முரசொலி தலையங்கம்

மீண்டும் மயான பூமியாக மாற்றப்பட்டு வரும் மணிப்பூர் : முரசொலி தலையங்கம்!

ஒன்றிய அரசிடம் இருந்து மிகப்பெரிய உதவி வந்ததாக வெளிப்படையாகத் தெரியவில்லை. தெரிவிக்கப்படவில்லை. வரம்பு மீறிய வன்முறைக்கு தயாராகவே மணிப்பூர் இருக்கிறது.

மீண்டும் மயான பூமியாக மாற்றப்பட்டு வரும் மணிப்பூர் : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (13-09-2024)

மீண்டும் மீண்டும் மணிப்பூர்!

‘மீண்டும் மணிப்பூர்’ என்று மீண்டும் மீண்டும் எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை தொடங்கி விட்டது என்ற செய்தி வந்த அதே நாளில், “ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் அறிவுரை வழங்க இந்தியா தயார்” என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், பெர்லினில் போய் சொல்லி இருக்கிறார். ரஷ்யா - உக்ரைன் போருக்குத் தீர்வு காண நம்பத்தகுந்த நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சொல்லி இருந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியலையாம், வானம் ஏறி வைகுண்டம் காட்டுவாராம்’ என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்று.

மணிப்பூரில் இரு குழுவினருக்கு இடையிலான மோதலை ஓராண்டு காலமாக தீர்க்க முடியாதவர்கள் ரஷ்யா -–உக்ரைன் என்று கிளம்பிவிட்டது வேதனையான வேடிக்கையாகும்.

2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. காங்போக்பி மாவட்டத்தில் இரண்டு குகி சமுதாயப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். அவர்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் அழைத்து வந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனை வேடிக்கை பார்த்தார்கள். படம் பிடித்தார்கள். இதை பொதுவெளியில் வெளியிட்டார்கள். இவை அனைத்தையும் மணிப்பூர் பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்த்தது. நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள். வன்முறைகள் எழும், அடங்கும். எழும், அடங்கும். இதுதான் ஓராண்டு காலமாக நிலைமை ஆகும்.

இந்த மாநிலத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே ஒரு முறை ஒப்புக்குப் போய்விட்டுத் திரும்பினார். பிரதமர் நரேந்திரமோடி போகவே இல்லை. நேரமில்லை!

மணிப்பூரில் தொடங்கிய முதல் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஒரு சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை மட்டுமே அது.

“2023 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் இரண்டு குகி சமுதாயப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லும் போது மணிப்பூர் காவல் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தார்கள்” என்று சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிக்கையில் சொல்லி இருக்கிறது. அசாம் மாநிலம் குவாஹாட்டி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் நடந்தபிறகு, அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன்சிங் மீது எந்த நடவடிக்கையும் பா.ஜ.க. தலைமை எடுக்கவில்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே அவர் மீது புகார் சொன்னார்கள். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. ‘இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளது’ என்று, பிரேன்சிங் சொன்னதையும் பார்த்தோம். தன்னை பா.ஜ.க. தலைமை ஏதும் செய்யாது என்று பிரச்சினையை அப்படியே விழுங்கப் பார்த்தார் பிரேன்சிங். ஆனால் பிரச்சினை, ஓராண்டு காலமாக அப்படியேதான் இருக்கிறது.

மீண்டும் மயான பூமியாக மாற்றப்பட்டு வரும் மணிப்பூர் : முரசொலி தலையங்கம்!

மைத்ரி - குகி ஆகிய இரு சமூகத்தினர் இடையிலான மோதலை மாநில பா.ஜ.க. அரசாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசாலும் நிறுத்த முடியவில்லை. இரு சமூகத்தைச் சேர்ந்த தீவிர அமைப்பினரும் தொடர்ந்து மோதிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவரை 200 பேர் மரணம் அடைந்துள்ளார்கள். இரண்டு தரப்பும் துப்பாக்கி வைத்துள்ளது. நேருக்கு நேராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதன் உச்சகட்டமாக, ட்ரோன் மூலம் குண்டுகள் வீசுவது தொடங்கி உள்ளது. இராணுவத்தில் இருக்கும் ராக்கெட் லாஞ்சுகளையும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து நடத்திய தாக்குதலில் சில வாரங்களுக்கு முன் 8 பேர் கொல்லப்பட்டார்கள்.

காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய இரு தரப்புக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு தரப்பும் வெடிகுண்டுகளை வீசி இருக்கிறார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் இருந்த மக்கள் காட்டுக்குள் போய் பதுங்கி விட்டார்கள். இப்படி பல மாவட்டங்களில் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

எப்போது எந்தப் பக்கம் இருந்து யார் ராக்கெட் லாஞ்ச் ஏவுவார்கள் என்ற பதற்றத்தோடு மணிப்பூர் இருந்த நிலையில், மாணவர் போராட்டம் தொடங்கி விட்டது.

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கத் தவறிய காவல் துறை தலைமை இயக்குநர் ராஜீவ் சிங், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் ஆகியோரை பதவி விலகச் சொல்லி ஆளுநர் மாளிகையை நோக்கி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், கடந்த 10ஆம் தேதி அன்று ஊர்வலம் போனார்கள். இதில் பெண்களும் அதிகமாகக் கலந்து கொண்டார்கள். அவர்களை பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தி இருக்கிறது. இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு 40 பேர் காயம் அடைந்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டுள்ளது.

மாநில பா.ஜ.க. அரசுக்குத் தெரிந்த ஒரே நடவடிக்கை, இணைய தள சேவையை முடக்குவது ஆகும். மோதல்கள் அதிகம் ஆனதும் மணிப்பூர் முழுவதும் இணைய தள சேவையைத் துண்டித்து விட்டார்கள். இம்பால் மேற்கு, கிழக்கு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தெளபால் மாவட்டத்தில் ஆட்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மணிப்பூர், மயான பூமியாக மாற்றப்பட்டு வருகிறது.

இதன் பிறகுதான் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங். ‘எங்கள் மாநிலத்தில் ஒற்றுமையை, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். ஆளுநரை அமைச்சர்களுடன் போய் பார்த்திருக்கிறார் முதலமைச்சர். அதன்பிறகும் ஒன்றிய அரசிடம் இருந்து மிகப்பெரிய உதவி வந்ததாக வெளிப்படையாகத் தெரியவில்லை. தெரிவிக்கப்படவில்லை. வரம்பு மீறிய வன்முறைக்கு தயாராகவே மணிப்பூர் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் ரஷ்ய - உக்ரைன் போரை தடுக்கப் போகிறார்களாம். வெட்கம்! வெட்கம்!

banner

Related Stories

Related Stories