Dune ஆங்கிலப் படத்தின் கதை, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் குறிப்பதை போல் தோன்றுகிறதா?அதற்குக் காரணம் இருக்கிறது.
கதையின்படி அராகிஸ் கிரகத்தை பேரரசர் ஷதாம் ஆக்கிரமிக்க விரும்புவதற்கு காரணம் அது கொண்டிருக்கும் வளம். ஸ்பைஸ் (Spice) என்பதே அந்த வளம். படத்தில் மினிமினுப்பான துகளாக spice காட்டப்பட்டாலும் அந்த வார்த்தையைக் கேட்டதும் இந்தியாவில் பிறந்த நமக்கு வரலாற்றுப் புத்தகங்களில் அந்த வார்த்தையைப் படித்த ஞாபகம் வராமலிருக்க முடியாது.
இந்தியாவைப் பல நூறு வருடங்கள் ஆண்ட பிரிட்டிஷ் முதன்முதலாக இந்தியாவுக்கு வந்தது நாம் கொண்டிருந்த மசாலாப் பொருட்களுக்காகவே. மசாலாப் பொருட்களுக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர்தான் Spice. உணவுக்கு ருசி சேர்க்கும் பொருட்களைக் கொண்டு சென்று உலகம் முழுவதும் வணிகம் செய்து லாபமீட்டவே இந்திய ஒன்றியத்தை காலனியாக்கும் பணி தொடங்கியது. எனவே படத்தில் அந்த வார்த்தை குறிப்பிடப்படுகையில் நமக்குள் பொறி தட்டுவதில் ஆச்சரியம் கிடையாது.
போலவே Dune என்ற வார்த்தைக்கு மணற்குன்று என அர்த்தம். மணற்குன்றுகள் அதிகமாக பாலைவனங்களில் இருக்கும். பாலைவனங்களுக்கு பெயர் பெற்ற இடம் மத்திய கிழக்கு நாடுகள். அன்றைய பிரிட்டிஷார் போல் இன்றைய அமெரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அன்று தேவைக்குரிய வளமாக Spice இருந்தது போல் இன்று எண்ணெய் இருக்கிறது. எண்ணெய், மத்தியக் கிழக்கு நாடுகளில்தான் அதிகம் இருக்கிறது.
எனவே Dune படத்தை எளிதாக ஏகாதிபத்திய, காலனியாதிக்க எதிர்ப்புப் படமாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
Dune மட்டுமல்ல, பல ஆங்கிலத் திரைப்படங்கள் உருவகப் படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. Lord of the Rings படம் இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உருவகக்கதை. பெரும் வெற்றி அடைந்த Avatar படம் கொண்டிருக்கும் உருவகம் தெளிவாக புலப்படவல்லது. பூர்வக்குடிகளை வேட்டையாடி அவர்களின் வளங்களை கொள்ளையடிக்க முயலும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை சாடுவதாக அவதார் படம் அமைக்கப்பட்டிருக்கும். அப்படத்தின் திரைக்கதைக்குள் ஈராக் நாட்டின் மீதான தாக்குதல் தொடங்கி, ஆப்பிரிக்கக் கண்டம் சூறையாடப்பட்ட வரலாறு வரை ஏகாதிபத்தியங்களின் கொட்டம் எதை வேண்டுமானாலும் எளிதாகப் பொருத்திவிட முடியும்.
Dune நாவலை எழுதியவரின் பெயர் ப்ராங்க் ஹெர்பர்ட். அடிப்படையில் பெரும் அரசுகளுக்கு ஹெர்பர்ட் ஆதரவானவர் இல்லை. கார்ல் யங் முதலிய மனோதத்துவ நிபுணர்களை ஆதரிப்பவர். பவுத்தத்தின் ஜென் மரபில் ஈடுபாடு கொண்டவர். Dune நாவலை அவர் பிரசுரித்தது 1965ஆம் ஆண்டில். இயல்பாகவே அப்போதையே அரசியல் சூழல் வேறாக இருந்தது. அன்று மத்தியக் கிழக்கு நாடுகளின் அரசியலோ எண்ணெய்ப் பிரச்சினையோ இருந்ததென்றாலும் இன்றைய அளவில் இருக்கவில்லை. ஆனால் வேறொரு முக்கியப் பிரச்சினை இருந்தது.
வியட்நாம் போர்!
வியட்நாம் போரில் அமெரிக்கா ஈடுபட்டதில் அமெரிக்கர்களுக்கே ஒப்புதல் இல்லை. அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்து அமெரிக்கர்களோ போராடிய காலகட்டமாக அது இருந்தது. வியட்நாம் நாட்டுக்குள் அமெரிக்கா தலையிட்டதற்கு அடிப்படைக் காரணங்களாக அதிகாரப் போட்டி, ஏகாதிபத்தியம் முதலியவை இருந்தன. அந்தச் சூழலில்தான் ஹெர்பர்ட் நாவலை எழுதினார்.
Dune நாவல் வரிசையில் மொத்தம் ஐந்து நாவல்களை எழுதினார் ஃப்ராங்க் ஹெர்பர்ட். 1986ஆம் ஆண்டில் அவர் இறந்ததற்குப் பிறகு, அவரின் மகனான கெவின் ஆண்டர்சர்ன், Dune நாவல் வரிசையை தொடர்ந்து எழுதிப் பதிப்பிக்கத் தொடங்கினார். 90களுக்குப் பின்னான அந்த வரிசை இயல்பாகவே அந்தக் காலகட்டத்தில் நடந்த வளைகுடாப் போர் முதலிய சூழல்களில் நேர்ந்ததால் மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெயை சுரண்ட முனைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உள்ளடக்கியதாக மாறியது. 9/11 வர்த்தக் கட்டட தகர்ப்பு போலவே அராகிஸ்ஸுக்கு வந்து இறங்கும் அட்ரெயிடிஸ் குழுவும் ராணுவமும் தாக்கப்படுவதை அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதத்தில் நாம் உணர முடியும்.
காலப்போக்கில் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் ஆடிய ஆட்டத்தின் விளைவாக சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகத் தொடங்கி, தற்போது மனித குலமே அழியும் என்கிற கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் சுற்றுச்சூழல் அரசியலும் கதையின் உள்ளீடாக்கப்பட்டிருக்கிறது.
எனவே அடிப்படையில் Dune நாவலும் படமும் காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிரான ஓர் உருவகப் புனைவாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் அரசியலும் அவையாகவே இருக்கின்றன.
ஆனாலும் பாருங்கள் இத்தகைய ஓர் ஒடுக்குமுறை, ஆதிக்கம், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுக்கப் போகும் மீட்பர் (The One), அதே ஆதிக்கக் கூட்டத்திலிருந்து வருவதாகவே காட்டப்படுகிறார். Fremen பூர்வக்குடியிலிருந்து அவர் வரப்போவதில்லை. ஆதிக்கத்திலிருந்து விடுதலையாக இருந்தாலும் ஆதிக்கக் கூட்டத்தைச் சேர்ந்தவரே வாங்கிக் கொடுப்பார் என்கிற உயர்ச்சி நிலையிலிருந்து விளையும் தன்மை இது.
என்னதான் உருவகமாக நியாயத்தைப் பேசினாலும் கொண்டை மட்டும் மறைய மறுக்கிறது!