முரசொலி தலையங்கம்

471 நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தனிமனித உரிமையும்தான் - முரசொலி !

471 நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தனிமனித உரிமையும்தான் - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் ( 28-09-2024)

471 நாட்கள்...

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, பிணை வாங்கும் உரிமையைக் கூடத் தடுத்து 15 மாத காலம் சிறை வைத்திருந்தது அமலாக்கத்துறை. 471 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வு அளித்த தீர்ப்பின் மூலமாக செந்தில் பாலாஜி வெளியில் வந்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி பிணையில் வெளியில் வந்துள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல, “எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது” என்பதுதான் உண்மை. எமர்ஜென்சி காலத்தில் சிறை வாழ்க்கை என்பது ஓராண்டு காலம்தான். அதையும் தாண்டிய அளவுக்கு விசாரணைக் கைதியாகவே உள்ளே வைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. “ஜாமீன் வழங்குவது என்பது விதிமுறைகளில் ஒன்றாகும். சிறையில் வைத்திருப்பது விதிவிலக்குகளாகவே இருக்க வேண்டும்” என்று செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பில் மீண்டும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. “விசாரணை இன்றி ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது. அமலாக்கத் துறை பணப் பரிவர்த்தனை சட்டம் பிரிவு 45 (1) ஐ அதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தி நீண்ட காலமாக சிறையில் வைப்பது நியாயமற்றது. அதனை ஏற்க முடி யாது” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது அரசியல் சாசனப் பிரிவு 21க்கு எதிரானது. அடிப்படை உரிமையை மீறுவதாகும்" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. “ செந்தில் பாலாஜி 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போதைய அமலாக்கத்துறை உள்ளிட்ட வழக்குகளை நடத்தி முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். அதற்குள் விசாரித்து முடிக்க வாய்ப்பில்லை. அதற்கு மேல்கூட ஆகலாம். எனவே தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது அரசியல் சாசனப் பிரிவு 21 ன் படி அடிப்படை உரிமைக்கு எதிரானது” என்று கூறி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இவை தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

471 நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தனிமனித உரிமையும்தான் - முரசொலி !

வழக்கின் தன்மைக்குள் நாம் போக விரும்பவில்லை. அது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. அப்படி ஒரு வழக்கை வைத்து, செந்தில் பாலாஜிக்கு எத்தகைய கொடூரத்தை அமலாக்கத்துறை மூலமாக பா.ஜ.க. அரசு அரங்கேற்றியது என்பது அச்சம் தருவதாகும். இது செந்தில் பாலாஜிக்கு மட்டும் நடந்த தனிப்பட்ட செயலாகப் பார்க்க முடியாது. “நாங்கள் நினைத்தால் யாரையும் கைது செய்வோம், பிணை வழங்க விடாமல் வாழ்நாள் எல்லாம் சிறை வைப்போம்' என்று காட்டுகிறது பா.ஜ.க. தலைமை.

முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அமைச்சர் பதவியில் இருக்கும் போதே செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைத்தவர்கள்தான். ஆனாலும் ஜாமீன் கொடுக்க விடாமல் முடிந்த வரை அமலாக்கத்துறையால் தடுக்கப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம்தான் அமலாக்கத்துறையின் உச்சந்தலையில் கொட்டியது. “விசாரணையின்றி நீண்ட காலம் ஒருவரை அமலாக்கத்துறை சிறையில் வைக்கக் கூடாது. சட்டபூர்வமான ஜாமீன் உரிமையை மறுக்கக் கூடாது. விசாரணையின்றி நீண்ட காலம் ஒரு- வரை அமலாக்கத்துறை சிறையில் வைக்க முடியாது. குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யாமல் ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைக்க முடியாது. ஜாமீனைத் தடுப்பதற்காக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் இருக்கக் கூடாது” - என்றும் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் ஒரு வழக்கில் எச்சரித்தார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

471 நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தனிமனித உரிமையும்தான் - முரசொலி !

செந்தில் பாலாஜிக்கு பிணை கேட்கும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போது, அவர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “செந்தில் பாலாஜியை பா.ஜ.க.வில் சேரச் சொல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். அதனை அமலாக்கத்துறையும் மறுக்கவில்லை. பா.ஜ.க. தலைமையும் மறுக்கவில்லை. பெரிதாகப் பேசப்படும் டெல்லி கலால் கொள்கை வழக்கில், “100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றால் அந்தப் பணம் எங்கே? அதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேட்டது உச்சநீதிமன்றம். இதுவரை அமலாக்கத்துறையால் ஆதாரத்தைத் தர முடியவில்லை. “இந்த வழக்கில் இதுவரை ஏதாவது சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?” என்று நீதிபதிகள் கேட்டார்கள். பதில் சொல்ல முடியவில்லை அமலாக்கத்துறையால். இவைதான் இது போன்ற வழக்கின் தன்மைகள் ஆகும்.

பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக ஜோடிக்கும் வழக்குகள் இவை என்பதற்கு இதற்கு மேல் ஆதாரம் தேவையா? மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய ஒரு நிறுவனம், பா.ஜ.க.வுக்கு 55 கோடி தேர்தல் நிதியாக கொடுத்துள்ளது என்று ‘ஆம் ஆத்மி' குற்றம் சாட்டியது. அதற்கும் பா.ஜ.க. தலைமையால் பதில் அளிக்க முடியவில்லை. “பா.ஜ.க. அரசு சோதனை நடவடிக்கைகள் நடத்திய 30 நிறுவனங்கள் மூலமாக 335 கோடி ரூபாயை தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் சொன்னார். அதற்காவது பதில் சொன்னார்களா என்றால் இல்லை. 'வேட்டைக்குப் பயன்படுத்துகிறார்கள்' என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டுவதை பா.ஜ.க.வால் மறுக்க முடியுமா? "முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் விசாரணையையே தொடங்காமல் சிறை வைப்பது உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் பாதுகாப்பை வலியுறுத்- தும் அரசியல் சட்ட பிரிவுக்கே எதிரானது” என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதன் மூலமாக, 471 நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது இந்த நாட்டின் சட்டமும், நீதியும் தனிமனித உரிமையும்தான்.

banner

Related Stories

Related Stories