உலகின் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பெருமளவுக்கான முடிகள் உலகின் முதல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாம் கண்டறிய முடியாத அளவுக்கான ஒரு பெரும் சந்தை முடிகளுக்கு மட்டுமே என உலகம் முழுக்க ரத்தமும் சதையுமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீளமான வளைவற்ற நேரான முடிகள் வேண்டுமென்பதற்காக செலவழிக்கப்படும் பணம் மிக அதிகம். மேலும் அந்த போலி முடிகளும் அவற்றை பராமரிக்கவென பயன்படுத்தப்படும் க்ரீம்களும் உடல்நலத்தை பாதிக்கவல்லவை. ஆனாலும் இவை எதுவும் முடிகளின் ஏற்றுமதியையோ சந்தையையோ எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அமெரிக்கா சொல்லும் அழகு இலக்கணப்படி இந்திய முடிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அடர்த்தியாகவும் கருமையாகவும் லேசான வளைவுகளையும் கொண்டிருக்கும் இந்திய முடியின் தன்மைக்கு, போலி முடி நிறுவனங்களில் பெருமதிப்பு உண்டு. அவற்றிலும் பல விதங்களில் மதிப்பை கொடுக்கிறார்கள். போலி முடி சந்தையில் ஒரு பெயர் சொல்லுகிறார்கள். வெர்ஜின் ஹேர்! பரிசுத்தமான முடி என மொழிபெயர்க்கலாம். இத்தகைய முடிகளை அடைவதற்கென சில முறைகளையும் சொல்கிறார்கள். நகர்ப்புற பெண்கள் தங்களின் தலை முடிகளுக்கு நிறம் பூசுகிறார்கள். நேர்ப்படுத்துகிறார்கள். இன்னும் பலவகை அழகுமுறைகளை பயன்படுத்துகிறார்கள். ஆதலால் அந்த முடிகளில் இயற்கை அழகு இருப்பதில்லையாம். கிராமங்களில் இருப்போரின் தலைமுடிகள் இத்தகைய போலி அழகுப்பூச்சுகள் செய்யப்படாதவையாம். ஆதலால் தலைமுடிச் சந்தையில் இந்திய கிராமங்களில் கிடைக்கும் முடிகளுக்கென தனி மதிப்பு இருக்கிறது. இந்திய கிராமங்கள் பலவற்றில் முடி சேகரிப்பாளர்கள் நாமறியாமல் இன்றும் முடிகளை சேகரிக்க சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல பெண்கள், இளம்பெண்கள் கூட தங்களுடைய தலைகளை இவர்களுக்கெனவே மொட்டை அடித்து முடி கொடுத்து பணம் பெறுகிற வழக்கம் இருக்கிறது.
கோவில்களில் குவியும் முடிகள் எல்லாம் சேமிக்கப்பட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படுகின்றன. நேரடி ஏலங்களையும் தாண்டி இணையவழி ஏலம் வரை இன்று இந்திய முடிகளின் வணிகம் விரிந்திருக்கிறது. ஒரு வருடத்துக்கு முடிகளின் ஏலத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை கோயில்களுக்கு வருமானம் கிடைக்கும் நிலையில் முடிகளின் வர்த்தகம் இருக்கிறது. கோவில்களில் மட்டுமா முடிகளை இழக்கிறோம்? இல்லை. சலூன் கடைகளிலும் இழக்கிறோம்.
இவற்றையெல்லாம் முழுமையான முடிகள் என நிறுவனங்கள் வகைப்படுத்துகின்றன. ஆனால் நாம் அனுதினமும் வீடுகளில் தலைசீவுகையில் முடி சிக்கி, சிரமப்பட்டு சிக்கலை நீக்கி, சீவும்போது உடைந்து உதிர்ந்துவிடுகிற முடிகள் இருக்கிறதல்லவா? அவற்றுக்கும் சந்தையில் மதிப்பு இருக்கிறது. முடி சேகரிப்பாளர்களால் இந்த முடிகள் சேகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்பவர்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது. உயர்தரமான முழுமையான முடிகளின் விலை ஒரு கிலோவுக்கு 4,000 ரூபாயில் தொடங்கி 2,5000 ரூபாய் வரை போகும். இத்தகைய உடைந்த முடிகளின் விலை ஒரு கிலோவுக்கு 4 ரூபாய் வரை வாங்கப்படுகிறது.
இங்கிலாந்து மட்டும் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடிகளை இறக்குமதி செய்கிறது. அந்த முடியின் அளவு என்ன இருக்கும் என தெரியுமா? ஒரு பேச்சுக்கு என கணக்கெடுத்தால் 8 கோடி மைல்கள் நீளமுள்ள தலைமுடி ஒவ்வொரு ஆண்டும் அங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் தலைகளில் இருக்கக்கூடிய முடிகள் அவை. அதாவது குறைந்தபட்சமாக 20 லட்சம் பேராவது ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் அலங்காரத் தலைமுடி தயாரிக்கவென உலகின் பல இடங்களில் மொட்டை அடிக்கப்படுகிறார்கள். உலகை 3200 தடவை சுற்றி வந்துவிடக் கூடிய அளவு நீளமுள்ள முடி. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தலைமுடி இறக்குமதியில் இங்கிலாந்து இருக்கிறது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் தலைமுடிக்கு இங்கிலாந்தில் வணிகம் அதிகம்.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நாம் காணத் தவறும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. தலைமுடியை உலகம் முழுவதும் அடையாளப்படுத்துவதில் உருவாகியிருக்கும் மேலாதிக்கம்!
உலக நாடுகள் பலவற்றிலும் பலவகை முடிகள் இருக்கின்றன. அவரவர் இனத்துக்கென இருக்கும் நம்பிக்கை, பாரம்பரியம், கலாசாரம், பழக்க வழக்கம் போன்றவற்றின்பால் பலவகை அலங்காரங்களுடன் முடிகளை வளர்க்கின்றனர். அவற்றில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை நாம் மறுக்க முடியாது. அவரவர் வழக்கம் மற்றும் வாழ்க்கைச்சூழல்களை நாம் மதிப்பதற்கான அடையாளம் அதுவே. ஆனால் உலக மக்களின் பலதரப்பட்ட தலைமுடி அலங்காரங்கள் அழிக்கப்பட்டு அமெரிக்கா சொல்லும் சிகை அலங்காரத்தையே தூக்கிப் பிடிக்கும் சூழல் இன்றிருக்கிறது. Dreadlocks போன்ற ஒவ்வொரு இனத்துக்கு மட்டுமே ஆன அடையாளங்கள் திருடப்பட்டு, நேர் செய்யப்பட்டு, பொதுவான அடையாளம் என்கிற பெயரில் அமெரிக்க அடையாளத்துடன் விற்கப்படுகிறது.
நன்றாக கவனித்துப் பாருங்கள். இன்று நாம் ஒரு சலூன் கடைக்கு சென்று முடிவெட்டவென நாம் தேர்ந்தெடுக்கும் சிகை அலங்காரம் என்னவாக இருக்கிறது? ஏதோவொரு படத்தில் வந்த சிகையலங்காரமாக இருக்கும். அல்லது ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்த சிகை அலங்காரமாக இருக்கும். இவை இரண்டுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சொல்லும் சிகை அலங்காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஓர் அமெரிக்கனை போல், ஐரோப்பியனை போல் சிகை அலங்காரம் வைத்துக் கொள்வதில் ஒன்றும் பிரச்சினை கிடையாது. அதை நாம் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் சிகை அலங்காரத்துக்கு பின்னால் ஓர் இனத்தின் மேலாதிக்கம் நம் கண்களுக்கு தெரியாத வணிகச் சங்கிலியின் வழியாக கட்டமைக்கப்பட்டு நம் வாழ்க்கைகளில் திணிக்கப்பட்டு, அதற்கான பலிகடாக்களாக நம் சக மக்களே ஆக்கப்படும்போது நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கலாமா?
ஓர் இனத்து மக்களின் வாழ்க்கை அடையாளத்தை அழிப்பதென்பது அவர்களின் வாழ்க்கைகளையே அழிப்பதற்கு சமமான விஷயம். தலைமுடியில் தொடங்கி இனங்களின் வரலாறு வரை உலகம் முழுவதும் நடந்து வரும் அழித்தொழிப்பு நடவடிக்கையை நாகரிகமாக பார்க்க முடியாது. பெரும் அழித்தல் வேலையாக மட்டுமே பார்க்க முடியும்.
தலைமுடி வரை வரும் அடையாள அழிப்பு, தலைக்கு வரும் நாள் வெகு தூரத்திலும் இருக்க முடியாது.