அடிமைகள் என்று அழைத்தது ஏன்?
பா.ஜ.க.வின் அடிமையாக, கொத்தடிமையாக அ.தி.மு.க. இருக்கிறது என்று சொன்ன போதெல்லாம், அதை மகா யோக்கியரைப் போல மறுத்த பழனிசாமி, இப்போது அவரது வாயால் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
“மாநிலங்களவையில் பல மசோதாக்களை நிறைவேற்றத் தேவை இருக்கும் போது, அ.தி.மு.க. நல்ல கட்சியாகத் தெரிந்தது. கூட்டணி முறிந்த பிறகு கெட்ட கட்சியாகத் தெரிகிறதா?’ - என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி. பா.ஜ.க. சொல்வதற்கு எல்லாம் பழனிசாமி தலையாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதால்தான், ‘பா.ஜ.க. வின் பாதம் தாங்கி பழனிசாமி’ என்கிறோம். ஆமாம்! நான் பாதம் தாங்கிதான் என்பதை அவரே இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சிறுபான்மை சமூகத்துக்கும் இலங்கைத் தமிழர்க்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்த கட்சிதான் அ.தி.மு.க..
மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த வர்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சந்திரசேகரன், முகமது ஜான், முத்துக்கருப்பன், நவநீதகிருஷ்ணன், சசிகலா புஷ்பா, செல்வராஜ், வைத்திலிங்கம், விஜயகுமார், விஜிலா சத்தியானந்த் ஆகிய 10 அ.தி.மு.க. எம்.பி.க்கள் அன்று ஆதரித்து வாக்களித்தார்கள். இவர்களோடு ‘பாட்டாளி’ அன்புமணி ராமதாசும் வாக்களித்து துரோகம் இழைத்தார். இவர்களால் தான் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் மாநிலங்கள் அவையில் நிறைவேறியது.அதாவது ஆதரித்தவர்கள் 125 பேர். எதிர்த்து வாக்களித்தவர்கள் 105 பேர். அன்புமணி மற்றும் அந்த 10 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமை சட்டம் நிறைவேறக் காரணம்.
அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் எதிர்த்தவர்கள் 116 பேர் என்றும் ஆதரித்தவர்கள் 114 பேர் என்றும் வந்திருக்கும். குடியுரிமைச் சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். 116 க்கும் 114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். இந்த பித்தலாட்டத்தைச் செய்த பழனிசாமிதான், ‘நல்ல கட்சியாக அன்று தெரிந்தோமா?’ என்கிறார். இதுதானே கொத்தடிமைத் தனத்துக்கான சாட்சி?
‘குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே? எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்? காட்டுங்கள்?” என்று கேட்டாரே பழனிசாமி.
சட்டமன்றத்தில் 2021 பிப்ரவரி 20 ஆம் தேதி, குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பெரிய வகுப்பு எடுத்தாரே பழனிசாமி? அவரை வகுப்பெடுக்கச் சொன்னதா பா.ஜ.க.?
2021 செப்டம்பர் 8 அன்று, ‘நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தார்கள். இந்த தனித் தீர்மானத்தை சட்டமன்றத்துக்குள் இருந்து அ.தி.மு.க. ஆதரித்திருக்க வேண்டும். அல்லது தீர்மானத்தை எதிர்த்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. வேறு ஒரு காரணத்தைச் சொல்லி முன்னதாகவே வெளிநடப்பு நாடகத்தை நடத்தி வெளியேறி விட்டார்கள். வெளியேறச் சொன்னதா பா.ஜ.க.? அவர்தான் கூட்டணியில் இல்லையே? உள்ளே இருந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்தபோது பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு ஆதரித்தாரே பழனிசாமி? பா.ஜ.க. கூட்டணியில் அமைச்சரவையில் இடம்பெற்ற அகாலி தளம் கட்சியின் அமைச்சரே பதவி விலகுகிறார். ஆனால் பழனிசாமி ஆதரித்தார். ‘அது மிக நல்ல சட்டம், அது பற்றி நான் விவாதிக்கத் தயார், என்னிடம் விவாதிக்க வாருங்கள்’ என்று நிருபர்களையே சவாலுக்கு அழைத்தாரே பழனிசாமி. மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் எட்டு மாநில விவசாயிகளை, ‘அவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்’ என்று சொன்ன புரோக்கர் தானே பழனிசாமி?
‘நீட் தேர்வு வைத்தால் எழுதித்தான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று சொன்னவர்தான் பழனிசாமி. நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புக்கு அனுப்பி விட்டு, அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதைக் கூட ஒன்றரை ஆண்டுகள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்தது கொத்தடிமைத்தனம் அல்லவா?
முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிறகும், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு எல்லாம் கிடையாது. எல்லாரும் எழுதித்தான் ஆக வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்துவிட்டது. அதன்படிதான் நடத்துகிறோம். அனைத்து மாநிலத்தவரும் எழுதித்தான் ஆகவேண்டும்” என்று இவர்தான் தேர்வு முகமையைப் போல பேசினார் பழனிசாமி.
‘நானும் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டே மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தாரே பழனிசாமி. அது கொத்தடிமைத் தனத்தின் வெளிப்பாடு அல்லவா? ‘அது மிக நல்ல சட்டம், அது பற்றி நான் விவாதிக்கத் தயார், என்னிடம் விவாதிக்க வாருங்கள்’ என்று நிருபர்களையே சவாலுக்கு அழைத்தாரே பழனிசாமி. அது கொத்தடிமைத் தனத்தின் உச்சம் அல்லவா?
நீட் தேர்வா எழுதித்தான் ஆக வேண்டும் என்றும், எந்த இசுலாமியர் குடியுரிமை பறிக்கப்பட்டது என்றும், எந்த விவசாயி பாதிக்கப்பட்டார் என்றும் இவரே ‘சந்திரமுகியாக’ மாறியதைப் போல – பா.ஜ.க.வாக மாறிக் காட்சி அளித்தது தான் அவரது கடந்த காலங்கள் ஆகும்.
‘அப்போது நாங்கள் நல்ல கட்சி, இப்போது கெட்ட கட்சியா?’ என்று கேட்பது கூட, பா.ஜ.க.விடம் கழிவிரக்கம் தேடுவதே ஆகும். அவரிடம் கொத்தடிமைத் தனத்தின் எச்சங்கள் ஒட்டிக் கிடக்கின்றன. ‘என்னை ஏன் ஒதுக்குகிறீர்கள்?’ என்று இன்னமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. வெட்கமாக இல்லையா?
இப்போதும் பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் தான் பிரச்சினை. பழனிசாமிக்கும் பா.ஜ.க.வுக்கும் அல்ல.