தென்னகத்தின் சின்னஞ்சிறு மாநிலம் புதுச்சேரி. மொத்தமே 10 லட்சம் வாக்காளர்கள். 30 சட்டமன்ற தொகுதிகள். 1954 ஆம் ஆண்டு இந்திய-பிரெஞ்சு ஒப்பந்தப்படி இணைக்கப்பட்ட புதுச்சேரி, சட்டமன்றத்துடன் கூடிய தன்னாட்சி அந்தஸ்து பெற்ற யூனியன் பிரதேசமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது. இதையெடுத்து அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த கிரண்பேடி நியமிக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதிகளின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக கடந்த 5 ஆண்டும் அவர் நடந்து கொண்டதன் விளைவு, மக்கள் நலத்திட்டங்கள் தடைபெற்றன.
மத்தியில் ஆளும் மோடி அரசு, தங்களின் கைப்பாவையாக கிரண்பேடியை வைத்துக் கொண்டு காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் தடுத்தனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு 15 நாள்களுக்கு முன்னதாக புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் திடீரென பா.ஜ.க.,வில் சேருகிறார். இதையெடுத்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா செய்கிறார். 2 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதற்கு அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகரும் உடந்தையாக இருக்கிறார். விளைவு போதிய பலமின்றி காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது.
இருக்கின்ற 15 நாட்களுக்கு முதல்வர் ஆகலாம் வாங்க... என்று அம்மாநில எதிர்கட்சித் தலைவரான ரங்கசாமியை அழைத்துக் கொண்டு பா.ஜ.க., தனது கைப்பாவை கட்சியான அ.தி.மு.க.,வையும் சேர்த்துக் கொண்டும் ஆட்சி அமைக்கும் நடவடிக் கையில் இறங்கும் முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க.,தனக்கு முடிசூட்டவில்லை என்ற கடுப்பில் தனித்து களம் இறங்க காத்திருந்த வேளையில், டெல்லியில் இருந்து ஒரு முக்கிய தொலைபேசி அழைப்பு வருகிறது. அதற்கு சில மணிநேரங்களிலேயே கூட்டணி முடிவாகிறது. தனித்து போட்டியிடப் போவதாக வீரவசனம் பேசி வந்த ரங்கசாமி, கூட்டணிக்கு ஒப்புக் கொண்ட மர்மம் என்ன?
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார் எம்.எல்.ஏ., ஒரு பேட்டியில் தான் நிர்பந்தத்தின் காரணமாக விலகியதாக கூறினார்.
இப்போது என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க., 9 இடங்களிலும் அ.தி.மு.க., 5 இடங்களிலும் களம் காண சீட்டுகளை பிரித்துக் கொள்வதில் அடித்துக் கொள்ளும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ஜ.க பெற்ற வாக்குகள் வெறும் 9 ஆயிரத்து 183 தான். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெறும் 19 ஆயிரத்து 303 வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. ஆனால் இன்று அக்கட்சியே பிரதான கூட்டணி கட்சியாக காட்டிக் கொண்டு 9 இடங்களில் போட்டியிடுகிறது. 15 நாட்களில் இதுஎப்படி சாத்தியம்?. அதுதான் எதேச்சதிகாரம்.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க., ஒரு சின்ன கட்சியாக தான் . நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்தது. இன்று நிதிஷ்குமாரை தினம் மிரட்டும் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. நிதிஷ் கட்சியை உடைத்து, தன் கடைசி காலம் வரை ஆதரவு கொடுத்த பாஸ்வன் கட்சியை அவர் இறந்த பின் விலைக்கு வாங்கி அரசியல் செய்கிறது பா.ஜ.க..
அசாம் மாநிலத்தில் போடோ லேண்ட் முன்னணி என்னும் தனிப்பெரும் கட்சியிடம் கூட்டணி வைத்து, இன்று அந்த கட்சியையே உடைத்து, அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி அசாம் கணபரிஷித் என்ற கட்சியிலும் ஆள்பிடித்து தனது வானளாவிய அதிகாரக் கொடியை எதேச்சதிகார செயலால் பறக்கவிட்டுள்ளது பா.ஜ.க.
மகாராஷ்டிராவில் சிவசேனையின் சேவக கட்சி பாஜக. பால்தாக்ரே இறந்த பின் கட்சியை விழுங்க பார்த்த நிலையில் முழித்துக்கொண்டார் உத்தவ் தாக்கரே. அவரது கட்சியையும் உடைக்க முயற்சித்த போது, சரத்பவார் ஆதரவு கரம் நீட்ட உத்தவ் தாக்கரே தப்பித்துக் கொண்டார்.
தெலுங்கானா, சிக்கிம், மணிப்பூர், வங்காளம் போன்ற மாநிலங்களில் மாற்றறு கட்சியில் இருந்து ஆள்பிடித்து அரசியல் செய்யும் பா.ஜ.க., தமிழகத்தில் ஏவல் எடப்பாடி அதிமுக, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என சிலரை ஏஜெண்டுகளாக அமர்த்திக் கொண்டு எப்படியாவது திராவிட பொன்னாட்டின் ஏடுகளை அரிக்கலாம் என்ற மும்முரத்தில் ஈடுபட்டுள்ளது. சில கருப்பபு ஆடுகள் வேண்டுமானால் பா.ஜ.க.,வில் சீட்டுக்காக ஓடிப்போகலாம்.
நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு அவசியம் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்து தமிழர்களை மிரட்டும் பா.ஜ.க.,வை, இந்தி மொழியில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ள மோடி-அமித் ஷாவின் பா.ஜ.க.,வை தமிழக மக்கள் புறந்தள்ளுவார்கள்.
கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, நீதிமன்றம், போலீஸ், மீடியாவை மிரட்டுவது, மக்களை சாதி/ மத ரீதியாக பிரித்து குளிர் காய்வது, வசதிவாய்ப்பற்ற குரலற்ற ஏழைகளை நசுக்கி வளர்வது, பிற மொழி, இன கலாச்சார மக்களை அடிமைகளாக நடத்துவது என ஒட்டுமொத்த புற்றுநோயாக உருவெடுத்து வரும் பா.ஜ.க.,வை புறக்கணிப்பது ஒன்றே தமிழர்களின் தற்போதைய கடமை.
இதுமட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் இந்தியாவை ஒரு தேர்தல் எதேச்சதிகார நாடாக அறிவித்துள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியை எதேச்சதிகார ஆளும் கட்சியாக கடந்த ஆண்டு வரையறுத்தது.
ஜனநாயகத்தின் கருத்தியல் மற்றும் அளவிடும் அமைப்பான வி-டெம் அறிக்கையை ஸ்வீடனின் துணை வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ரைட்பெர்க் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் காணப்படும் எதேச்சதிகாரத்தை நோக்கிய சரிவு, தற்போது உலகம் முழுவதும் சர்வாதிகாரமயமாக்கப்படும் இந்த ‘மூன்றாம் அலையில்’ ஜனநாயகத்தில் இருந்து சரிவு ஏற்பட்ட நாடுகளின் நடைமுறையை ஒத்திருப்பதாகவும் ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் முதலில் குறைக்கப்பட்டு பிறகு, மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
கடந்த ஆண்டு, இந்தியா மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் பல தரவுகளுடன், 2019 முதல் இந்தியாவின் நிலை “தேர்தல் எதேச்சதிகார நாடாக” உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. மோடிக்கு முன்னர் இந்திய அரசு தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
முழு அறிக்கையை படிக்க:
https://scroll.in/latest/989199/india-has-turned-into-an-electoral-autocracy-claims-sweden-based-institute-report
பா.ஜ.க எனும் ஆட்கொல்லி நோயை அடியோடு ஒழித்திடுவோம். தேர்தல்நாள் ஏப்ரல் 6!