உணர்வோசை

மண்டை ஓட்டின் பின்பகுதியில் முளைக்கும் எலும்பு.. காரணம் என்ன தெரியுமா?- ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நம் மண்டை ஓடுகளின் பிற்பகுதியில் சிறியதாக ஒரு முனை உருவாகி வளரத் துவங்கியிருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மண்டை ஓட்டின் பின்பகுதியில் முளைக்கும் எலும்பு.. காரணம் என்ன தெரியுமா?- ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஸ்மார்ட்ஃபோன்கள், உண்மையிலேயே ஸ்மார்ட்தானா?

ஆஸ்திரேலியாவில் Sunshine Coast பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை நடத்தியது. 18 வயதிலிருந்து 86 வயது வரையிலான மக்கள் பலரின் மண்டை ஓடுகளின் மருத்துவப் படங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒரு முக்கியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது.

நம் மண்டை ஓடுகளின் பிற்பகுதியில் சிறியதாக ஒரு முனை உருவாகி வளரத் துவங்கியிருக்கிறது.

20 வருடங்களாக மருத்துவத்துறையில் இருக்கும் ஆய்வின் தலைமை மருத்துவர் David Shahar கடந்த பத்து வருடங்களில்தான் இது போன்றதொரு வளர்ச்சியை நோயாளிகளிடம் அதிகம் காண்பதாகச் சொல்கிறார். மண்டை ஓட்டு எலும்பு வளர்வதற்கு அடிப்படை காரணமாக அவர் சொல்வது என்ன தெரியுமா?

மிக அதிக நேரத்துக்கு இன்றைய இளைஞர்கள் தலையை கவிழ்த்தபடியே அமர்ந்திருப்பதுதான் காரணம்!

உடலில் குறைவாக பயன்படுத்தப்படும் பகுதிகள் திடீரென அதிகமாக பயன்படுத்தப்படுகையில் மாற்றங்களைப் பெறுவது இயற்கை. பல மணி நேரங்களாக தலையை குனிந்துகொண்டு ஸ்மார்ட்ஃபோன்களை பார்த்துக் கொண்டிருப்பது அதற்கு தொடர்பான உடல்பகுதியில் மாற்றத்தை கொண்டு வரும் நிலையை உருவாக்கும். குறிப்பாக, மண்டை ஓட்டுக்கு பின்புறத்துடன் கழுத்தை இணைக்கும் தசைப்பகுதி அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அங்கு மாற்றம் நேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. விளைவாக, அங்கிருக்கும் தசைப்பகுதி வளர்கிறது. வலுவடைகிறது. அந்த வளர்ச்சியையும் வலுவையும் தாங்கும் வகையில் புதிதாக எலும்பு முளை விடத் தொடங்கியிருக்கிறது.

அதாவது மனிதன் உருவான இத்தனை லட்சம் ஆண்டுகளில் முக்கியமான உருமாற்றத்தை அவன் அடைகிறான்! இது சாதாரண விஷயம் அல்ல!

2017ம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு நபரும் ஒரு வாரத்தில் சராசரியாக 24 மணி நேரத்தை ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பதில் செலவழிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். சராசரியாக ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒருமுறை நாம் செல்ஃபோன்களை பார்க்கிறோம். தொடர்ச்சியாக கொடுக்கப்படும் வேலைகளின் அழுத்தம் திசுக்களை புதுச்சூழலுக்கு தகவமையச் செய்கின்றன என்கிறார் ஷாஹர்.

கனடா நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் ஒரு முக்கியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. 2000 பேரை ஆய்வு செய்ததில், கவனம் மனிதனுக்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2000மாவது வருடத்தில் ஒரு மனிதனின் தொடர் கவனம் சராசரியாக 12 நொடிகளுக்கு இருந்தன. அதாவது நீங்கள் எந்த ஒரு விஷயத்தை கவனித்தாலும் அதை உள்வாங்க 12 நொடிகளை எடுத்துக் கொள்கிறீர்கள். அந்த கால அளவே கவனக்குறைவு என விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவும் குறைந்திருக்கிறது. எந்தவொரு விஷயத்தை கவனிக்கவும் நாம் வெறும் 8 நொடிகளை மட்டுமே செலவிடுகிறோம்.

மண்டை ஓட்டின் பின்பகுதியில் முளைக்கும் எலும்பு.. காரணம் என்ன தெரியுமா?- ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இது மட்டுமல்ல! மெலட்டனின் என்கிற ஹார்மோன் இரவு நேரத்தில் மட்டுமே சுரக்கக் கூடியது. இரவு 9 மணி அளவுக்கு சுரப்பு தொடங்கும். உடலின் விழிப்பு குறையும். தூக்கத்துக்கான அழைப்பு வரும். இரவை கணித்து சுரந்து உறக்கத்தை வரவைக்கும் சுரப்பியின் இயக்கம், இரவு நேரத்தில் நாம் செல்ஃபோனில் பார்க்கும் வெளிச்சத்தால் கணிசமான அளவுக்கு குறைக்கப்படுகிறது. விளைவு? தூங்க நேரமாகும். விடியற்காலையில் தூங்கத் தொடங்குவோம். முற்பகல் வரை தூங்கி வழிவோம். நாளின் அலுவலால் அவசர அவசரமாக தூக்கத்தை களைந்து எழுவோம். சரியான தூக்கம் கிடைக்காமலே தொடர்வோம். தூக்கமின்மை தலைவலியை கொடுக்கும். அதிலிருந்தும் வெளியேற வழியின்றி, தூக்கமும் கண்களை பிசைய, நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்போம்.

ஸ்மார்ட்ஃபோன் தட்டையான ஒரு சாதனம். அதன் தொடுதிரை எதுவும் பேசுவதில்லை. நீங்களாக விருப்பப்பட்டு ஒரு காணொளியை ஓட விட்டால் மட்டுமே பேசும். அதன் இயக்கம் முழுக்க உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் விரும்பினால் படிப்பீர்கள். இல்லையெனில் வேறு செயலிக்கு மாறுவீர்கள். ஒரு காணொளி பார்ப்பீர்கள். ஒரு குறுந்தகவல் பார்த்தால் உடனே அதற்கு தாவுவீர்கள். எந்த ஒரு நடவடிக்கையிலும் உங்களுடைய முழு கவனம் இருக்காது. உங்களின் சிந்தனைமுறையே மிக மேலோட்டமானதாக மாறும். இந்த எல்லா தன்மைகளையும் உங்களின் வாழ்க்கைக்கு பொருத்திப் பாருங்கள்.

எந்த மனிதர் பேசுவதும் முழுமையாக உங்களின் மனதுக்குள் இறங்காது. அது அந்த நேரத்தில் வேறு விஷயங்களையும் செய்தபடி இருக்கும். உடனடியாக வேறு ஒரு செயலிக்கு மாறுவதுபோல் உங்களால் மனிதரை மாற்ற முடியாது. ஆகையால், அவரைப் பேச விட்டுவிட்டு, உங்கள் மனதில் நீங்கள் வேறு விஷயங்களை ஓட்டிக் கொண்டிருப்பீர்கள். அந்த மனிதர் பேசும் விஷயம் ஏதேனும் உங்களின் உள்ளே போகுமா என பார்த்தால் எதுவும் போயிருக்காது. ஸ்மார்ட்ஃபோனின் தொடுதிரை எத்தனை தட்டையாக இருக்கிறதோ அதே அளவுக்கான தட்டையோடுதான் சமூகம் உங்களுக்கு இருக்கும். அதிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ள நீங்கள் விரும்ப மாட்டீர்கள். முயற்சியும் செய்ய மாட்டீர்கள். ஆனால் அவற்றில் நேரும் விஷயங்களுக்கு மட்டும் எதிர்வினை ஆற்றுவீர்கள். உங்களின் ஸ்மார்ட்ஃபோனில் ஒரு காணொளியை காணும்போது நீங்கள் அடையும் உணர்வு நிலைகள் போல்!

இருபது வருட ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்ப வளர்ச்சி இரண்டு வகை மனிதர்களை ஒரே காலகட்டத்தில் நிறுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்ஃபோனை உடலின் அங்கமென நினைப்பவர்கள், ஸ்மார்ட்ஃபோன்களின் மீது பெரிய விருப்பம் இல்லாதவர்கள். இந்த இரண்டு வகைக்கு இடையில்தாம் உறவு, வாழ்க்கை, புரிதல், உலகம் எல்லாமும் இருப்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். பெரும் துயர நாடகம் ஒன்று அரங்கேறுவது தெரியும்!

banner

Related Stories

Related Stories