முரசொலி தலையங்கம்

”இந்தியா முழுமைக்கும் ஒளிரப் போகிறது கலைஞரின் நாணயம்” : முரசொலி புகழாரம்!

கலைஞரின் நாணயம், இந்தியா முழுமைக்கும் ஒளிரப் போகிறது!

”இந்தியா முழுமைக்கும் ஒளிரப் போகிறது கலைஞரின் நாணயம்” : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (17-08-2024)

கலைஞர் நாணயம் ஒளிர்கிறது!

இந்த நூற்றாண்டின் நாயகராம் தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர், இந்திய அரசியல் வானில் மக்களாட்சி மாண்பின் அடையாளம் கலைஞரின் முகம் தாங்கிய நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 18 அன்று வெளியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை வகிக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். கலைஞரின் நாணயம், இந்தியா முழுமைக்கும் ஒளிரப் போகிறது!

எல்லாப் பொருளையும் அளவிடும் மதிப்பு மிக்கது ‘நாணயம்’. அதாவது பணம். ஆமாம்! கலைஞரும் எல்லா வகையிலும் அனைத்துக்கும் நிகரான மதிப்புடையவராகவே இருந்தார்.

முதல்வர்களுக்கு எல்லாம் இணையான முதல்வராக இருந்தார். அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அதிகமான அரசு ஆவணங்களில் கையெழுத்துப் போட்டவராக இருந்துள்ளார். தலைவர்களுக்கு இணையான தலைவராக இருந்தார். ஐம்பது ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்த பெருமையும் அவருக்கே உண்டு. கவிஞர்களுக்கு இணையான கவிஞராக இருந்தார். எவர் தலைமையிலும் கவி பாடியது இல்லை. அவர் தலைமையில்தான் பலரும் கவி பாடி இருக்கிறார்கள். இலக்கியத்தின் அத்தனை வகைகளையும் கையாண்டார்.

திரைவானிலும் நிகரற்ற ஆளுமையாக இருந்தார். அந்த வகையில் ‘நாணயத்தை’ போல மதிப்புடையவராக இருந்தார். ‘அமெரிக்க டாலருக்கு நிகரான’ என்று சொல்வதைப் போல மதிக்கத்தக்கவராக இருந்தார். அவருக்கு ‘நாணயம்’ வெளியிட்டுச் சிறப்பிக்கிறது இந்திய அரசு.

பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும், ஈயத்தாலும், இரும்பாலும் நாணயங்கள் வெளியிடுவது தொல்லியல் காலம் முதல் இருப்பது ஆகும். நாணயங்களை, நிதி மதிப்பாக மட்டுமல்லாமல் பண்பாட்டு அடையாளமாக தமிழ் மன்னர்கள் வெளியிட்டு இருப்பதைப் பார்க்கிறோம். நாணயங்களில்

எண்ணிக்கை மட்டுமல்ல, தமிழ் மன்னர்களின் எண்ணங்களும் இருக்கும். பல காசுகளில் மன்னர்களின் கலைப் பண்புகளைப் பார்க்கலாம். ஒரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுகளைப் போல நாணயங்களும் பயன்படுகின்றன.

சோழர் காசுகளில் புலியும், பாண்டியர் காசுகளில் மீனும், சேரர் காசுகளில் வில்லும் இடம் பெற்றிருந்தன. சிங்கம், புலி, மரம், பூக்கள், கும்பம், சங்கு, கப்பல், குதிரை, காளை, யானை, ஆமை, மீன், வில், அம்பு, தெய்வ உருவங்கள், என அனைத்தும் இருக்கின்றன தமிழ்நாட்டு நாணயங்களில். மன்னர்களின் பெயர்கள், பரம்பரை, சமயம், வழிபாடு, ஆட்சி மொழி, எழுத்து வகை ஆகிய அனைத்தும் இருக்கும்.

தமிழ்நாட்டில் ஏராளமான ரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை வெளியிடப்பட்டவை. கிரேக்கர்கள், சீனர்கள், தென்கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என பலரது நாணயங்களும் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. அப்படியானால் எந்தளவுக்கு அயலகத் தொடர்பு ஆதி காலத்திலேயே அன்னைத் தமிழ்நாட்டுக்குள் இருந்துள்ளது என்பதை அறியலாம்.

சோழப் பேரரசன் முதலாம் இராசராச சோழனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று, ‘உய்யக் கொண்டான்’ என்பது ஆகும். இதற்கு ‘காப்பான்’ என்று பெயர். இராசராசன் காலத்துப் பொற்காசு இதனைச் சொல்கிறது. ராணி மங்கம்மா வெளியிட்ட காசுகளில் நரசிம்மரின்மடியில் ஒரு மனித உருவம் படுத்திருந்த நிலையிலும், நரசிம்மர் அந்த மனித உருவத்தைக் கிழிப்பது போலவும் காட்சிகள் இருக்கும். வைணவம் தலை தூக்கி இருந்ததன் அடையாளம் இது. இவை அந்தந்த மன்னர்களின் காலக்கட்டத்தைச் சொல்கிறது.

”இந்தியா முழுமைக்கும் ஒளிரப் போகிறது கலைஞரின் நாணயம்” : முரசொலி புகழாரம்!

அதைப் போலத்தான் கலைஞரின் உருவம் தாங்கிய நாணயம், நாம் வாழும் காலத்தைச் சொல்கிறது. கடந்த ஐம்பது ஆண்டு கால நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி இவர்தான் என்பதை அடையாளம் காட்டும் வகையில் இருக்கப் போகிறது. ‘தமிழ் வெல்லும்’ என்பதையும் இந்த மனிதர்தான் மெய்ப்பித்தார் என்பதையும் ஆண்டாண்டு காலத்துக்கும் இருந்து சொல்லப் போகிறது இந்த நாணயம்.

அவர் காலம் பொற்காலமாக இருந்தது என்பதைச் சொல்லும் இந்த நாணயம். ஜெகஜீவன் ராம் சொன்னாரே, “கலைஞர் எந்த நாற்காலியில் அமர்கிறாரோ அந்த நாற்காலிக்குப் பெருமை” என்று. அத்தகைய கலைஞர் இவர்தான் என்பதை இந்த நாணயம் சொல்லும்!

“இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கலைஞர். ஏழைகள், சமூகத்தின் அடிநிலையில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவருடைய வீட்டுக் கதவும், அவருடைய காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று சொன்னார், பிரதமர் நாற்காலியைப் பற்றிக் கவலைப்படாத வி.பி.சிங். அத்தகைய சமூகநீதிக் காவலரால் போற்றப்பட்ட கலைஞர் இவர் தான் என்பதை இந்த நாணயம் சொல்லும்!.

“இந்திய தேசிய அரசியல் சதுரங்கத்தால் தவிர்க்கவே முடியாதவராகத் திகழ்ந்த ராஜதந்திரி கலைஞர்” என்று கலைஞரைச் சொன்னவர், இந்திய நாட்டின் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. அத்தகைய ராஜதந்திரி இவர்தான் என்பதை இந்த நாணயம் சொல்லும்!

இந்திய வரைபடத்தில் கீழே இருக்கிறது தமிழ்நாடு. அதில் இன்னும் கீழே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிதான் கலைஞர். ஒடுக்குமுறையை தான் வென்று வெளியே வருவது மட்டுமல்ல; தன்னைப் போன்ற அனைவரையும் வெளியே கொண்டுவந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்தான் கலைஞர். இது ரத்தம் சிந்தாப் புரட்சியாகும். இது ராணுவக் கருவி இல்லாப் புரட்சியாகும். உயிர் தராத புரட்சியாகும். அதன் அடையாளமானவர் யார் என்று வருங்காலத்துக்குச் சொல்லும் இந்த நாணயம்!

‘திராவிடத்தால் தமிழ் வெல்லும், தமிழன் வெல்வான், தமிழ்நாடு வெல்லும்’ என்பதன் அடையாளம் இந்த நாணயம்!.

banner

Related Stories

Related Stories