‘அற்ப அரசியல் செய்கிறார் ராகுல்’ என்று ஏகடி செய்த அமித்ஷாவுக்கு, பா.ஜ.க எதிர்கட்சியாக இருக்கும்போது என்னவெல்லாம் குட்டிக்கரணம் அடித்திருக்கிறார்கள் என்று தெரியுமா?
இந்தியாவின் இமயக்கொடுமுடியான கல்வான் பள்ளத்தாக்கில் நமது தேசத்தின் வீரமகன்கள் தாய்மண்னைக் காப்பதற்காக தங்கள் இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயர் அலையை வீசியது. கடந்த 19ம் தேதி பாரதப் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிலக் கேள்விகளை முன்வைத்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார்.
இதற்கு பா.ஜ.க தரப்பு, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அவதூறாகப் பேசியுள்ள நிலையில், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸை ஒரு “பொறுப்பற்ற” எதிர்க்கட்சி என்றும் அதன் தலைவர்கள் “மனச்சோர்வை” ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவவோ ராகுலை "PETTY POLITICS”க்கு (அற்ப அரசியல்) மேலே உயருமாறு நையாண்டி செய்தார். காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அப்போதைய எதிர்கட்சியான இதே காவிக்கட்சி பலமுறை பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான சூழலில் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க அரசை எதிர்த்து கேள்வி எழுப்பியதற்காக அவதூறுகளைப் பரப்பி வரும் பா.ஜ.க , 2004-2014 காலகட்டங்களில் என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?
2004 மற்றும் 2014க்கு இடையில், பா.ஜ.க அரசியல் தீர்மானங்களை வெளியிட்டது, ஒரு வெள்ளை அறிக்கை கோரியது, தனது சொந்த தூதுக்குழுவை எல்லைக்கு அனுப்பியது, அன்றைய மன்மோகன் சிங் அரசாங்கத்தை விமர்சிக்கும் பல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியது.
இந்த ஆண்டுகளில் பா.ஜ.க வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகளின் பகுப்பாய்வு, கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. சீனா குறித்து கிட்டத்தட்ட இரண்டு டஜன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தை பல முறை எச்சரித்தது மற்றும் விளக்கங்களைக் கோரியது.
உதாரணமாக, ஜூன் 2013 பனாஜி தேசிய செயற்குழு கூட்டத்தில், "சூரக்ஷா மற்றும் ஸ்வாபிமான்" குறித்து பா.ஜ.க ஒரு தனி தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் கூறியதாவது: "எங்கள் மீனவர்கள் தெற்கு கடல் பகுதிகளில் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள், எங்கள் வீரர்கள் வடக்கு எல்லைகளில் தலை துண்டிக்கப்பட்டு சிதைக்கப்படுகிறார்கள், இந்தோ-சீனா எல்லைகளில் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தியது, சீனப் படையினரின் படையெடுப்பு இந்திய எல்லைக்குள் கிட்டத்தட்ட 19 கி.மீ தூரத்தில் உள்ளது மற்றும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அதே நிலையை வைத்திருக்கிறது. இந்தியா அவமதிக்கப்படுகிறது, அற்பமானது மற்றும் அதன் நியாயமான அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மையத்தில் உள்ள எங்கள் அரசாங்கம், அதன் குடிமக்களுக்கு மட்டுமே சட்டங்களையும் தண்டனைகளையும் வழங்கி வருகிறது.”
அப்போதைய பா.ஜக. செய்தித் தொடர்பாளராக இருந்த ரவிசங்கர் பிரசாத், செப்டம்பர் 18, 2009 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார், சீன ஊடுருவல்கள் மிகவும் குழப்பமான மற்றும் அச்சுறுத்தலான நிலையை எட்டியுள்ளதாக கூறினார். 2008 ஆம் ஆண்டில் 233 ஊடுருவல்கள் நடந்துள்ளன, அதில் எல்.ஏ.சி மீறல் மட்டுமல்லாமல், இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரசாத், அப்போதைய UPA அரசாங்கம் “இந்தோ-சீனா உறவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகள் குறித்தும், எல்லைகளில் இந்தியாவின் உட்கடமைப்பு மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் உட்பட்டவை குறித்தும்” ஒரு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தார்.
அதே ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, பிரசாத் மீண்டும் இந்த விவகாரத்தை எழுப்பினார், “… வெளிவிவகார அமைச்சரின் பதிலில் கிட்டத்தட்ட மன்னிப்புக் கேட்கும் தொனியும், பற்றாக்குறையும் இருப்பதைக் கண்டு பா.ஜ.க திகைக்கிறது; இது நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் விருப்பம் மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் திறன் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க, சீன ஊடுருவல்கள் குறித்த முதல் தகவல்களைப் பெற தனது கட்சி பிரதிநிதிகளை எல்லைகளுக்கு அனுப்பியிருந்தது. அன்றைய பா.ஜ.க தலைவரான நிதின் கட்காரியால் அமைக்கப்பட்ட பகத் சிங் கோஷியாரி (இப்போது மகாராஷ்டிரா ஆளுநர்) தலைமையிலான தூதுக்குழு “இந்திய மண்ணில் சீன ராணுவம்” என்று ஒரு ஆவண அறிக்கையை தயார் செய்து வெளியிட்டது.
பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் எழுப்பிய சீன ஊடுருவல்கள் மற்றும் எல்லை தொடர்பான பிற பிரச்னைகள் குறித்து பா.ஜ.க வலைத்தளம் பல அறிக்கைகளைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 3, 2012 அன்று, அரசாங்கத்திடம் விளக்கம் கோரிய விஜய் "சீன இராணுவத்தினர் லே-வில் உள்ள எல்லை கிராமமான கொயுலில் தொடரப்பட்ட வளர்ச்சிப் பணிகளை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மவுனம் மர்மமானது.” என்று அவர் பங்கிற்கு அவரும் அன்றைய அரசைக் குறை கூறினார்.
இன்னொரு முக்கியமான சம்பவம், ஆகஸ்ட் 2010 இல், சீனாவில் இருந்து ஏழு பேர் கொண்ட தூதுக்குழு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச மத்திய குழுவின் துணைத் துறை அமைச்சர் அய் பிங் தலைமையில், இந்தியா வந்து அப்போதைய பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியை சந்தித்தனர். கட்காரியும் ஜனவரி 2011 இல் சீன கம்யூனிச்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு விஜயம் செய்தார் என்பது வரலாறு.
இந்தப் பதிவு பா.ஜ.க அரசின் அலட்சியப் போக்கை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் தலைவர்கள் மீது வன்மத்தை கக்கும் பா.ஜ.க தலைவர்கள், தாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் என்பதை நினைவூட்டவே!
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தங்களை வாக்களித்து ஆட்சி சிம்மாசனத்தில் அமர வைத்த மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், கவலையை உடைப்பதற்கும், தேவைகளை நிறைவேற்றுவதற்கும்தான் அதிகாரம், இவற்றை செய்யத்தவறினால் இறுதியில் சதிகாரன் என்ற பழி மட்டுமே மிஞ்சும்!
- அஜெய்வேலு