
திடீரென ஒருநாள், பூக்கள் கொட்டும் ஓர் அழகிய பொழுதில், ரம்மியமாய் வீசும் காற்றில், அழகாக மிதந்து வரும் அவளை பார்க்கும்போது, ஒரு மிகப்பெரும் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் முன் அவ்வளவு உயிர்ப்புடன் நிற்கும் அந்த பெண், சமூகத்தில் அவள் விரும்பாத இடத்தில் இருத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம் என்கிற தரிசனம்.
பிறகு அவளுடன் பேசத் தொடங்குவீர்கள்!