முரசொலி தலையங்கம்

“தமிழ்நாட்டை பழிவாங்கும் பட்ஜெட் இது - பிரதமருக்கு உள்ளம் இருக்கிறதா?” : முரசொலி கடும் கண்டனம்!

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், தமிழ்நாட்டை பழிவாங்குவதற்கான பட்ஜெட். உயர்ந்த பதவியில் இருக்கும் பிரதமருக்கு உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?

“தமிழ்நாட்டை பழிவாங்கும் பட்ஜெட் இது - பிரதமருக்கு உள்ளம் இருக்கிறதா?” : முரசொலி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா? என்பது தமிழினத் தலைவர் கலைஞரின் வரிகள். பிரதமர் மோடியைப் பார்த்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இதுதான்! “உயர்ந்த பதவியில் இருக்கும் உங்களுக்கு உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?

முன்னேற்றத்துக்காக பட்ஜெட் போடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பழிவாங்குவதற்காக பட்ஜெட் போடுவதை இப்போதுதான் பார்க்கிறோம். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மக்களைப் பழிவாங்குவதற்காக போடப்பட்ட பட்ஜெட். இந்திய நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட நிதித்தாக்குதல் இது.

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மாநிலங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் இது. மைனாரிட்டி பா.ஜ.க.வை மெஜாரிட்டி ஆக்கிய சில மாநிலங்களுக்கு மட்டுமே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பதும் சந்தேகம்தான்.

தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் ஏமாற்றி வருவதைப் போல எதிர்காலத்தில் அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்கள் என்றும் அதுதான் உண்மையில் நடக்கப் போகிறது.

பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இல்லை. 240 இடங்களை வைத்து ஆட்சியை அமைக்க முடியாது. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் தயவில்தான் பிரதமர் நாற்காலியில் மோடி உட்கார்ந்து இருக்கிறார். நாற்காலியின் இரண்டு கால்களை அவர்கள் உடைத்துக் கொண்டு போனால் ஆட்சி கவிழ்ந்து விடும்.

எனவே, அவர்கள் இருவரையும் திருப்திப்படுத்தினால் போதும் என்று மோடி நினைக்கிறார் என்றும், ஆந்திர தலைநகர் அமராவதி மேம்பாட்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய், பீகாரில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய், பீகார் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 11ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கினால் போதும் என்று முடிவெடுத்து விட்டார்கள், அப்படியானால் இது ஆந்திர மாநில பட்ஜெட், பீகார் மாநில பட்ஜெட் ஆகத்தான் இருக்க முடியுமே தவிர, ஒட்டு மொத்த இந்தியாவுக்கான பட்ஜெட்டாக எப்படி இருக்க முடியும்?

ஆந்திராவின் பெயர் ஐந்து இடங்களில் வருகிறது. பீகாரின் பெயர் ஐந்து இடங்களில் இருக்கிறது. மேற்கு வங்கம் ஒரு இடத்தில் வருகிறது. நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. கேரளா இல்லை. கர்நாடகா இல்லை. பஞ்சாப் இல்லை. டெல்லி இல்லை. மணிப்பூர் இல்லவே இல்லை. ஏன்? அவர்களது கோட்டையாக நினைத்த உ.பி.யே அகிலேஷுக்கு ஜே போடத் தொடங்கியதும் உ.பி.பேரும் இல்லை. அகிலேஷுக்காக புறக்கணித்தார்களா, யோகிக்காக புறக்கணித்தார்களா என்பது மோடிக்குத்தான் தெரியும். அப்படியானால் இதனை ஒட்டு மொத்த இந்தியாவுக்கான பட்ஜெட்டாக எப்படிச் சொல்ல முடியும்?.

பா.ஜ.க. ஆட்சி யாரால் நீடிக்கிறது என்று தேர்தல் முடிவுகளைப் பார்த்து தயாரிக்கப்பட்டது இந்த பட்ஜெட். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மாநிலங்கள் எவை என தேர்தல் முடிவுகளைப் பார்த்து தயாரிக்கப்பட்டது இந்த பட்ஜெட். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்களை பழிவாங்கவே இதனைத் தயாரித்துள்ளார்கள். முக்கியமான நான்கு கோரிக்கையை அறிவிக்கக் கேட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர், நான்கு இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்றையாவது அறிவித்திருக்க வேண்டும். ஏதுமில்லை என்றால், பா.ஜ.க.வின் மனதில் தமிழ்நாடு இல்லை என்று பொருள். தமிழ்நாடு தேவையில்லை என்று பொருள். இதில் நாம் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. பா.ஜ.க.வின் நிறமும் குணமும் அதுதான் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனை நியமித்ததும், நமக்கு ஒன்று புரிந்துவிட்டது, ‘இது வழக்கமான மோடி மாடல் ஆட்சிதான்’ என்று! எதிலும் மாற்றம் வரப் போவது இல்லை என்பதை உணர்த்தியது அந்த ஒரு நியமனம். ஏன் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது, மற்ற பல மாநிலங்கள் இல்லை என்று கேட்டால், நிர்மலா என்ன பதில் சொல்லி இருக்கிறார் தெரியுமா? மாநிலங்களுக்கு 1புள்ளி 50 லட்சம் கோடியை வட்டியில்லாத கடனாகத் தந்திருக்கிறோமே, இது போதாதா?” என்கிறார் நிர்மலா சீதாராமன். வட்டிக் கடை நடத்துபவரை நிதி அமைச்சராகப் போட்டால் இப்படித்தான் இருக்கும்.

கூட்டாட்சித் தத்துவத்தின் எந்தக் கூறும் தெரியாத - உணர விரும்பாதவர் கையில் நிதி அமைச்சகத்தின் பொறுப்பை ஏன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இதுபோன்று இரக்கமற்றுச் செயல்படுவதற்காகத்தான் என்றும் இத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “நாங்கள் மட்டும் தேர்தலில் ஜெயித்து வந்தால் பதவி. நிர்மலா சீதாராமன் போன்ற உயர் ஜாதிக்காரர்களுக்கு எப்போதும் பதவியா? என்று தனது ஆற்றாமையை மாஜி பெண் ஆளுநர் தனது நண்பர்களிடம் வேதனையாக பகிர்ந்து கொண்டார்.

இது டெல்லி பா.ஜ.க. தலைமையின் காதுக்குப் போனது. அவரை பொதுமேடையில் வைத்து ஒன்றியத்தில் அதிகாரம் பொருந்திய அமைச்சர் கண்டிக்கிறார் என்றால் நிர்மலாக்கள் எதற்காகப் பதவிகளில் உட்கார வைக்கப்படுகிறார்கள் என்பதை நமது நெத்தியில் அடித்துச் சொல்கிறது இந்த நிதி அநீதி அறிக்கை.

banner

Related Stories

Related Stories