முரசொலி தலையங்கம்

அதானி மோசடி - ‘செபி’யின் முகத்திரையை கிழித்த ஹிண்டர்பர்க் : முரசொலி தலையங்கம்!

ஹிண்டன்பர்க் சொல்லித் தான் இந்திய நாட்டு மக்களுக்குத் தெரியவேண்டுமா என்ன?

அதானி மோசடி - ‘செபி’யின் முகத்திரையை கிழித்த ஹிண்டர்பர்க் : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16-08-2024)

மோசடியில் பங்குகள்!

பங்குச் சந்தை மோசடி வெளிச்சத்துக்கு வந்ததன் மூலமாக, மோசடியில் பங்குகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சிக்குரியதாக இந்திய அரசியலை ஆட்டுவிக்கத் தொடங்கி இருக்கின்றன. பங்குச் சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு பகிரங்கமாக குற்றம் சாட்டியது. அதற்கு அந்தக் குழுமத்தாலும், அந்தக் குழுமத்தின் பாதுகாவலர்களான பா.ஜ.க. தலைமையாலும் சரியான பதிலைத் தர முடியவில்லை. ‘இது குறித்து ‘செபி’ அமைப்பு விசாரிக்கும்’ என்று சொல்லி பிரச்சினையை மூடினார்கள்.

விசாரணை அமைப்பான ‘செபி’யின் முகத்திரையையும் ஹிண்டர்பர்க் அமைப்பு கிழித்து விட்டது.’ விசாரணை நடத்திக் கொண்டு இருப்பவரே அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளார் என்கிறது ஹிண்டன்பர்க்.

“செபி தலைவராக இருக்கும் மாதபி புச்சுக்கும் அதானி குழுமத்துக்கும் நிதித் தொடர்புகள் இருக்கின்றன. ‘செபி’ தலைவரான மாதபி புச்சும், அவரது கணவர் தவல் புச்சும் அதானி குழுமத்தில் பங்குகளை வைத்துள்ளார்கள். இவை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இருக்கின்றன. அப்போது மாதபி புச், ‘செபி’யின் முழுநேர உறுப்பினராக ஆகவில்லை. செபி தலைவராக ஆன இரண்டு வாரங்களில் தனது பங்குகளை தனது கணவரிடம் ஒப்படைத்துவிட்டார். இந்த தொடர்புகளால் தான் அதானி குழுமத்தின் மொரிஷியஸ் மற்றும் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் குறித்த விசாரணையில் செபி ஆர்வம் காட்டவில்லை” என்று ஹிண்டர்பர்க் குற்றம் சாட்டுகிறது. எந்தெந்த நிறுவனத்தில் எவ்வளவு பங்குகள் உள்ளது என்பதை அவர்கள் விரிவாக வெளியிட்டுள்ளார்கள்.

இதனை சி.பி.ஐ. அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. “பல கோடி இந்திய மக்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ‘செபி’ செயல்பட வேண்டும். அதானி குழுமம் பற்றிய குற்றச்சாட்டு குறித்து இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது. இதில் பல குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை கடந்த ஓராண்டு காலமாக செபி முடிக்கவே இல்லை. மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக செபி இப்படி நடந்து கொண்டது. இப்போது செபி தலைவர் மீதே பகிரங்கமாக குற்றச்சாட்டு வந்துவிட்டது. இனிமேல் செபி விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது. மாதபி புச், தனது தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதானி மோசடி - ‘செபி’யின் முகத்திரையை கிழித்த ஹிண்டர்பர்க் : முரசொலி தலையங்கம்!

வழக்கம் போல இந்த விவகாரத்தில் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்நியச் சதி, பொருளாதாரத்தை சீர்குலைக்கச் சதி என்று கூப்பாடு போடுகிறது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துள்ளது. “காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ‘டூல் கிட்’ நபர்களை வைத்து இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவும், நாட்டின் ஸ்திரத் தன்மையை நிலைகுலையச் செய்யவும் முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. இப்போது பங்குச் சந்தையை அவர்கள் குறிவைத்துள்ளனர். பொய்யாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வைத்து சதி வலையை விரித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.” என்று பா.ஜ.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கதறி இருக்கிறார்.

‘செபி’ தலைவரான மாதபிக்கு, அதானி குழுமத்தில் பங்கு இருந்ததா இல்லையா? இதுதான் கேள்வி. அதற்கு பதில் சொல்லவில்லை ரவிசங்கர் பிரசாத். இப்படிச் சொல்ல பா.ஜ.க.வுக்கு அருகதை இருக்கிறதா?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போலி கருத்துக் கணிப்பின் மூலம் மிகப்பெரிய பங்குச்சந்தை ஊழலை அரங்கேற்றியவர்கள் பங்குச் சந்தை சரிவை பற்றி கவலைப்படுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, “ஜூன் -4–-ம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்று உறுதி அளித்தார். மோடியை போலவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், “ஜூன் 4-–க்கு முன்பு பங்குகளை வாங்கி விடுங்கள். பங்குச் சந்தை உச்சம் தொடப் போகிறது” என்று சொன்னார். அந்த ஜூன் 4-–ம் தேதி அன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதன்பிறகு போலி கருத்துக்கணிப்புகளை அவிழ்த்துவிடத் தொடங்கினார்கள். பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், பா.ஜ.க. கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. அடுத்தநாளே இந்திய பங்குச்சந்தை புள்ளிகள் திடீரென புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 76,739 புள்ளிகளையும், நிப்டி 23,339 புள்ளிகளையும் எட்டியது. முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால் ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க. கூட்டணி 293 இடங்களை மட்டுமே வென்றதால் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பாவம் இந்த 30 லட்சம் கோடி ரூபாயை அப்பாவிகளிடம் இருந்து பறித்துக் கொடுத்தவர்கள் யார்?

கருத்துக் கணிப்பை வைத்து பங்குச் சந்தை மோசடியை அரங்கேற்றியவர்கள் இன்று, அன்னியச் சதி என்று பொங்குகிறார்கள். சொந்த நாட்டு மக்களின் பணத்தை சூறையாடி, சில குறிப்பிட்ட நிறுவனங்களின் கையில் கொடுக்கும் மோசடியின் பங்குதாரர்கள் யார் என்பதை ஹிண்டன்பர்க் சொல்லித் தான் இந்திய நாட்டு மக்களுக்குத் தெரியவேண்டுமா என்ன?

banner

Related Stories

Related Stories