உணர்வோசை

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

ஒரே கட்சி... ஒரே கொள்கை.. ஒரே தலைமை என மாணவர் பருவத்தில் இருந்தே தி.மு.க.,வின் தொண்டராக இருந்து, தற்போது கழகத்தின் பொருளாளராக, கொள்கைக்குன்றாய் உயர்ந்திருக்கும் துரைமுருகனின் 83 வது பிறந்தநாள் இன்று.

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் வழியில் கே.வி.குப்பம் என்று அழைக்கப்படும் கீழ்வழித்துணையான் குப்பத்தில் 1938 ஆம் ஆண்டு சூலை 1ந் தேதி பிறந்தவர் துரைமுருகன். சட்டம்படித்தவரான இவர் மாணவர் பருவத்திலேயே தி.மு.க.,வின் செயல்வீரராக உருவெடுத்தவர். சிறந்த மேடைப்பேச்சாளரும், இலக்கியவாதியும்கூட.

1971 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் நுழைந்தவர் காட்பாடியில் 7 முறையும், ராணிப்பேட்டையில் 2 முறையும் வெற்றிக்கொடி கட்டியவர். 2006 ஆம் ஆண்டு தமிழக பொதுப்பணி அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர்.

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

கே.வி.குப்பத்தில் இருந்து முத்தமிழறிஞரின் இதயக் கோட்டையில் நுழைந்தவர் துரைமுருகன். கழகம் நெருக்கடியை சந்தித்த காலத்தில் எல்லாம் தொண்டர்களின் கிரியா ஊக்கியாக செயல்பட்டவர். தனது 80 வது வயதில் தி.மு.க.,வின் பொருளாராக பதவியேற்றவர் கடந்து வந்தது ராஜபாட்டை அல்ல. கல்லு, முள்ளும் கொட்டிக்கிடந்த பாதையிலே அவரது பயணம். இன்று 82 வயதாகும் அவர் தலைமையின் கட்டளையை நிறைவேற்றத்துடிக்கும் செயல்வீரராய் செயலாற்றுபவர்.

துரைமுருகன் அரசியலில் நுழைந்த தருணம் சுவாரசியம் நிறைந்தது. ஆம். கருப்புச் சட்டைதான் அவரை தி.மு.கழகத்தில் இணைத்தது. அண்ணாவின் திராவிடநாடும், கலைஞரின் முரசொலியும் துரைமுருகனை கைபிடித்து வழிநடத்தின.

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

அவர் தனது அரசியல் நுழைவு குறித்து நம்மிடம் கூறுகையில்,

நான் கே.வி.குப்பத்துல படிக்கறப்போ... ஒரு டீக்கடை இருக்கும். காளியப்பா டீ கடை. அந்த கடையில் மன்றம், தென்றல் பத்திரிகை எல்லாம் இருக்கும். அதெல்லாம் அவர் கொடுப்பார். அதையெல்லாம் படிச்சு படிச்சு எனக்கு அதுலேயே ஒரு இதுவாயிடுச்சி. பேரறிஞர் அண்ணாவை பார்த்தேன். எங்க ஸ்கூல் எதிரிலே ஒரு மீட்டிங் நடந்துச்சி. ஞானசம்பந்தம்ன்னு ஒருத்தர் பச்சையப்பாஸ் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். ஆசைன்னு ஒரு படம் வந்துச்சி. அந்த படத்தின் கதாசிரியர் அவர். அவர்தான் கே.வி.குப்பத்துக்கு பேரறிஞர் அண்ணாவை கூப்பிட்டு வந்தவர். நாங்க எல்லாம் ஓடிப்போய் பேரறிஞர் அண்ணாவை, ஞானசம்பந்தம் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தேன். அன்றையதினம் மாலையில் அண்ணாவின் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில்தான் அண்ணாவின் பேச்சைக் கேட்டேன். கே.வி.குப்பம்தான் பெரிய டவுன். வார சந்தை நடக்கும். போலிஸ் ஸ்டேசன், ஹாஸ்பிட்டல் எல்லாம் இருக்கும். எல்லா கட்சி கூட்டமும் அங்கு நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடக்கும். நான் அந்த ஊரில் எல்லா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் பார்த்திருக்கிறேன்.

எங்க ஊரில் காங்கிரஸ்காரர்கள் இருந்தார்கள். காமராஜர் அங்க வந்து நின்னபோது நாங்க எல்லாம் எதிர்த்து வேலை செஞ்சோம். செட்டியார்கள் எல்லாம் காமராஜருக்கு ஒர்க் பண்ணாங்க. அப்ப அந்த ஊர்ல ரெண்டு பேரு, ராமசாமி, பொன்னன்னு இருந்தாங்க. திருவிழாவுக்கு கருப்புச் சட்டை போட்டு வந்தாங்க. அப்போ.. ஊரெல்லாம் ஒண்ணா கூடி இந்த மாதிரி கட்சியெல்லாம் ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு ஊர் நடுவுலே சட்டையெல்லாம் கழற்றச் சொல்லி அந்த கருப்புச்சட்டைகளை ஊர் பெரியவங்க எல்லாம் சேர்ந்து கொளுத்திட்டாங்க. எனக்கு கோவம் வந்தது. என்னடா சட்டையெல்லாம் போடக்கூடாதுன்னு சொல்றான்னு நான், சொக்கலிங்கன்னு ரெண்டு மூணு நண்பர்களெல்லாம் சேர்ந்து நாங்க கட்சி ஆரம்பிச்சிட்டோம்.

எங்க ஊரு பக்கத்து ஊருக்கு நாவலர் வந்தார். அவர் பேச்சு கேட்ட பிறகுதான் கட்சியில எனக்கு அதிக ஈடுபாடு வந்துச்சி. நாங்க சத்திய வாணிமுத்துவை ஏற்பாடு பண்ணி கூட்டம் நடத்த முடிவு பண்ணோம். எங்க வட்டச் செயலாளர் காட்பாடியில் இருந்தார். அவரை பார்த்து சொன்னோம். அவர் உடனே ஏற்பாடு பண்ணிடலாமுன்னு சொல்லி சத்தியவாணி முத்துவை கூப்பிட்டு வந்தார். நாங்க எங்க ஊர்ல மீட்டிங் நடத்தினோம். அப்பவே நான் கட்சி கார்டு வாங்கிட்டேன்.

அப்புறம் நான் படிச்சிட்டு இருக்கும்போதே முரசொலி அலுவலகத்திற்கு போவேன். கலைஞருடன் நெருக்கமாகி கட்சிப் பணியாற்றி வந்தேன். அப்புறம் வக்கிலாக இருந்தபோது நல்லா சம்பாதித்தேன். அப்போ அண்ணா இறந்து கலைஞர் முதல்வராக இருந்தார்.

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

அந்தநேரத்தில் தலைவர் கலைஞர் என்னிடம், தேர்தல் வருது. நிற்கிறாயா என்றார். அய்யய்யோ அதெல்லாம் நமக்கு வேண்டாங்க. நான் பிராக்டிஸ் பண்றேன்ன்னு சொன்னேன். நீங்க எல்லாம் சீப் மினிஸ்டரா வாங்க. அப்புறம் பார்த்துக்கலாம் என்றேன். அப்போ.. தயாளு அம்மா, ஏம்பா தேர்தல்ல நிக்க மாட்டறேன்னு கேட்டாங்க. என்கிட்ட பணம் இல்லன்னு சொன்னேன். அதெல்லாம் கொடுப்பாங்க நில்லுப்பா என்று அவங்க சொன்னாங்க. கலைஞர் திடீர்ன்னு அறிவித்துவிட்டார்.

என்கிட்ட காசு இல்ல. அஞ்சுநாளா நான் ஊர் பக்கம் போகல. முரசொலி செல்வமும் நானும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். அவன் என்னை காட்பாடிக்கு கொண்டுபோய் விட்டுவிட்டான். என் வீடு எதிரில்தான் வட்டச்செயலாளர் வீடு. அவரைபோய் தேர்தல் வேலைக்கு அழைத்தேன்.

அவர் உடனே, உனக்கு யார் சீட்டு கொடுத்தாங்களோ அவங்களையே கூப்பிட்டு தேர்தல் வேலை பாரு. நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். எவன் எவன் தேர்தலில் சீட்டு கேட்டு சீட்டு கிடைக்கலையோ அவன் எல்லாம் கோபமாக இருக்கான். எவன கூப்பிட்டாலும் வரமாட்டுறான். நானும் ஒரு அஞ்சுநாள் பேசாம இருந்தேன். பாக்கெட்ட பார்தேன் ஒரு அஞ்சு ரூபா இருந்தது. நேரா ரயில்வே ஸ்டேஷன் போய் ஜோலார்பேட்டைக்கு டிக்கெட் வாங்கிகிட்டு, ரயில் ஏறிட்டேன். ஜேலார்பேட்டையில் இறங்கி என்கூட படித்த ராஜகோபால் வீட்டிற்கு போனேன்.

என்னய்யா எலெக்‌ஷன் நடக்குது. நீ இங்க வந்துட்டன்னு கேட்டான். அடபோய்யா அவன் அவன் தேர்தல் வேலைக்கு வர்றமாட்டறான். நம்ம கிட்டேயும் காசு இல்ல. தலைவர் கிட்ட போன்போட்டு சொல்லிடலாம் என்று சொன்னேன். அப்போ, ராஜகோபால் அண்ணன் சொன்னார். அட ஏங்க. எவன் எவனோ சீட் கேட்டு கிடைக்கல. உங்களுக்கு சீட் கிடைத்திருக்கு. கிடைச்ச சீட்ட ஏன் வேண்டாமுன்னு சொல்றீங்கன்னு சொன்னார்.

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

சரி ஒரு ஐயாயிரம் எடுத்துக் கொண்டு போ என்று சொல்லி கொடுத்தனுப்பினார். அப்புறம்தான் தேர்தல் வேலையை தொடங்கினேன். கலைஞர் வந்தார் மீட்டிங் எல்லாம் போட்டாங்க. ஸ்டாலின் நாடகம் எல்லாம் போட்டார். கலைஞர் வீட்ல எல்லோரும் வந்தாங்க. அந்தம்மா 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. கலைஞர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். கட்சியில 10 ஆயிரம் கொடுத்தாங்க. மொத்தம் 30 ஆயிரம் ரூபாய். அங்கயிங்க வாங்கனது 10 ஆயிரம் ரூபாய். மொத்தம் 40 ஆயிரம் ரூபாய்.

அந்த 40 ஆயிரம் ரூபாயை ஒத்த ஒத்த ரூபாயா மாத்தி வீட்டை பூட்டி ஊரில் இருந்தவங்கள எல்லாம் கூப்பிட்டு அப்படியே கொட்டினேன். 40 ஆயிரம் ரூபாயை கொடுக்க போறேன்னு சொன்னேன். எல்லாரும் வேலை செஞ்சாங்க. நான் ஜெயிச்சேன். என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில நின்னது என்னோட கிளாஸ்மேட் தண்டாயுதபாணி.

நானும் அவனும் பச்சையப்பா காலேஜ்ல ஒண்ணா படிச்சோம். நானும் அவனும் குளோஸ் பிரெண்ட்ஸ். அவன் சட்டைய நான் போடுவேன். என் பேண்ட்டை அவன் போடுவான். ஆனா, தேர்தல்ல எதிரெதிரா நின்னோம். தேர்தல் நேரத்திலும் ஒன்றாகவே சாப்பிடுவோம். நீ எங்கடா ஓட்டுகேட்க போற. நான் இந்த இடத்துல ஓட்டு கேட்க போறேன்னு பேசிக்கிட்டு ஒன்றாகவே வண்டி ஏறி போவோம். அந்த அளவுக்கு ரொம்ப ஜாலியா தேர்தல் வேலை பார்த்தோம்.

சட்டசபையில் நான், சுப்பு, ரகுமான்கான் வேகமா இருப்போம். சப்ஜெக்ட் பேசுறது.. ராத்திரி பகலுமா தயாரிக்கறது என வேகமாக வளர்ந்துட்டேன் என்றார். துரைமுருகனின் கடின உழைப்பும், கட்சித் தலைமை அவர் மீது வைத்த நம்பிக்கையும், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ஒப்பற்ற தொண்டரை, தளகர்த்தரை, பண்பாளரை உருவாக்கியுள்ளது.

சட்டசபையில் எள்ளலும், துள்ளலும்மிக்க அவரது பேச்சை ரசிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் எனலாம். அவரது இலக்கிய சிலேடை பேச்சுகள் வாள்வீச்சுக்கு சமம் என்றால் மிகையாகாது.

கொரோனா தொற்று இந்திய அளவில் பரவத் தொடங்கிய நேரத்தில் கூட தனது சாதூர்யமான பேச்சால், கொரோனா ஆபத்தை சட்டசபையில் எடுத்துரைத்தவர் துரைமுருகன்.

‘நெஞ்சுரம் கொண்ட கொள்கைக் குன்று’ - தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

சட்டசபையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தி.மு.க அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது பேசிய எதிர்கட்சி துணைத் தலைவரான துரைமுருகன், கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. ” தொலைபேசியை எடுத்தால் இருமி கொரோனா என்கிறார், சட்டமன்றத்தின் வெளியே, பொது இடங்களில் கொரோனா நடவடிக்கை என எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ள நிலையில் ஒன்றும் இல்லை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஏசியில் இருந்தால் கொரோனா பரவுமாம், உறுப்பினர்கள் அனைவரும் பயத்துடன் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்க எல்லாம் புள்ள குட்டிகாரங்க என்று அவர் சொன்னவுடன் அவையில் எழுந்த சிரிப்பலை அடங்க சில மணித்துளிகள் பிடித்தன.

ஆனால், அவர் சொன்ன எச்சரிக்கையை எடப்பாடி அரசு அலட்சியப்படுத்தியதால் இன்று தமிழகத்தை கொரோனா விடாப்பிடியாக பிடித்துள்ள நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி விவகாரத்திலும், தமிழர் உரிமையை நிலைநாட்டுவதிலும் துரைமுருகனின் சட்டமன்ற வாதங்கள் மெச்சத்தகுந்தவை. தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலும், எதிர்கட்சியாக இருந்த காலத்திலும் துரைமுருகனின் சட்டசபை பேச்சுக்கள் சிரிக்கவும், சிந்திக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதை நித்தம் நித்தம் மெய்பித்து வந்திருக்கிறார்.

82 வயதிலும் கழகத்தின் பொருளாளராக, கட்சித் தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் தொண்டராக இன்றைய தினத்திலும் அவர் சாத்தான்குளம் படுகொலையை கண்டித்து, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு பதாகையை ஏந்தி நிற்கிறார்.

இதோ.. இவர்தான் பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி. முத்தமிழறிஞரின் நெஞ்சினிக்கும் தோழமை. கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

துரைமுருகன் வாழ்க பல்லாண்டு!

banner

Related Stories

Related Stories