சமூகதளங்களில் பலரைப் பார்க்கிறோம். நேரிலேயே கூட பலரிடம் பேசியிருக்கிறோம். பெண்கள், ஒடுக்கப்பட்டவர், மைனாரிட்டி என சமூக விஷயங்களிலும் சரி, பெர்சனல் விஷயங்களிலும் சரி நிறைய பேர் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். Politically correct ஆக இருக்கிறார்கள். எல்லாரும் எப்போதும் சரியாகவே இருப்பதை போல தோற்றம் தருகிறார்கள்.
பின் ஏன் நாட்டில் இத்தனை பிரச்சினை, வெறுப்பு, சிக்கல்கள்?
நல்லவர்களாக காண்பித்துக் கொள்ளும் அனைவரையும் neutral-கள் எனக் கொள்ளலாம்.
சந்தேகம் என்னவெனில், ஏன் இந்த neutral-களின் சிந்தனை ஒரு political force ஆக மாற முடியவில்லை?
1. ஊருக்கு வேஷம் போட்டு உள்ளுக்குள் அவர்களும் பிற்போக்காக இருக்கலாம்.
2. Apolitical என்ற மாயைக்குள் விழுந்தவர்களாக இருக்கலாம்.
3. முற்போக்குக்கு முன்னாடி தாக்கு பிடிக்க முடியாத, விரும்பாத சனாதனவாதிகளாக இருக்கலாம். 'துஷ்டனை கண்டால் தூர விலகு' types.
4. அரசியல் வேறு சமூகமும் வாழ்வும் வேறு என்ற சிந்தனை கொண்டவர்களாக இருக்கலாம்.
ஆனால் இவர்கள் சமூகத்துக்கேனும் நல்லவர்களாக இருக்க விரும்புபவர்கள். எதிர்தரப்பை போல் அல்ல. எதிர்தரப்பு சமூகத்துக்காக கூட நல்லவர்களாக இருக்க விரும்பாதவர்கள்.
எதிர்தரப்பினரே எண்ணிக்கையில் அதிகம் என வாதிடலாம். Neutrals எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கட்டும். ஆனால் ஏன் அரசியல் சக்தியாக பரிமளிக்க முடியவில்லை? ஒரு துக்கடா கட்சியாக கூட இல்லையே.
தற்போது நாட்டின் தலைமையில் இருப்பவர்கள் இந்த எதிர்தரப்பினர்தான். Neutral வகையறா கல்வியால் காயடிக்கப்பட்டவர்கள். பம்மியிருத்தல்தான் சிறந்த வாழ்க்கை என நம்புகிறார்கள்.
எதிர்தரப்பு தம் சிந்தனையில் நேர்மையாக இருக்கிறார்கள். Neutrals தம் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி ஏற்படுத்தி, அதனுள் போலித்தனத்தை நிரப்பி கொண்டு விட்டவர்கள். Neutral-கள், அவர்கள் அரசியலிலேயே அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள்.
விளைவு:
நிறைய உயிர்பலி நேர்கிறது. வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. வாழ்வில் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இல்லை. பிழைப்பதற்கு வழி இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கப் போவது எதிர்தரப்பு அல்ல. Neutrals! நடுநிலைகள்!
'கெட்டவனை விட ஆபத்தானவன் அநீதி நடப்பதை பார்த்தும் அமைதியாக இருக்கும் நல்லவன்' என சொல்வார்களே, அதைத்தான் கொஞ்சம் விரித்து எழுதி இருக்கிறேன்.
ஒன்று, இந்த Neutral-களை politicise பண்ணும் இயக்கங்கள் இல்லை. அல்லது இருக்கும் இயக்கங்கள், கட்சிகள் அனைத்திலும் இவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
ஆக, politicise ஆகாமல், எதிரியை போல அதிரடி ஆட்டத்துக்கு தயாராகாமல், சமூகத்தில் இயங்கும் எல்லாவற்றுக்கும் அடிப்படை, அரசியலே என்ற புரிதல் இல்லாமல் இன்னமும் இருந்தால், நிலை கைமிஞ்சிப் போவதை தவிர்க்க முடியாது.
யுத்த நேரத்தில் நடுநிலை என ஒன்று இருக்க முடியாது.