அது ஓர் அற்புதமான 7ம் தேதி காலை. எப்போதும் வரும் விரல் நுனி தள்ளல் செய்தியாக உத்தரகாண்ட் பற்றிய செய்தி வந்து சேர்ந்தது. இமயமலையின் மீது இருக்கும் ஏதோவொரு க்ளாசியல் ஏரி உடைந்து வெள்ளமாகி, இருக்கும் ஆறுகளில் நிரம்பி வழிந்து ஓடி, சில கணங்கள் பார்த்து வியக்கும் அற்புதமான காணொளி காட்சியாக அது இருந்தது.
ஏற்கனவே இமாலாயன் சுனாமி என 2013ம் ஆண்டில் உத்தரகாண்டில் நேர்ந்த வெள்ளத்துக்கு பெயர் சூட்டினோம். கிட்டத்தட்ட எட்டு வருடங்களில் இன்னொரு சம்பவம். ‘உலகத்துல ஏதோ நல்லது நடந்திருக்கு’ என கற்பனை செய்து கொள்ளும் தர்மத்தின் தலைவன் ரஜினி போலோ, எல்லாமே சரியாயிடும் ஓம் க்ரீம் என்கிற நம்பிக்கைகளில் உழலுபவர் போலோ இருந்தால் இதற்கு பின் வரும் பத்திகளை படிக்காமல் இப்போதே விரல் நுனியால் தள்ளி அப்பால் போய்விடுங்கள்.
க்ளாசியல் லேக் என்பதை பனிப்பாறை ஏரி என சொல்லலாம். பனிப்பாறையில் எப்படி ஏரி உருவாகும்? அதிக பனியால் பனிப் படிமங்கள் படிந்து பாறைகளாகி விடுகின்றன. வெப்பம் அதிகமாகும் நேரங்களில் அந்தப் பாறைகள் உருகி ஏற்கனவே பனிப்பாறை இருந்த இடத்தில் வெற்றிடத்தை உருவாக்கும். அந்த வெற்றிடத்தில் பனிப்பாறைகள் உருகி ஓடி வரும் நீர் தேங்கி ஓர் ஏரியை உருவாக்கி விடுகிறது. பெரும்பாலான இத்தகைய பனிப்பாறை ஏரிகளுக்கு கரையாகவே பனிப்பாறைகள்தாம் இருக்கும். இயற்கையான அணை போல் பனிப்பாறைகள் தேக்கி வைக்கும் நீரைத்தான் Glacial Lake என்கிறோம்.
நந்தா தேவி என்பது இமயமலையில் இருக்கும் உயரமான மலைச்சிகரப் பகுதி. கிட்டத்தட்ட 8,000 மீட்டர் உயரம். 2,200 மீட்டர் உயர ஊட்டிக்கு போனாலே தாடை வெடவெடக்கும்போது அதையும் தாண்டி ஒரு 5,000 அடி உயரத்தை கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக பனிதான் இருக்க முடியும். அங்கிருக்கும் பனியில்தான் ஒரு பகுதியில் பனிப்பாறைகள் சேர்த்து ஓர் ஏரியை உருவாக்கி இருக்கிறது.
ஏரியின் கரையாக இருந்த பனிப்பாறை உருகி உடைந்ததில்தான் தேக்கப்பட்டிருந்த நீர் வெள்ளமாக பாய்ந்து அடுத்தடுத்த ஆறுகளை தொற்றி பெருவெள்ளமாக மாறி மண், பாறை, சுவர் என எல்லாவற்றையும் தனக்குள் அரைத்து பிரம்மாண்டமாக ஓடி வந்திருக்கிறது. பேரிடர் நேர்ந்திருக்கிறது.
இதில் ட்விஸ்ட் என்னவென்றால் பனிப்பாறை உருகுமளவுக்கு வெப்பம் கொண்டிருக்க இது ஒன்றும் அங்கு கோடை காலம் அல்ல. குளிர்காலம்! சும்மாவே வட நாட்டில் குளிர் கொடுமையாக இருக்கும். உயரமான சிகரத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும் அங்கும் குளிராகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் பனி பனியாகவே இருக்குமளவுக்கான குளிர் இல்லை என்கிறார்கள். அதாவது நந்தா தேவியின் பனிப்பாறை பனியாக இத்தனை காலமும் இருந்த காலநிலை தற்போது மாறியிருக்கிறது. காலநிலை மாற்றம்!
உலகளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்கள் காடழிப்பு, நீர்நிலை அழிப்பு போன்றவற்றை சொன்னாலும் இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும் ஒற்றைக் காரணமாக சொல்லப்படுவது புதைபடிம எரிபொருள்.
அதாவது பெட்ரோல், டீசல் முதலியவற்றை பயன்படுத்திதான் நம் உற்பத்தி, வாழ்க்கை, அலுவலகம், போக்குவரத்து எல்லாமும் இருப்பதால் பெரும் அளவுக்கான புதைபடிம எரிபொருட்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. விளைவாக அவை வெளியேற்றும் கரியமில வாயு வளிமண்டலத்தில் தேங்குகிறது.
பூமிக்குள் வரும் சூரிய வெளிச்சம் மீண்டும் வெளியேற முடியாமல் இந்தக் கரியமில வாயு வளிமண்டலத்தில் தேங்கி திரை கட்டுகிறது. அந்தத் திரையில் பிரதிபலித்து சூரிய வெளிச்சம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அதாவது ஒரு முறை பூமிக்குள் வரும் சூரிய வெப்பம் இரட்டிப்பாக்கப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இரட்டிப்பு சூரிய வெப்பம் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. விளைவாக, பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. கடலோட்டம் மாறுகிறது. கடலை சார்ந்து உருவாகும் காலநிலையும் மாறுகிறது.
ஆகவே நாம் ஒரு முடிவுக்கு உடனடியாக வந்து விடுகிறோம். ‘இந்த பூமி அழிவதற்கு காரணம் மனிதன்தான். மனிதனே பூமியை அழிக்கிறான். ஆகவே அவன் deserved to go extinct!’ நாம் சற்று யோசித்தாலும் ஒரேயடியாக உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். இல்லையெனில் உணர்வேயின்றி மரத்துக் கிடக்கிறோம். இருவேறு தீவிர நிலைகளுக்கு நடுவே நின்று தர்க்கப்பூர்வமாக யோசித்து எல்லாவற்றுக்கும் சரியானதை அலசி தேர்ந்தெடுத்து, அதைத் தடுப்பது என்னவென்பதை அனைவருக்கும் சொல்லி தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும். நாம் செய்வதில்லை.
மனிதனே இயற்கை அழிவுக்கு காரணமாக இருக்கிறானெனில் எந்த மனிதன்? நந்தா தேவி பனிப்பாறை உடைந்து பேரழிவை உருவாக்கியதற்கு எந்த மனிதன் காரணம்? நீங்களும் நானுமா?
2019ம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சமோலி கிராமத்தின் ரேனி என்கிற மனிதன் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த மனிதனின் பெயர் குந்தன் சிங். அவர் வாழும் கிராமமான சமோலிதான் தற்போதைய வெள்ளத்தில் முதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டில் அவர் தொடுத்த வழக்கின் சாரம் என்ன தெரியுமா?
அவரின் கிராமத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் ரிஷி கங்கா மின் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும் ஆற்றையும் வனஉயிர்களையும் பாதிக்கும் வகையிலும் இருப்பதாக வழக்கு தொடுத்தார். முக்கியமாக அவரின் கிராமத்தில் இருக்கும் மக்களின் வாழ்வுரிமையையும் கலாசாரத்தையும் அழிக்கும் விதத்தில் திட்டம் இருப்பதாக வழக்கில் சொல்லியிருந்தார். ரிஷி கங்கா மின் திட்டம்தான் இப்போது நேர்ந்திருக்கும் வெள்ளத்தில் முதலில் பாதிப்புக்குள்ளான கட்டட அமைப்பு.
ரிஷி கங்கா திட்டம் என்பது நீரிலிருந்து மின்சாரத்தை எடுக்கும் திட்டம் ஆகும். Hydro Electric Project! இதைப்போல் நந்தா தேவி பனிப்பாறை வெள்ளம் ஓடிய வழியில் நான்கு திட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு தனியாரின் திட்டங்கள். நான்கு திட்டங்களுமே அப்பகுதி கிராம மக்களின் வாழ்வுக்கும் சூழலியல் ஓர்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில்தான் எழுப்பப்பட்டிருக்கின்றன.
உயரத்திலிருந்து பெரும் வேகத்தில் வீழும் நீர் இன்னொரு ஆற்றுடன் சேர்ந்து வருகையில் ஒரு கட்டுமானம் எதிர்ப்பட்டால் அது நொறுக்கப்படும். நொறுங்கினால் கூட பிரச்சினை இல்லை. அதன் கட்டுமான அழிவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இன்னும் வேகமடையும்.
இந்த வேகத்தில் கட்டுமான அழிவுகள் கிராமத்தையும் சுற்றுச்சூழலையும் என்ன செய்திருக்கும் என சற்று யோசித்துப் பாருங்கள். ரிஷி கங்கா திட்டம் மட்டுமின்றி அடுத்தடுத்த மின் திட்ட கட்டுமானங்களையும் வெள்ளம் சேதப்படுத்தியிருக்கிறது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் கதியை சொல்லவே வேண்டாம்!
கடந்த 25 வருடங்களாகவே இமயமலையில் அதீத மழையும் வழக்கத்தை மீறிய வெப்பமும் நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றுக்கு நடுவேதான் நம் அரசுகள் அந்த இடங்களை மொட்டையாக சுரண்ட தனியாருக்கு தாரை வார்த்தன. வளர்ச்சி என்ற பெயரில் சூழலின் ஓர்மையை அழித்தன.
பனிப்பாறைகள் மிகவும் இலகுவானவை. சிறிய சரிவும் கூட திரண்டு avalanche எனப்படும் பேரழிவை உருவாக்க முடியும். பனிப்பாறைகள் அதிகரித்தால், அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்து நகரும். லேசான ஆட்டம் கூட பனிப்பாறையை அசைத்து ஏரியை உடைத்துவிடக் கூடும். இத்தகைய இலகுத்தன்மை கொண்ட பனியை ஏற்கனவே காலநிலை மாற்றம் கரைத்து ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், அங்கு சென்று கட்டுமானங்களை கட்டுவதற்கு ஒருவனுக்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்? எத்தனை அகங்காரம் இருக்க வேண்டும்? எத்தனை முட்டாளாக இருக்க வேண்டும்? எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்?
அந்த மனிதன்தான் பிரச்சினை. அந்த மனிதன் வேறு யாருமல்ல, அரச மனிதன்!
அதிகாரம் நிறைந்த அரசின் பிரதிநிதியாக இருந்துகொண்டு லாபவெறி கொண்ட மனிதர்களுக்காக மொத்தத்தையும் அழித்து கையில் கொடுக்க தயாராக இருக்கிறான் பாருங்கள், அந்த அதிகாரம் நிறைந்த அரசியல் மனிதன்தான் நமக்கு பிரச்சினை. அவனுடைய அரசியல் மனிதகுல வளர்ச்சிக்கு என இல்லாமல், வளர்ச்சி என்கிற பெயரில் அழிவை ஊட்டுவதாக இருந்தால் அவன் நமக்கு ஆபத்தாகிறான். அவன் சொல்லும் அரசியலிலும் வளர்ச்சியிலும் நீங்களும் நானும் குந்தன் சிங்கும் கிடையாது.
உத்தரகாண்ட் சம்பவத்தில் இன்னொரு நுணுக்கமான விஷயம் மறைந்திருக்கிறது. புதைபடிம எரிபொருள்தான் பிரச்சினை என சொல்லி நாம் கட்டும் மாற்று ஆற்றல் திட்டங்களும் பிரச்சினையாகி இருப்பதை இதில் காண முடியும். உடனே நாம் மீண்டும் மறுதீவிரத்துக்கு சென்று ‘எல்லாவற்றுக்கும் குறை சொன்னால், எப்படிதான் வாழ்வது’ எனக் கேட்டு ‘இதெல்லாம் சரிதான்’ என முடிவெடுப்பதற்கு முன் சற்று நிதானத்துடன் யோசித்துப் பாருங்கள்.
பிரச்சினையாக இருப்பது இயற்கை ஆற்றல் அல்ல. அவற்றை வணிகமாக்கி, பெருவிகித உற்பத்தி கொண்டு பெருநாசம் செய்து பெருலாபம் எடுக்க விரும்பும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.இனியும் பேரிடர்கள் வரத்தான் போகின்றன. மனித இனம் அழிந்து போகக் கூடச் செய்யலாம். ஆனால் அழிவுக்கு காரணமாக இருப்பது என்ன என்கிற உண்மையை அழியும்போதேனும் தெரிந்திருப்போமா என்பதே கேள்வி.