காதல் என்பது இயல்பான இணை தேடல்!
நான் உறவு கொள்வதற்கான ஒரு நபரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் என் உடலும் மனமும் விரும்பும் இயல்பான விஷயம். எந்த மயிலாவது தான் காதலிக்கும் மயிலை அடைய அப்பா மயிலிடம் அனுமதி கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அல்லது நாய், பூனை? எதுவும் கிடையாது. என்னுடைய உடலுக்கும் மனதுக்கும் ஈர்ப்பு ஏற்படுத்தக் கூடிய இணையை நானாக கண்டடைய வேண்டும். அதுவே என்னுடைய உயிர்ப்பு நிலைக்கான ஆதாரம். எனக்கான எல்லா விஷயத்தையும் ஒருவர் செய்து கொடுத்து விடுவார் என்றால் எனது வாழ்க்கை என்பது என்ன? என் மொத்த வாழ்க்கையையுமே யாரோ ஒருவர் கையைப் பிடித்து சிலேட்டில் எழுத கற்றுக் கொடுப்பது போல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தால் நானாக வாழ்வது எப்போது? எவருக்குமே நான் அடிமையாக இருக்க முடியாது என நான் விரும்பும்போது என்னுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் மட்டும் ஒருவருக்கு அடிமையாக கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?
அரைக் கோப்பை நீர் என்றாலும் உங்களின் உழைப்பிலும் தேடலும் கிடைத்தால் உங்களின் தாகம் பூர்த்தியாகும். மனமும் நிறைவு பெறும். இலவசமாக ஒரு பானை நீரே கிடைத்தாலும் உங்களின் தேடலில்லாத போது வயிற்றை நிரப்பி அசவுகரியம் கொடுப்பதாகவே அந்த நீர் இருக்கும்.
காதலுறவின் அடிப்படையே என்னுடைய விருப்பத்தை யாரின் தலையீடு இன்றி நானே சுயேச்சையாக தேர்ந்தெடுத்து அதற்கு என என் முழுமையையும் அர்ப்பணித்து அதன் விளைவு அனைத்துக்கும் நான் மட்டும் பொறுப்பாகிக் கொள்ளும் சுதந்திரம்தான். அந்த சுதந்திரம் கொடுக்கும் மமதை வேறு எந்த வகை உறவும் கொடுக்க முடியாது.
காதல் என்பது அவசியம்தானா?
பொதுவாகவே மனித இனத்துக்கு தனிமை உடன்பிறந்தது. இயற்கையிடமிருந்து விலகத் தொடங்கியதில் இருந்துதான் மனிதப் பரிணாமம் தொடங்கியது. பிற உயிர்களுக்கு இயற்கை தன்னுணர்வு கொடுத்திருந்தது. மனிதனுக்கு தன்னுணர்வு குறைவு. இயற்கையான தன்னுணர்வு இல்லாததால், இயற்கை அளித்திருந்த பாதுகாப்பு கவசம் மனிதனுக்கு கிடையாது. அதனால்தான் முடிந்த மட்டிலும் பெரிய சமூக இணைப்புகளை பாதுகாப்புக்காக மனிதன் கொண்டிருக்கிறான். நாடு, மொழி, சாதி, மதம், கடவுள், வர்க்கம் எனப் பலபல சமூக இணைப்புகளை உருவாக்கி வாழ்கிறான். ஆனாலும் அவனால் பாதுகாப்பு உணர்வை அடைந்துவிட முடியாது. ஏனெனில் இயற்கையிலிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட தனிமை அவனுக்கு பெரும் அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதனால் ஏதோவொரு அரவணைப்புக்கு எப்போதுமே ஏங்குபவன் மனிதன். அந்த ஏக்கம்தான் இயல்பான இனவிருத்திக்காக தேடும் இணை தேடலை கூட தன் தனிமை போக்குவதற்கான இணை தேடலாகவும் மனிதனை அணுக வைக்கிறது.
என்னுடைய விருப்பங்கள், வாழ்க்கை முதலியவற்றுக்கு உகந்த ஒரு பெண் அல்லது ஒரு ஆண் எனக்கென மட்டுமே தனியாக அதனால்தான் தேவைப்படுகிறார். தோள் சாய்ந்து அழ, நான் சிரித்து விளையாட, மடி சாய்ந்து நான் இளைப்பாற, என்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள, மரண நொடி வரை கைகோர்த்து என்னுடன் நடந்து வர, நான் என்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கவென எனக்கு ஒரு இணை தேவை என்கிற தேடலில் இருந்துதான் காதலை அடைகிறான் மனிதன். அதனால்தான் காதல் என்பது மனிதப் பரிணாமத்துக்கான தேவையாக இருக்கிறது. எந்தவித தலையீடும் இல்லாத சுயேச்சையான இணை தேர்வே மனிதப் பரிணாமத்தின் பூர்த்தியாகவும் இருக்கிறது.
மனிதன் பரிணாமம் அடையவே காரணமாக இருக்கும் காதலுணர்வை தடுப்பது இயற்கை நீதியை தடுப்பது போலாகும். நாம் வாழும் சமூகம் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள், பிற்போக்குத்தனங்கள், குடும்பங்களின் உணர்வுப்பூர்வ மிரட்டல்கள் என எது வந்த போதிலும் நமக்கான காதலுறவை வெல்வதில்தான் நம்மின் எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது.
நேற்றைய சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் குடும்பம், பண்பாடு போன்ற விஷயங்களிலிருந்து வெற்றிகரமாக முறித்துக் கொண்டு நாளை வரவிருக்கும் புதிய முற்போக்கு உலகின் பிரதிநிதிகளாக நாம் மாறுவதில்தான் மனித பரிணாமத்தின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. அங்குதான் ஆண், பெண் என்கிற இரு பாலினங்களுக்கான விடுதலையும் சமத்துவமும் அடங்கியிருக்கிறது.