ஒரு முறை தந்தை பெரியார் திறந்த காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்மீது அவருக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு செருப்பை வீசினான். அஃது பெரியாரின் மடி மீது விழுந்தது. அவர் அதை எடுத்து நோக்கியபோது அது புதியதாக இருந்தது.
வண்டியோட்டியிடம் ‘வண்டியைத் திருப்பு; மற்றொன்று சாலையில் கிடக்கும்; அதை எடுத்து வரலாம்! அது ஒருவருக்கும் பயன்படாது; இது நமக்கும் பயன்படாது. இரண்டும் நம் கைக்குக் கிட்டினால் நமது அலுவலகத்தில் யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறி சாலையில் கிடந்த மிதியடியை எடுத்து வந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பேராசிரியர் சுப்புரெட்டியார் என்பவர் தந்தை பெரியாரைப் பார்த்து ‘செருப்பு உங்கள் மீது பட்டும் கோபம் வரவில்லையே ஏன்?’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘தம்பி, பொதுத்தொண்டில் இருப்பவர்கட்கு இது போன்றவை அடிக்கடி நிகழக்கூடியவை. படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப் பேசுவான்; அல்லது செய்தித்தாளில் மறுப்பு தெரிவிப்பான். இவன் படிக்காத முட்டாள். இவன் தன் எதிர்ப்பைச் செருப்பு மூலம் காட்டினான். இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கின்றது?’ என்று அமைதியாகக் கேட்டார்.
29-07-1944 அன்று கடலூரில் நடந்தது இந்த செருப்புவீச்சு சம்பவம். இதுகுறித்து விடுதலை இதழில் செய்தியும் வெளியாகி உள்ளது.
இதற்குப் பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972ம் ஆண்டு, கலைஞர் ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டது. கலைஞர் இந்த சிலையை பெரியார் முன்னிலையிலேயே திறந்து வைத்தார்.