முரசொலி தலையங்கம் (15-08-2024)
மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா ?
வங்க தேசத்து அதிபரை பத்திரமாக மீட்டு அடைக்கலம் தரும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்காவது இந்திய மீனவர்களைக் காப்பதில் இருக்க வேண்டாமா? இலங்கைக் கடற்படையால் தினம் தாக்கப்படும், கைது செய்யப்படும் நம் நாட்டு மீனவர்கள், 'இந்திய' மீனவர்கள் இல்லையா? ஏன் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இல்லை?.
இலங்கைக் கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வந்த மீனவர்கள் இப்போது தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம்?. இந்தியப் பிரதமர் மோடி மீது பயமில்லையா? அல்லது
எத்தனை பேரைக் கைது செய்தாலும் அவர் கேட்க மாட்டார் என்பது அவர்களுக்கும் தெரிந்து விட்டதா?.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை கைது செய்வது, இலங்கை சிறையில் அடைப்பது, தாக்குவது, சுடுவது, வலைகளைப் பறிப்பது, படகுகளை உடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது ஆகிய குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்ததற்குப் பின்னால் இந்த பத்தாண்டு காலத்தில் 3 ஆயிரத்து 76 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஜுன், ஜூலை மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஆண்டில் மட்டும் 215 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
“இத்தனை பேர் கைது செய்யப்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினால், “இத்தனை பேரை விடுவித்தது எங்கள் சாதனையல்லவா” என்று இரக்கமில்லாமல் பதில் சொல்கிறார்கள். இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும், கைது செய்- யப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்களும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் கைது செய்து கொண்டிருக்கிறது இலங்கைக் கடற்படை.
« மே மாதத்தில் 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
« ஜூன் 1 ஆம் நாள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.
« ஜுன் 17 ஆம் நாள் இராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
« ஜூன் 25 ஆம் நாள் நாகப்பட்டினம் மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
« ஜூலை 1 ஆம் நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
« ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
« ஜூலை 31 ஆம் நாள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரின் படகை இலங்கைக் கடற்படை கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரைக் காணவில்லை.
« ஆகஸ்ட் 3 ஆம் நாள் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
« ஆகஸ்ட் 9 ஆம் நாள் ராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
- இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
"மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்வதன் மூலமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கும் அனுமதி முறையாக வழங்கப்படுவது இல்லை” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் ஒன்றிய அரசு, இலங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை. கைது செய்வதும், விடுவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது இலங்கை அரசாங்கத்திற்கு. எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடி என்ன சொன்னார்? "இலங்கைக் கடற்படை இப்படிச் செய்கிறது என்றால் மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆள்வதால்தான் இது நடக்கிறது. பலமான பிரதமர் ஆண்டால் நடக்காது” என்றார் மோடி.
மூன்றாவது முறை பிரதமர் ஆகும் அளவுக்குப் பலம் படைத்தவர் மோடி என்பது இலங்கை அரசுக்கு ஏன் தெரியவில்லை?. கைது செய்யப்பட்ட மீனவர்களை நிரந்தரமாக சிறையில் அடைக்கிறார்கள். ரூ.48 லட்சம், ரூ.58 லட்சம் என்று அபராதம் விதிக்கிறார்கள். அதைக் கட்ட முடியாவிட்டால் மூன்றாண்டு சிறைத் தண்டனை தரப்படுகிறது.
முதல் தடவை கைதானால், இரண்டாவது தடவை கைதானால், மூன்றாவது முறை கைதானால் என்று தண்டனையை அதிகப்படுத்திக் கொண்டே போகிறார்கள். மீனவர்களை விடுவித்தாலும் படகுகளைத் தருவது இல்லை. இப்படி 300க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கையில் பயனற்றுக் கிடக்கிறது. கடலை நம்பி மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே இது சிதைத்து விடுகிறது. இலங்கை மிக மிக பலவீனமான நாடு. அரசியல் நிலைப்புத்தன்மைஇல்லாத நாடு. அதுவே இந்த ஆட்டம் ஆடுகிறது என்றால் ‘இந்தியாவை’ பற்றிய பயம் இல்லை என்று தான் பொருள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டு மீனவர் நலன் காக்க கச்சத்தீவை மீட்கப் புறப்பட்ட பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் நிர்மலா ஆகியோர் என்ன ஆனார்கள்? நீங்கள் கச்சத்தீவை மீட்பதை அப்புறம் பார்க்கிறோம். சிறையில் அடைபட்டிருக்கும் இந்திய மீனவர்களை மீட்கும் தைரியசாலிகள் என்பதைக் காண்பியுங்கள்!