உணர்வோசை

“அன்று இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்..” : பெரியாரை நினைவுகூர்ந்த எழுத்தாளர் நக்கீரன் !

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சீர்திருத்த திருமணம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இவ்விடத்தில்தான் பெரியார் – அண்ணாவின் பணியை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

“அன்று இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்..” :  பெரியாரை நினைவுகூர்ந்த எழுத்தாளர் நக்கீரன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

யாருக்கும் தெரியாமல் இரகசியத் திருமணம் செய்துகொண்டு ”பச்சை நிறமே… பச்சை நிறமே” என்று பாடித் திரிந்த மணிரத்தினத்தின் திரைப்பட இணையர்களுக்கு, ஊரறிய திருமணம் செய்தும் சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் பாதுகாப்பின்றி வாழ்ந்த ஒரு தலைமுறையைப் பற்றித் தெரியாது. இன்று இந்த நாயகன் – நாயகி போன்றோருக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்துக்கு யார் காரணம் என்பதை மணிரத்தினம் வகையறாக்களும் சொல்லித்தர மாட்டார்கள்.

1963 இல் நடந்த என் பெற்றோரின் திருமணம் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற ஒரு சீர்திருத்தத் திருமணமாகும். ஆனால், அப்போது அத்திருமணத்துக்குச் சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது. 1928 இல் பெரியார் நடத்தி வைத்த முதல் சீர்திருத்த திருமணம் தொடங்கி அவ்வாறு மணம் முடித்த பல இணையர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் சட்டரீதியான பாதுகாப்பு இருந்ததில்லை. திராவிட இயக்கத்தின் எழுச்சியின் காரணமாக அண்ணா முதல்வராகப் பதவியேற்ற பிறகே இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுச் சீர்திருத்த திருமணச் சட்டம் 20-01-1968 இல் அரசிதழில் வெளியிடப்பட்டுச் சட்ட வடிவமாக்கப்படுகிறது.

முதலில் இந்து திருமணச் சட்டம் என்னவென்று அறிந்தால்தான் இதன் வெற்றியைப் புரிந்துகொள்ள முடியும். இந்து திருமணத்துக்கு இரு முதன்மை சடங்குகள் அவசியம் என்று நீதிமன்றங்களே கூறியுள்ளன. அந்தச் சடங்குகளுள் ஒன்று, ‘விவாக ஹோமம்’, மற்றொன்று ‘சப்தபதி’. அதாவது புனித வேள்வியே விவாக ஹோமம். தீ வளர்த்து மணமக்கள் அதைச் சுற்றி ஏழு அடிகள் வைத்து நடப்பதே சப்தபதி. இவ்விரு சடங்குகளும் நடைபெறாத எத்தனையோ திருமணங்கள் சட்டரீதியானவை அல்ல என்று இந்திய ஒன்றியத்தின் பல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன.

“அன்று இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்..” :  பெரியாரை நினைவுகூர்ந்த எழுத்தாளர் நக்கீரன் !

பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வரும் இந்திய ஒன்றியத்தில் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் என்று தனித்தனியே சடங்கு முறைகள் உண்டு. ஆனால், “குறிப்பிட்ட ஒரு உயர் சாதி மக்களிடம் மட்டுமே நிலவி வந்த சடங்குகளை அனைத்து மக்களின் மீதும் திணிப்பதன் வழி நீதிமன்றமானது ஒரு பன்முகச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் சமசீர்மை என்ற அபத்த கருத்துக்குள் முழுவதுமாக அடக்கி விடுகிறது” என்று குற்றம் சாட்டுகிறார் சமூகவியலாளரும் பெண்ணியவாதியுமான பிளேவியா அக்னீஸ்.

இதற்குச் சான்றாக அன்றைய பம்பாயில் நவ புத்தமுறைப்படி நடந்த திருமணம் வழக்கு ஒன்றை அவர் எடுத்துக்காட்டுகிறார். (சகுந்தலா X நில்காந்த் AIR (1973) LJ310) இத்தனைக்கும் இத்திருமணம் தமிழ்நாட்டில் சீர்த்திருத்த திருமணச் சட்டம் நிறைவேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு நடைப்பெற்ற வழக்காகும். 1973 இல் நடந்த இந்தப் புதிய புத்த முறை திருமணம் எப்படி நடைப்பெற்றது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மண்டபத்தில் மணமக்கள் எதிரும் புதிருமாக அமர்ந்து புத்தனின் பெயரால் சத்தியம் செய்த பின்பு மாலைகளையும் ஆடைகளையும் மாற்றிக் கொண்டுள்ளனர். இதற்குப் பின்பு ஒரு விருந்தும் நடைப்பெற்றது. இது ஏறக்குறைய பெரியார் நடத்திய சீர்திருத்த திருமண முறையில் அமைந்திருப்பதை நோக்கலாம். அங்கு இம்முறையில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைப்பெற்றுள்ளன.

“அன்று இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்..” :  பெரியாரை நினைவுகூர்ந்த எழுத்தாளர் நக்கீரன் !

ஆனால், இத்திருமண வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றபோது பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான மஸ்டாக்கர் தனது தீர்ப்பில் “… இந்துக்களைப் பொறுத்தமட்டில் திருமணம் என்பது ஓர் உடன்படிக்கையோ, ஒப்பந்தமோ அல்ல (இந்து திருமணச் சட்டபடி இந்துக்கள் என்ற பிரிவில்தான் பவுத்தர்களும் அடங்குவர்). மாறாக, அது இரு ஆன்மாக்களின் ஆன்மீக இணைப்பாகும். ஹோமம் மற்றும் சப்தபதி சடங்களுக்கு முன்பு இறைவனை வேண்டுவதும் திருமணத்திற்கு ஒரு அடிப்படை தேவையாகும்” என்றார்.

எனவே, ஹோமம், சப்தபதி சடங்குகள் நடந்திராத இத்திருமணம் செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல இனக்குழுவினரின் திருமணச் சடங்குகளில் இவை இரண்டும் இடம்பெறுவதில்லை என்பதை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ‘வாழ்க்கை ஒப்பந்த விழா’ என்ற பெயரில்தான் சீர்திருத்த திருமணங்களே நடைபெறும் நிலையில் திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல என்கிற நீதியரசரின் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

அதே திருமணம் அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் அந்த நீதியரசர் இத்தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இவ்விடத்தில்தான் பெரியார் – அண்ணாவின் பணியை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக, சட்டபூர்வமற்ற (illeagal) வாரிசுகளாக கருதப்படும் அபாயத்திலிருந்து தப்பித்திருக்கும் என்னைப் போன்ற வாரிசுகளுக்கே அதன் வலி புரியும். . .

- எழுத்தாளர் நக்கீரன்.

banner

Related Stories

Related Stories