முரசொலி தலையங்கம்

நிர்மலா சீதாராமன் கண்ணை உறுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : முரசொலி தலையங்கம்!

'இது உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை' என்றார் முதலமைச்சர். உரிமை பெற்ற பெண்களாக கோடிக்கும் மேற்பட்ட பெண்களை ஆக்கி இருக்கிறது மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

நிர்மலா சீதாராமன் கண்ணை உறுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (07-09-2024)

ஆயிரம் நிதியும் நிதி அமைச்சரும்

மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி தருவது கூட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பொறுக்கவில்லை. அதிலும் கை வைக்கத் துடிக்கிறார்!

இரண்டு இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனபிறகும் நிவாரண நிதி கொடுக்காமல் 'டிமிக்கி' கொடுத்துவரும் நிர்மலா சீதாராமனுக்கு, மகளிர் உரிமைத் தொகையைப் பார்த்தால் கண் உறுத்துகிறது. “பெண்களுக்கு மாதம்தோறும் பணம் கொடுப்பதால் மட்டும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது. அவர்களுடைய தொழில்திறனை மேம்படுத்துவதன்மூலம் தான் பெண்களை அசைக்க முடியாத சக்தியாக மாற்ற முடியும்” என்று சென்னைக்கு வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாயை பிரதமர் மோடி வழங்குகிறார். அவரிடம் போய், "ஆண்டுக்கு 6000 ரூபாய் கொடுப்பதால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது” என்று சொல்லும் துணிச்சல் நிர்மலா சீதா ராமனுக்கு இருக்கிறதா? இந்த நிதியை ஆண்டுதோறும் விடுவிப்பதே நிர்மலாவின் நிதித்துறை தானே? பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதால் ‘அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைகிறதா என்று அதனைப் பெறும் மகளிரிடம் போய் ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள் கேட்க வேண்டும். ஒரு குவளைத் தண்ணீர், ஒரு உயிரைக் காப்பாற்றுமா? உயிர் வறண்டுபோகும் நிலையில் இருக்கும் மனிதரிடம் கேளுங்கள். ஒரு குவளைத் தண்ணீர்தான் அவன் உயிரைக் காப்பாற்றி இருக்கும்!

ஒரே ஒரு கவளம் சோறு, ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்குமா? பெருங்குடல், சிறுகுடலைக் கவ்வும் நிலையில் இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். ஒரு கவளம் சோறுதான் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி இருக்கும்! சிறுசிறு மழைத்துளி, பெருநிலப் பரப்பை உயிர்ப்பித்து இருக்குமா? வானத்தை நோக்கித் தவம்கிடந்த மண்ணை, சிறுசிறு மழைத்துளிகளே காத்து வருகின்றன.

அப்படித்தானே அமைந்துள்ளது ஆயிரம் ரூபாய்? இதில் நிர்மலா சீதாராமனுக்கு என்ன வந்தது? அவரிடம் கேட்பது இல்லையே? அவரிடம் இருந்து வரும் பணத்தால் தருவதாக இருந்தால், ஒரு மாதம்கூட கணக்கில் போட முடியாதே? ‘அப்பன் வீட்டுப் பணமா?' என்று கேட்பாரே அவர்!

‘தாயினும் சாலப் பரிந்து - எல்லார்க்கும் எல்லாம்' என்ற இதயமுள்ள இலக்கோடு 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் - பதவியேற்றுக் கொண்டதும் - மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்பாடு செய்து கொடுத்தார். ‘699 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை மாதம் தோறும் எங்களுக்கு மிச்சம் ஆகிறது, என்கிறார்கள் மகளிர்.

‘பஸ்ஸுக்குப் பணமில்லை, அதனால் படிக்கப் போகவில்லை, அதனால் வேலைக்கு போகவில்லை' என்ற முடக்கத்தில் இருந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு விடியலை ஏற்படுத்தினார் முதலமைச்சர் அவர்கள்.

அதன் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட திட்டம்தான் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய். ‘எங்க அண்ணன் ஸ்டாலின் மாதம் தோறும் வழங்கும் தாய் வீட்டுச் சீர்” என்று பெண்கள் அளித்த பேட்டியை ஒன்றிய நிதி அமைச்சர் பார்த்திருக்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன் கண்ணை உறுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : முரசொலி தலையங்கம்!

‘தினமும் வீட்டு வேலைக்குப் போனேன், மாதம் 500 ரூபாய் கிடைத்தது. திடீரென்று உடல் நலமில்லை. இதனால் குண்டாக ஆகிவிட்டேன். வீட்டு வேலைக்கு இப்ப யாரும் என்னைக் கூப்பிட மறுத்துவிட்டார்கள். என்னடா பண்றதுன்னு முடங்கிக் கிடந்தேன். அடுத்த மாசத்துல இருந்து ஸ்டாலின் அய்யா ஆயிரம் ரூபா அனுப்ப ஆரம்பிச்சாங்க' என்று காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் அளித்த பேட்டியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்திருக்க வேண்டும். ‘எனக்கு வேண்டியதை என் மகனிடம் கேட்காமல், நானே வாங்கிச் சாப்பிடுறேன்' என்று ஒரு தாய் சொல்லும்போது கிடைப்பது அல்லவா, மேம்பாடு? "மாத்திரையிலதான் உயிர் வாழ்றேன் தம்பி. அந்த மாத்திரைகள் வாங்குறதுக்கு இந்த ஆயிரம் ரூபாயை பயன்படுத்திக்கிறேன் தம்பி” என்கிறார் ஒரு மூதாட்டி.

இவை எல்லாம் நிதியமைச்சரின் கண்ணுக்கு மேம்பாடாகத் தெரியவில்லையா? மேம்பாடு என்பது 'பிசினஸ் வுமன்'களாக ஆக்குவது மட்டும் தானா?

ஆணோ, பெண்ணோ சுயமரியாதையும் - தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக நினைக்க வைப்பதும் - நிமிர வைப்பதும் தான் மேம்பாடு ஆகும். அத்தகைய மேம்பாடு தான் முக்கியம். அதனைத் தான் உருவாக்கித் தருகிறது கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். 'இது உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை' என்றார் முதலமைச்சர் அவர்கள். உரிமை பெற்ற பெண்களாக கோடிக்கும் மேற்பட்ட பெண்களை ஆக்கி இருக்கிறது இந்தத் திட்டம். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது, மாண்புமிகு முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களில் அதுவும் ஒரு திட்டம். மகளிருக்கு சொத்தில் பங்கு தரும் சட்டம் போட்டது தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. மகளிருக்கு கோடிக்கணக்கான தொகைகள் கடனாக வழங்கி சுய தொழில்கள் செய்ய ஊக்குவித்தது தி.மு.க. மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிகமாக உருவாக்கியும், அதிகமாக கடன் வழங்கியும் சாதனை படைத்தவர்தான்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிப் படிப்பை எட்ட முடியாத மாணவியருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தைக் கொண்டு வந்த புரட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மாணவிகள் கல்லூரிகளில் சேருவது 34 விழுக்காடு அதிகம் ஆகி இருக்கிறது. இதுவல்லவா மேம்பாடு?

ஒன்றிய நிதி அமைச்சர், தான் கலந்துகொண்ட மாநாட்டின் தலைப்பை ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும். ‘வளர்ந்து வரும் பெண்கள் - சந்திக்கும் தடைகள்' குறித்த மாநாடு அது. ஆயிரம் ரூபாய் என்பது பெண்களின் தடைகளை உடைக்கும் நிதி ஆயுதம்! ‘என்னிடம் பணமில்லை, அதனால் தேர்தலில் போட்டியிட வில்லை' என்று நிர்மலாவைப் புலம்பவிட்டார் மோடி. தமிழ் நாட்டுப் பெண்களை புலம்ப விடவில்லை முதலமைச்சர்.

banner

Related Stories

Related Stories