இளம்பருவத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆவேச மேடைப்பேச்சு ஒன்றை தி.மு.க எம்.எல்.ஏவும், முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன், “மேயர் பதவியல்ல பொறுப்பு” என்கிற தனது புத்தகத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த புத்தகத்தில், “ “தமிழகத்தின் அமைச்சனாய் இரு என்று சொன்னாலும், தண்டவாளத்தில் தலைவைத்து படு என்று சொன்னாலும், இரண்டையும் சமமாய்க் கருதுபவன்தான் என்தம்பி” எனப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் பாராட்டப்பட்ட தலைவர் கலைஞரின் தலைமையில் நடைபோடும் இயக்கம் நமது இயக்கம்.
பிறமொழி ஆதிக்கம் மேலோங்கும் போதெல்லாம், உயிரெமக்குப் பெரிதில்லை எனக் கருதி மொழி காத்த நடராசன், தாளமுத்து போன்ற தீரர்களைக் கொண்ட இயக்கம் நமது இயக்கம். 1972, கோவை மாநகரில் மாணவர் தி.மு.க. மாநாடு! தஞ்சை மண் தந்த தமிழ்ப் போராளி அண்ணன் எல்.ஜி. என்கிற எல்.கணேசன் தலைமையுரை: “மாணவச் சிங்கங்களே! அன்னை மொழி காக்கும் அறப்போரில் எத்தகைய தியாகத்திற்கும் நீங்கள் தயாராக வேண்டும். உயிர்தான் விலையென்றால், அதனையும் தரவேண்டும்” என அறைகூவல் விடுக்கிறார்.
மாநாட்டின் இறுதிக்கட்டம். கண்களில் கோபம் கொந்தளிக்க, அரும்பு மீசை கொண்ட மெலிந்த தேகம் ஒன்று மேடைக்கு வருகிறது! வந்து, ஒலிவாங்கியின் முன் நின்று, “அண்ணன் எல்.ஜி. அவர்களே, நீங்கள் விடுத்த அறைகூவலின்படி ஒரு பட்டாளம் உருவாக்கப்படுமேயானால், அம்மாணவர் பட்டாளத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; அது தியாகத்தின் பட்டியலாக இருந்தாலும் அதிலேயும் என்னைச் சேர்த்துக்கொள்வதற்கு நீங்கள் ஆணையிட வேண்டும்.
மொழிக்காக எதையும் இழக்கத் தயார். இனத்திற்காகப் போராடுகிறோம். போராடுகிற நேரத்திலே, நம் உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூடக் காத்திருக்கிறோம். "என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண்பிள்ளைகள் இருக்கிறோம். எனவே, அந்த நான்கு ஆண் பிள்ளைகளில் ஒரு ஆண் பிள்ளை போய்விடுவதால் என் தந்தை கவலைப்படமாட்டார்.
“அதுவும், மொழிக்காக, இனத்திற்காகத் தனயனை இழந்த தந்தையொன்று என்னுடைய தந்தைக்குப் பாராட்டுக் கிடைக்கும். அப்பெருமையை வாங்கித் தந்த மகிழ்ச்சி எனக்குச் சேரும் அல்லவா?” இப்படி ஆவேசம் பொங்கத் தன் ஆர்வத்தை வெளிப்படுத்திய ஆற்றல் மறவன் - அரும்பு மீசைக்காரன் அகவை பத்தொன்பதை எட்டிப்பிடிக்கும் இளைஞன் பெயரோ மு.க.ஸ்டாலின். அவரே இன்று தளபதியாய் இருந்து வழிநடத்தும் இயக்கமல்லவா நமது இயக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.