முரசொலி தலையங்கம் (18-09-2024)
முன்னேற்றக் கழகம் முன்னேறிச் செல்க ! - 2
18 ஆண்டுகள் கழித்துதான் கழகம் ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும் சீக்கிரமே ஆட்சிக்கு வந்துவிட்டதாக நினைத்தார் அந்தப் பெருந்தகையாளர். 'இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஆட்சிக்கு வந்திருக்கலாம்' என்று நினைத்தார் அண்ணா. கழகத்தவர்க்கு அண்ணனாக இருந்தவரை 'தமிழ்நாட்டின் அண்ணனாக' போற்றினார்கள் மக்கள். 'உங்கள் உயரம் எங்களுக்குத் தெரியும்' என்றார்கள் மக்கள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரம் தேவை என்பதற்காகவே தனி இயக்கம் கண்டார் அண்ணா. அதை நிறைவேற்றிக் காட்ட இயற்கை அவருக்கு இடமளிக்காத நிலையில், அவர் இதயத்தை இரவலாகப் பெற்ற தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தையும் வழிநடத்தினார். ஆட்சியையும் நிலைநிறுத்தினார்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - ஆகியோரின் கனவுகளை மட்டுமல்ல, தனது கனவுகளையும் சேர்த்து கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடுதான் இன்றைய நவீன தமிழ்நாடு. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர். கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு முன்னேறி இருப்பதை உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் பாராட்டி எழுதி இருக்கிறார். “காலம்காலமாக சுயமரியாதை அரசியல் பேசிய மாநிலம் என்பதால் அதனை அடியொற்றி அங்கு நடந்த ஆட்சிகள் இதனை சாதித்துக் காட்டியது” என்று அமர்த்தியாசென் சொன்ன சொல் என்பது தமிழினத் தலைவர் கலைஞருக்கு கிடைத்த பாராட்டுப் பத்திரம் ஆகும்.
"கலைஞர் கருணாநிதியின் அரசியல் அண்ணாவின் அரசியலை அடியொற்றியதாக அமைந்தது. ஏழைகளுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு ஆதரவான, சாமானிய மக்களுக்கு ஆதரவான, சாதியத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரான கொள்கைகளின் வழியே ஆட்சியதிகாரத்தை அணுகுவது தான் அந்த அரசியல்.” என்று சொன்னவர் அண்ணல் காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். இதை விட மிகச் சரியாய் கலைஞரின் சாதனையைச் சொல்ல முடியாது. 1971, 1989, 1996, 2006 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்று தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, ஆட்சிக்காலம் முழுக்க சாதனைக் காலமாக மாற்றியவர் கலைஞரே. அதே பொழுதுகளில் 1969 முதல் 2018 வரையிலான ஐம்பது ஆண்டு காலத் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காத்த காப்பரண் கலைஞரே!
காலம் கடைசிக் கட்டம் வரை அவரை வேலை வாங்கியது. அவர் தன்னில் இருந்து எடுத்து ஒரு தலைவரை உருவாக்கியதைப் போல ஒரு தலைவரை வழங்கிவிட்டுச் சென்றார். அவர்தான் ‘திராவிட மாடல்” முதலமைச்சராக இன்று இந்தியா போற்ற உயர்ந்திருக்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர் கையில் தலைமைப் பதவி வந்தது. கழகத்தை வெற்றிக் கழகமாகவே உயர்த்தினார். அவர் கையில் முதல்வர் பதவி வந்தது. இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறார். உலக நிறுவனங்கள், தமிழ்நாட்டை நோக்கி வருகிறது.
போன 'ஃபோர்டு' திரும்ப வருகிறது. திரும்பவும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது என்பதால்தான்! சுயமரியாதை - சமூகநீதி - சமத்துவம் -சகோதரத்துவம் - மதச்சார்பின்மை - கூட்டாட்சித் தத்துவம் - அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் - அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை - ஆகியவை தான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம் ஆகும் என்று அறிவித்து 'திராவிட மாடல்' இலக்கணத்துடன் ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“தந்தை பெரியார் காலத்தில் பேசியது சமூகசீர்திருத்தம். நாம் இன்று நடைமுறைப்படுத்தி வருவது சமூக வளர்ச்சி. சீர்திருத்தத்தின் அடுத்த பரிமாணம்தான் இன்றைய கழக அரசு உருவாக்கி வரும் சமூக, அரசியல்,பொருளாதார, கல்வி, தொழில் வளர்ச்சியாகும். இதைத் தான் திராவிட மாடல் என்கிறோம். ஒரு சீர்திருத்த இயக்கம் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய கொள்கையை சட்டமாகவும் திட்டமாகவும் நிறைவேற்றுமோ அவை அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும்” என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வருகிறார் முதலமைச்சர். அடக்கப்பட்டோர், முடக்கப்பட்டோர், மனிதன் என்று சொல்லவிடாமல் அழிக்கப்பட்டோர், புழுக்களாக மிதிக்கப்பட்டோர், மான உணர்வு கொள்வது பாவமெனத் தண்டிக்கப்பட்டோர், சாக்கடைப் பன்றிகளை விட கேவலமாகத் தள்ளப்பட்டோர், எள்ளி நகையாடப்பட்டோர், காறி உமிழப்பட்டோர், இவர்களை முன்னேற்றவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் என்றார் கலைஞர். இன்று எங்கு திரும்பினாலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவியல் ஆராய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முனைவர்கள், தொழில் அதிபர்கள், அதிகாரமுள்ளோர், ஆட்சிப் பணி அதிகாரிகள், காவல் பணி அதிகாரிகள்... இவை தான் ஐம்பது ஆண்டுகள் முன்னேற்றக் கழகம் இந்த நாட்டை மாற்றிய காட்சிகள் ஆகும்.
ஆட்சியின் மூலமாக காட்சி மாறியது. ஜாதித் தெருக்கள் சாதித்தவர்களின் தெருக்களாக மாறி இருக்கிறது. “எல்லார்க்கும் எல்லாம் இங்கிருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் யாரும் நிகர் அனைத்தும் சமபங்கு என்று ஓடும் நகர் நோக்கி ஓடும் தமிழ்நாடு” என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே முன்னேற்றக் கழக ஆட்சியின் இலக்கணம் ஆகும். திராவிட மாடல் ஆட்சியானது அனைத்திலும் முன்னேற்றம் காணும் ஆட்சியாக நடைபெற்று வருகிறது.
75 ஆண்டுகளுக்கு முன்னால் எதிர்மறை ஆரூடங்கள் சொன்னவர் எங்கே? யார்? 'அண்ணாத்துரையும் பேசினார்' என்று 'பிட்' எழுதிய சப் எடிட்டர் எங்கே போனார்? ஒரு தேர்தலில் தோற்றதும், 'இனி கருணாநிதி காலம் முடிந்தது' என்று அட்டைப்படம் போட்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னவானார்? 'மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை' என்ற ஜோசியரின் ஜாதகம் என்ன ஆனது? அவர் தொடங்கினார், இவர் தொடங்கினார், அவர் பிரிந்தார், இவர் பிரிந்தார், அவர் விலகினார், இவர் விலகினார் என்பது அனைத்தும் அன்றாடச் செய்தியாக பொட்டலம் மடிக்கப்பட்டன.தி.மு.க. என்ற மூன்றெழுத்து மட்டுமே பவள விழா காண்கிறது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கழகமாக பவள விழா கொண்டாடுகிறது. உன்னத தமிழ்நாட்டை உருவாக்கும் நகர்வோடு பவள விழா கொண்டாடுகிறது. கழகத்தை உருவாக்கிய தலைவர்கள் வாழ்க! உயிரை ஈந்து கழகம் வளர்த்த தியாகிகள் வாழ்க! பவள விழா என்பது உங்களது தியாகங்களைப் போற்றும் திருநாள். உங்களது உழைப்பைப் போற்றும் பெருநாள். வாழ்க்கையைத் தந்து வாழ வைத்த தீரர்களை வணங்கி பவள விழாவைக் கொண்டாடுவோம். முன்னேற்றம் காண்க, முன்னேற்றக் கழகம்!