“நீட் : குடி முழுகிப் போச்சு... தமிழ்நாட்டின் வீழ்ச்சி தொடங்கியாச்சு” எனும் தலைப்பில் பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் எழுதியுள்ள கட்டுரை பின்வருமாறு :
தேசிய தேர்வுச்சோதனை முகவாண்மை (National Testing Agency) புள்ளிவிவரங்களின் படி, 2020 இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழ்நாட்டின் பங்கு 17 சதவீதம் குறைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. 1.4 லட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ள இந்த நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்? கட் ஆஃப் அதிகரித்திருப்பதும் அதன் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டதும் முக்கியமான காரணம்.
கட் ஆஃப் அதிகரிக்கிறது என்றால் போட்டி அதிகரித்திருக்கிறது, தரம் உயர்ந்திருக்கிறது என்றுதானே காரணம் என்று நினைக்கவேண்டாம். தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் டூ முடித்து இரண்டு மூன்று ஆண்டு காலமாக கோச்சிங் சென்டரில் படித்து, ஏற்கனவே தேர்வெழுதி அனுபவப்பட்டு தொடர்ந்து தேர்வெழுதி வெற்றிபெறுவதால் அவர்களுக்கு சீட் போய்விடுகிறது. புதிதாக முடித்துவிட்டு வருகிற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடையமுடியாது என்று கருதி தேர்வுக்குப் போகாமலேயே தவிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மைச் செய்தி.
அதாவது பணக்கார, நகர்ப்புற நடுத்தர வர்க்க, சமூகத்தில் ஏற்கனவே உயர்நிலையில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களுக்குப் போதுமான அளவுக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, கோச்சிங் சென்டரில் "பயிற்சி பெற்று" மருத்துவக் கல்லூரி சீட் பெற்றுவிடுகிறார்கள். ஏழை, கிராமப்புற அல்லது அரசுக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் நல்ல மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருந்தாலும் போட்டி போடமுடியாமல் தோற்கிறார்கள். இப்போது தேர்வுக்கே அஞ்சி நீட் பக்கம் போகாமல் இருந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு மாணவர் இப்படி முடிவெடுப்பதால்தான் இந்த 17 சதவீத வீழ்ச்சி!
குடிமுழுகிப்போச்சு என்பதுதான் உண்மை. எது நடக்கும் என அஞ்சினோமோ அது நடக்கத்தொடங்கிவிட்டது.
இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம்? - டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியே சொல்கிறது: 2019 இல் எம்.பி.பி.எஸ் சேர்ந்த 4,202 மாணவர்களில் 2,919 பேர் - அதாவது 70 சதவீதம் பேர் - பழைய மாணவர்கள் என்று அது கூறுகிறது. இந்த ஆண்டும் பல மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் கோச்சிங் சென்ட்டருக்குச் சென்று பயிற்சி எடுத்து அடுத்த ஆண்டு தேர்வெழுதலாம். ஆனால் இது எத்தனை பேருக்குச் சாத்தியம்?
இனி முதல் தலைமுறை மருத்துவப் பட்டதாரி என்பது சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, அரசியல்வாதிகள்-கல்வி கார்ப்பரேட் கூட்டுவியூகத்தில் இந்தியாவின் சுகாதாரத் துறையே பாதிக்கப்படப்போகிறது என்பதையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.
இது மட்டும் பிரச்னையில்லை. எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வில் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் பாருங்கள்.
2020 இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் முதல் ஐந்து மாநிலங்களின் பட்டியலையும் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையையும் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 15.93 லட்சம் பேரில், முதலிடம் மகாராஷ்டிடிராவுக்கு (2.29 லட்சம்). ஐந்தாம் இடம் தமிழ்நாட்டுக்கு (1.17 லட்சம்). ஆனால் உத்தர பிரதேசத்தில் 1.54 லட்சம், ராஜஸ்தான் 1.38 லட்சம்.
மகாராஷ்டிடிரா வளர்ந்த மாநிலம், புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உத்தர பிரதேசமும் ராஜஸ்தானும் அடிப்படையிலேயே கல்வி வளர்ச்சி குன்றிய மாநிலங்கள். தமிழ்நாடோ பள்ளிக்கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக்கல்லூரியில் இந்தியாவிலேயே முதலிடங்களில் வரக்கூடிய மாநிலங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை எப்படி உ.பியும் ராஜஸ்தானும் இப்போது ஓவர் டேக் செய்யமுடிகிறது?
இந்திக்காரர்கள் மத்தியில் ஏதேனும் கல்விப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறதா? யோகி மாஜிக் செய்கிறாரா? யாதவ்களும் ஜாதவ்களும் ஜாட்களும் படிக்கத்தொடங்கிவிட்டார்களா?
இல்லை.
உத்தர பிரதேசத்தின் நொய்டா, ஹரியானாவின் குருகிராம் - அதாவது டெல்லி வட்டாரமும் ராஜஸ்தானும் இதில் முன்னிலை வகிக்கக் காரணம் கோச்சிங் மாஃபியா.
அரசியல்வாதிகள்-கல்வி கார்ப்பரேட்கள்-கோச்சிங் மாஃபியா கூட்டுதான் உண்மையான காரணம். மருத்துவப் படிப்பு, ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்பக் கல்வி, மத்திய அரசு வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் இந்த கோச்சிங் மாஃபியாவும் கல்வி முதலாளிகளும் தங்கள் கைவரிசையைக் காட்டிவருகிறார்கள்.
இந்தக் கும்பல் வெகுசீக்கிரத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளையும் (தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட) பிடிக்கும். அனைத்து பெரிய தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் ஆக்கிரமிக்கும். அவர்கள் "படித்து" முடித்துவிட்டு வெளியேறி அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலை செய்வார்கள். நீங்கள் தலைவலிக்கு வைத்தியம் பார்க்க அந்த கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சென்று வெளியே வரும்போது இரண்டு லட்ச ரூபாய் செலவுசெய்துவிட்டு வரப்போகிறீர்கள். இந்த அநியாயம் அமெரிக்காவில் கூட இல்லை. ஆனால் இங்கே இது நடக்கத்தான் போகிறது. நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
நீட் தமிழ்நாட்டின் சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. நீட்டை நம் மீது திணித்தவர்களின் அதிகாரத்தை நாம் எப்போது குழிதோண்டிப் புதைக்கப்போகிறோம்?
நூறாண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கிறோமே என்று கொஞ்சம் கூடவா நமக்கு உறைக்கவில்லை? பா.ஜ.க அ.தி.மு.க கூட்டு சர்க்காரால் நமது எதிர்காலமே பறிபோகிறதே என நமக்கு இப்போதுகூடவா புரியவில்லை?
- ஆழி செந்தில்நாதன்