உணர்வோசை

“பெரியாரிடமிருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?” - தத்துவஞானிகளுடன் ஒப்பிட்டு ப.திருமாவேலன் உரை!

தந்தை பெரியாரின் வாழ்க்கை, போராட்டம் , கொள்கை அனைத்துமே மனிதநேய அரசியல்தான் என்று பெரியாரிய சிந்தனையாளரும், ஊடகவியலாளருமான ப.திருமாவேலன் கூறினார்.

“பெரியாரிடமிருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?” - தத்துவஞானிகளுடன் ஒப்பிட்டு ப.திருமாவேலன் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மனிதநேயம் - சுயமரியாதை குறித்த பன்னாட்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் பெரியாரிய சிந்தனையாளரும், கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுத் தலைவருமான ப.திருமாவேலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் பெரியாரிய பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய சங்கமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் ப.திருமாவேலன் பேசியதாவது:

“உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ சிந்தனையாளர்களை உற்பத்தி செய்துள்ளது. அந்த சிந்தனையாளர்கள் அனைவருடனும் ஒப்பீடு செய்தால் அவர்கள் அனைவரது உயரத்துக்கும் உயர்ந்து நிற்கிறார் பெரியார்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் திருவள்ளுவர். 'மனிதர்களுக்குள் சாதி பேதமும் இல்லை, பால் பேதமும் இல்லை' என்றார் பெரியார்.

'நான் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்' என்றார் புத்தர். 'நான் சொன்னதை உங்கள் பகுத்தறிவுப்படி சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றார் பெரியார்.

'மனிதன் உரிமையோடு பிறக்கிறான், அவன் கட்டுப்பட்டுக் கிடக்கிறான்' என்றார் ரூசோ. 'மனிதன் சுதந்திரமானவன் தான். ஆனால் அவன் சிந்தனை விலங்கிடப்பட்டுள்ளது' என்றார் பெரியார்.

“பெரியாரிடமிருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?” - தத்துவஞானிகளுடன் ஒப்பிட்டு ப.திருமாவேலன் உரை!

'இறையியல் மனித வாழ்க்கையை ஆள முடியாது. நாத்திகரும், கடவுள் நம்பிக்கையாளரும் என அனைவருக்கும் பொதுவானது ஒழுக்கப்பண்பு' என்றார் வால்ட்டேர்.

'பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி இல்லாவிட்டால் ஒன்றுமில்லை, ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்' என்றார் பெரியார்.

'எல்லாவற்றையும் கேள்வி கேள்' என்றார் சாக்ரடீஸ். 'எல்லாவற்றையும் பகுத்தறிந்து பார்' என்றார் பெரியார்.

'வீரமனப்பான்மை வேண்டும்' என்றார் நீட்சே. 'எதிர்ப்புத் தெரிவிக்காதவன் வாழ முடியாது' என்றார் பெரியார்.

'பொருளாதார விடுதலையே இறுதி விடுதலை' என்றார் மார்க்ஸ். 'எனது இறுதி லட்சியம் கூட்டுறவுத்தன்மை உள்ள பொதுவுடமையே' என்றவர் பெரியார்.

உலகச் சிந்தனையாளர்கள் அனைவரோடும் ஒத்துப்போன பெரியார், டார்வினிசத்திடம் தான் வேறுபடுகிறார். ‘வலிமையானவை அனைத்தும் வென்று வாழும்' என்பது டார்வினிசம்.

'எல்லா உயிரினமும் வாழத் தகுதியானவை ' என்றார் பெரியார். அவரது மனிதநேயம் இந்த இடத்தில் தான் உயர்ந்து நிற்கிறது. வலிமையானவன், உயர்ந்தவன், பணக்காரன், உயர் பதவியில் இருப்பவன் மட்டுமல்ல, அடக்கப்பட்டவன், தாழ்ந்தவன், ஏழை, ஏதுமற்றவன் - இவன் வாழத்தகுதி வாய்ந்தவன் தான். அதனால் தான் அனைத்துயிர்க்கும் தான் இந்த உலகம் என்றார்.

“பெரியாரிடமிருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?” - தத்துவஞானிகளுடன் ஒப்பிட்டு ப.திருமாவேலன் உரை!

அவரிடம் இருந்து இந்த சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய மனிதநேய அரசியல் இதுதான். வலிமையானது பிழைக்கும் என்பது உலக நியதியாக இருக்கலாம்.

ஆனால் பலவீனமானதற்கும் சேர்ந்தது தானே இந்த உலகு?சாதியால் ஒடுக்கப்பட்ட சாதிக்கு பெரியார் பேசியது சமூக மனிதநேயமே.

மதத்தால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்காக பேசியது சமுதாய மனிதநேயமே. ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக பேசியது பால் மனிதநேயமே.

பெரும்பான்மை இனத்துக்கு எதிராக சிறுபான்மை தேசிய இனத்துக்காக அவர் பேசியது இனச்சார்பு மனிதநேயம். ஆதிக்க மொழிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மொழிக்காக பேசியது மொழி ஆதரவு மனிதநேயம்.

அவரது வாழ்க்கை, போராட்டம் , கொள்கை அனைத்துமே மனிதநேய அரசியல் தான். 'இந்த உலகத்தை யார் வேண்டுமானாலும் ஆளட்டும், ஆனால் அனைவரையும் ஒரே மனிதராக நடத்தட்டும்' என்றார் பெரியார்.

“பெரியாரிடமிருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?” - தத்துவஞானிகளுடன் ஒப்பிட்டு ப.திருமாவேலன் உரை!

உலகில் இப்படி ஒருவர் சொல்லி இருக்கமாட்டார். யாராலும் சொல்ல முடியாததைச் சொன்னார். அதனால்தான் அவர் பெரியார்.

அதனால் தான் அவரை தமிழர்களைத் தாண்டி, இந்தியர் தாண்டி, தெற்காசியா தாண்டி உலகமே தங்களது நாட்டைச் சேர்ந்தவராகக் கொண்டாடுகிறது.

முதலில் நான் சொன்னதையே இறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். இயற்கையைப் போலவே எல்லாருக்கும் பொதுவானவர் பெரியார்.”

இவ்வாறு ப.திருமாவேலன் பேசினார்.

banner

Related Stories

Related Stories