உணர்வோசை

Bully என்றால் என்ன? - அடாவடித்தனம் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

அடாவடித்தனம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் வன்முறை என்கிற வகைக்குள்ளேயே குறிக்கப்படுகிறது.

Bully என்றால் என்ன? - அடாவடித்தனம் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Bully என்றால் என்ன?

Bully என்கிற வார்த்தைக்கு அகராதி தரும் அர்த்தம், ’தன்னுடைய அதிகாரத்தை காட்டி வலு குறைந்த நபர்களை மிரட்டுவதோ தாக்குவதோ bully என அழைக்கப்படுகிறது.’

நம் வார்த்தைகளில் சொல்வதானால் அடாவடித்தனம் என சொல்லலாம்.

அடாவடித்தனத்தை சாதாரண விஷயமாக கடந்து சென்றுவிட முடியாது. அந்த இயல்புக்கு என ஒரு சமூகப் பின்னணி இருக்கிறது. மனநிலை இருக்கிறது. அது உருவாக்கும் விளைவுகளும் இருக்கிறது. அவற்றை ஆராய்கையில் அடாவடித்தனம் என்பது எத்தனை பிரச்சினைக்குரிய விஷயம் என புரியும்.

அமெரிக்காவில் இருக்கும் 12 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 21 சதவிகிதம் பேர் யாருடைய அடாவடித்தனத்துக்கோ உள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புக்குள் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே அடக்குமுறையை சந்தித்திருக்கிறார்கள்.

அடாவடித்தனம் என்கிற செயலுக்கு காரணமாக சில விஷயங்கள் சொல்லப்படுகிறது.

அடாவடித்தனம் செய்வதற்கு அதிகாரமும் வலிமையும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வலு, அவமானகரமான தகவல் போன்றவற்றை கொண்டு பிறரை அடக்குவதற்கான அடாவடித்தனம் நிகழ்த்தப்படும்.

அதிகாரம் பயன்படுத்தி ஒடுக்குமுறை நிகழ்த்த விரும்புபவர்கள் ஒரு சம்பவத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. அச்சம்பவத்தில் கிடைக்கும் மக்களின் அச்சத்துக்கு பழகி விடுகிறார்கள். பிறகு அதைத் தொடருகிறார்கள்.

அடாவடித்தனம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் வன்முறை என்கிற வகைக்குள்ளேயே குறிக்கப்படுகிறது.

இத்தகைய அடாவடித்தனம் நான்கு வடிவங்களிலும் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

முதல் வடிவம், வார்த்தை வடிவம். அவமானகரமான பெயர்களை குறிப்பிட்டு அழைப்பது, மிரட்டுவது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, அசிங்கப்படுத்தும் பேச்சு போன்றவை இந்த வடிவத்தில் வரும்.

இரண்டாம் வடிவம் சமூக வடிவம். ஒரு நபரை புறக்கணித்து வைக்கலாம். அவதூறு பரப்பலாம். பொது இடத்தில் வைத்து அசிங்கப்படுத்தலாம். அருவருப்பான கோபமூட்டும் செய்கைகள் செய்யலாம், ஒருவரின் பெயரை கெடுக்கலாம். இவை யாவும் சமூக ரீதியாக செய்யும் அடாவடித்தனங்கள் ஆகும்.

மூன்றாவது வடிவம், உடல்ரீதியாக அடாவடித்தனம் செய்யும் வடிவம். துப்புவது, தாக்குவது, கிள்ளுவது, ஒருவரின் உடைமைகளை உடைப்பது போன்றவை இந்த வடிவத்துக்குள் வரும்.

Bully என்றால் என்ன? - அடாவடித்தனம் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

நான்காவது வடிவம் இன்றையச் சூழலை பிரதிபலிக்கும் வடிவம். தொலைத்தொடர்பு வடிவம். இணையதளம் மற்றும் செல்ஃபோன் வழியாக அசிங்கமான குறுந்தகவல்கள், மிரட்டல் அழைப்புகள், கோபமூட்டும் வார்த்தைகள், போலியான படங்கள், புரளிகள் போன்றவை இந்த வடிவத்தில் வருகின்றன.

அடாவடித்தனத்துக்கு என சில குணங்களையும் வரையறுத்திருக்கிறார்கள்.

தனக்கு நேர்ந்த ஒரு தப்பான விஷயத்துக்காக அப்பாவி மக்களை பழி வாங்குவார்கள். பிறரை குறையாக பேசி தங்களின் மதிப்பை உயர்த்திக் காட்டுவார்கள். அவர்களுடைய அதிகார வளர்ச்சிக்கு போட்டியாக இருப்பவர்களை அசிங்கப்படுத்தியோ அவமானப்படுத்தியோ விலகிப் போக வைப்பார்கள். அவர்களின் கோபத்தையும் ஆவேசத்தையும் வலிமை குறைந்த மக்களிடம் காட்டி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். ஆளுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வார்கள். அறிவற்ற முறையில் பிறரை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தி விடுவார்கள். அவர்களின் பயத்தையும் பதற்றத்தையும் அடுத்தவர் மீது காட்டுவார்கள். பிறரை கீழ்மையாகப் பேசுவதில் சந்தோஷம் கொள்வார்கள்.

இத்தகைய அடாவடிக்காரர்களுக்கு மனோரீதியாகவே சில சிக்கல்கள் இருப்பதாகவும் மனவியல் கூறுகிறது. சமூகரீதியாக இயங்கும் தன்மை பெற்றிருக்காதவர்களாக அவர்கள் இருக்கலாம். மிரட்டல் முதலிய வழிகளுக்கு அவர்கள் செல்வதற்கு காரணம், வேறு எந்த வகையிலும் பிறரின் கவனத்தை அவர்களால் பெற முடியாதது இருக்கலாம். இருவகையான அடாவடிக்காரர்கள் உண்டு. சமூகத்துடன் ஒத்துப்போக முடியாதவர்கள், மன அழுத்தம், மனச்சோர்வு, தனிமை கொண்டவர்கள் ஒரு வகை. இந்த வகை அடாவடிக்காரர்கள் ஏதோவொரு காலத்தில் ஒரு அடாவடிக்கு உள்ளாகியிருப்பார்கள். அடாவடியால் அடாவடிக்காரர்களாக மாறியவர்கள் இந்த வகை. இன்னொரு வகை இயல்பிலேயே அடாவடித்தனம் கொண்டிருப்பார்கள். பிற அடாவடிக்காரர்களிடம் இவர்கள் சிக்க மாட்டார்கள். அடாவடிக்காரர்களாக இருப்பதன் பலன்கள் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். பல நேரங்களில் இத்தகைய அடாவடிக்காரர்கள் மிகுந்த தைரியமும் நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களை பற்றி மிகப் பெரியளவில் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அடிப்படையில் அடாவடிக்காரர்களுக்கு என்னதான் பிரச்சினை?

சமீபத்திய ஆய்வுகள் முக்கியமான ஒரு விஷயத்தை பதிலாக தருகின்றன. அடாவடிக்காரர்களுக்கு தார்மீக நியாயவுணர்ச்சி இருக்காது என்கிறார்கள். தான் செய்த விஷயங்களின் விளைவுகளை கொண்டு தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் அடாவடித்தனத்தை நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருப்பார்கள். சக குழந்தைகளிடம் அடாவடித்தனம் குழந்தைகள் பின்னாளில் சமூக விரோத சக்தியாக மாறும் வாய்ப்புகளும் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான அடாவடிக்காரர்கள் அகங்காரம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நேர்ந்த நன்மைகளுக்கான காரணமாகவும் அகங்காரத்தையே அவர்கள் குறிப்பிடுவார்கள்.

ஓர் அடாவடிக்காரனின் அகங்காரத்தை காப்பாற்ற அவன் தன் அதிகாரத்தை எளிய மனிதர்களிடமே செலுத்துகிறான். அந்த எளிய மனிதர்கள் நாம் அன்றாடம் காணும் நம் சக மனிதர்கள்தான்.

ஓர் அடாவடிக்காரன் இச்சமூகத்தில் வளர்வதில் ஒரு முக்கியமான நிஜம் இருக்கிறது. என்ன தெரியுமா? அவனுடைய வளர்ச்சியில் நம்முடைய பங்கும் இருக்கிறது. நம் சக மனிதர் ஒருவர் அடாவடித்தனத்தால் பாதிக்கப்படும்போது நாம் என்ன செய்கிறோம் எனப் பாருங்கள். அத்தகைய சமயங்கள் அனைத்திலும் நாம் என்ன செய்திருப்போம் என சற்று யோசித்து பாருங்கள். அமைதி காத்திருப்போம். கண்டும் காணாமல் நடந்திருப்போம். நமக்கேன் வம்பு என தலை திருப்பி சென்றிருப்போம்.

நம் அமைதியே எந்தவொரு அடாவடியும் இச்சமூகத்தில் வேரூன்றிட நிலமாக அமைகிறது.

banner

Related Stories

Related Stories