முரசொலி தலையங்கம்

“பாஜகவுடனான அரசியல் யுத்தத்தை மீறியும் ஒலிம்பிக் சென்றார் வினேஷ் போகத்!” - முரசொலி பெருமிதம்!

“பாஜகவுடனான அரசியல் யுத்தத்தை மீறியும் ஒலிம்பிக் சென்றார் வினேஷ் போகத்!” - முரசொலி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத்.

வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவராகவும் இருக்கிறார். பிரிஜ் பூஷண் சிங், பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பதால் மட்டுமே காப்பாற்றப் பட்டார். பிரிஜ் பூஷன் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக வினேஷ் போகத் கதறினார்.

“பாஜகவுடனான அரசியல் யுத்தத்தை மீறியும் ஒலிம்பிக் சென்றார் வினேஷ் போகத்!” - முரசொலி பெருமிதம்!

ஊடகங்களில் இது பெரிதாக ஆனதும், வேறு வழியில்லாமல் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்கள். மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அறிக்கை கொடுத்ததே தவிர, நடவடிக்கைகள் ஏதுமில்லை. எனவே, ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்குப் புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. ஏப்ரல் 23 ஆம் தேதி மீண்டும் போராட்டம் தொடங்கினார்கள். “ஏன் வழக்குப் பதியவில்லை?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதன்பிறகுதான் ஏப்ரல் 30 ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது.

அப்போது அனைத்து விளையாட்டு வீரர்களையும் நோக்கி, ‘கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியவர் தான் வினேஷ் போகத்! அதன்பிறகுதான் ஒரு சிலர் பொதுவெளியில் கேள்விகள் எழுப்பினார்கள். அனைவரையும் இந்தக் கொடூரத்துக்கு எதிராக துணிச்சலாகப் பேச வைத்தவர் வினேஷ் போகத். ‘போக்சோ’ சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வைத்தார்கள். பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யாமலேயே வழக்கு விசாரணை நடத்தினார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு பா.ஜ.க. தொகுதி ஒதுக்குவதாக இருந்தது. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அவரது மகனுக்கு தொகுதி ஒதுக்கினார்கள். (‘பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் எதிர்ப்பு’ இதுதான்!)

இந்த அரசியல் யுத்தத்தில் இருந்ததால் கடந்த ஓராண்டாக வினேஷ் போகத்தால் சரியான பயிற்சி பெற முடியவில்லை. இவ்வளவு தடைகளைக் கடந்துதான் ஒலிம்பிக் சென்றார் வினேஷ் போகத். பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனையுடன் பதக்கத்தை ஆகஸ்ட் 6ஆம் தேதி உறுதி செய்தார் வினேஷ் போகத். மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவுக்கான களம் இது. இதில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

“பாஜகவுடனான அரசியல் யுத்தத்தை மீறியும் ஒலிம்பிக் சென்றார் வினேஷ் போகத்!” - முரசொலி பெருமிதம்!

ஜப்பானைச் சேர்ந்த யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத். நான்கு முறை உலகச் சாம்பியன் பட்டம் பெற்றவர் இந்த யுய் சுசாகி. எதிலும் இதுவரை தோற்காத வீரர் அவர். இதுவரை 82 பதக்கங்களைப் பெற்ற அவரையே வீழ்த்தினார் வினேஷ் போகத். அதன் பிறகு உக்ரைனைச் சேர்ந்த ஐரோப்பிய சேம்பியன் என்று அழைக்கப்படும் ஆக்சனா விவச்சையும் வினேஷ் போகத் வீழ்த்தினார். அடுத்து கியூபா வீராங்கனையான கஸ்மன் லோபஸையும் அரையிறுதியில் வீழ்த்தினார் வினேஷ் போகத். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதிச் சுற்றில் வென்றால் தங்கம் கிடைக்கும், தோற்றால் வெள்ளி கிடைக்கும் என்ற நிலைமை தான் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இருந்தது. இந்த இடத்தில்தான் வினேஷ் போகத்தை இன்னொரு சதி வீழ்த்தியது.

50 கிலோ எடைப்பிரிவு இது என்பதால், 50 கிலோவுக்குள் தான் எடை இருக்க வேண்டும். 100 கிராம் எடை அதிகமாக இருக்கிறது என்று சொல்லி தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். கண்ணுக்குத் தெரியாத சதிதான் இதற்குக் காரணம். ‘பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை ஒலிம்பிக்கில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள்’ என்று கடந்த ஏப்ரல் மாதமே குற்றம் சாட்டி இருந்தார் வினேஷ் போகத். ‘இவரின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சதி செய்துள்ளார்கள்’ என்று ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். தீர்ப்பு என்ன வரப்போகிறது என்று தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி சொல்லி இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ‘மல்யுத்தப் போட்டி என்னை வென்று விட்டது’ என்று சொல்லி இருக்கிறார் வினேஷ் போகத்.

இல்லை! உலகை வினேஷ் போகத் வென்றுவிட்டார். உலக மக்களின் மனங்களை வென்று விட்டார். மீண்டும் அவர் களத்துக்கு வருவார். வெல்வார். வெல்க!

banner

Related Stories

Related Stories