முரசொலி தலையங்கம்

”பழனிசாமியும், அண்ணாமலையும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” : முரசொலி தலையங்கம்!

பழனிசாமியும், அண்ணாமலையும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாமா?

”பழனிசாமியும், அண்ணாமலையும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (20-07-2024)

பழனிசாமி எங்கே? அண்ணாமலை எங்கே?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்துக்குள் முக்கியக் குற்றவாளிகள் எட்டுப் பேரை தமிழ்நாடு காவல் துறை கைது செய்தது. ஆனால் பழனிசாமியும், அண்ணாமலையும் என்னமாய் குதித்தார்கள்?

‘கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல’ என்று ஜோசியம் சொன்னார் பழனிசாமி. சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளியில் வரும் என்றார் அண்ணாமலை. இப்போது என்ன நடந்திருக்கிறது? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைதாகி இருக்கிறார். பா.ஜ.க. பிரமுகரை காவல்துறை தேடிக் கொண்டு இருக்கிறது. இவர்களைக் கைது செய்யாததால்தான், ‘உண்மைக் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று சொன்னாரா பழனிசாமி?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர்க்கொடி சேகர் என்பவர் கைதாகி இருக்கிறார். இவர் சென்னை திருவல்லிக்கேணி மேற்குப் பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார். மலர்க்கொடி சேகர் கைதானதும், நாட்டு மக்களிடம் பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாமா? மானஸ்தனாக இருந்தால் கேட்பார். மலர்க்கொடி சேகரை கட்சியை விட்டு நீக்கியதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு மவுனமாகி விட்டார் பழனிசாமி.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை என்பவரை காவல்துறை தேடிக் கொண்டு இருக்கிறது. பா.ஜ.க.வில் வடசென்னை மேற்கு மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். அஞ்சலையைத் தேடுகிறார்கள் என்றதும், அவரைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். மறுநாளில் இருந்தே அஞ்சலையின் பெயர் ஊடகங்களில் வரத் தொடங்கி விட்டது. ஆனால் அஞ்சலையை நீக்கவில்லை அண்ணாமலை. மலர்க்கொடி சேகரை பழனிசாமி நீக்கியதும், ஜூலை 16 ஆம் தேதி நீக்கி இருக்கிறார் அண்ணாமலை.

அஞ்சலையின் குற்றப்பின்னணி அண்ணாமலைக்கு இப்போதுதான் தெரிய வந்ததா? ‘புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான அஞ்சலை, காவல் துறையின் பி வரிசையில் இடம் பெற்றுள்ளார் என்று தினமணி எழுதுகிறது. இது இதுவரை மாஜி சிரிப்பு போலீஸ் அண்ணாமலைக்குத் தெரியாதா? அஞ்சலைகளுக்கு தலைவராக இருக்கத் தகுதி படைத்தவர்தானே அவர்!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பா.ஜ.க.வில் இருக்கும் குற்றப்பின்னணி ஆட்களைப் பற்றி முழுத் தகவலையும் சொன்னார். அதற்கு இதுவரை அண்ணாமலை பதில் அளித்துள்ளாரா?

“என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். இதில் இருக்கும் பெயர்ப் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூக சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம் – ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்! ஆனால் இந்தப் பட்டியலில்

இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்தப் பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…

”பழனிசாமியும், அண்ணாமலையும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” : முரசொலி தலையங்கம்!

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா? உங்களிடம் இருக்கும் உளவுத்துறை

மூலமாக அந்தப் புத்தகத்தை வாங்கிச் சரிபார்த்துவிட்டு, அதற்குப் பிறகு எங்களைப் பற்றிப் பேசுங்கள் பிரதமர் அவர்களே என்று முதலமைச்சர் சொன்னார்.

இதற்கு இதுவரை பதில் இல்லை. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு பா.ஜ.க. பிரமுகரான அஞ்சலை 10 லட்சம் பணம் கொடுத்ததாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் நெருங்கியவர்தான் அஞ்சலை. ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது – வழக்கறிஞரும் அ.தி.மு.க. பிரமுகருமான மலர்க்கொடி சேகர் பணம் கொடுத்திருப்பது தெரிய வந்தது.

அ.தி.மு.க. பேச்சாளராகவும், பாடகராகவும் இருந்த தோட்டம் சேகரின் மனைவி இவர். தோட்டம் சேகர் 2001 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் அருள் என்பவரோடு மலர்க்கொடி தொடர்பில் இருந்துள்ளார். வழக்கறிஞர் அருளின் வங்கி பணப்பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது மலர்க்கொடி இவருக்குப் பணம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் த.மா.கா.வைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் த.மா.கா.வில் மாநில மாணவரணி துணைத் தலைவராக இருக்கிறார். இவரைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் ஜி.கே.வாசன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார் என்றால், அதில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றால் அரசாங்கத்தை விமர்சிக்கலாம். கொலை நடந்த மூன்று மணி நேரத்தில் கைது

செய்யப்பட்டு விட்டார்கள். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்பதற்கான வீடியோ ஆதாரத்தையும் காவல் துறை வெளியிட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தியது காவல் துறை. தங்களுக்கு ஏதாவது துப்பு

கிடைக்குமானால் அதனை காவல்துறைக்குச் சொல்லலாம். குற்றவாளிகள் யாரும் தப்பி விடக் கூடாது என்ற நோக்கம் காவல் துறைக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் பழனிசாமியும், அண்ணாமலையும், ‘கிடைச்சது ஒரு மேட்டர்’ என்ற அடிப்படையில் கோதாவில் இறங்கி அரசாங்கத்தைக் கடித்துக் குதறினார்கள்.குதறிக்கொண்டு இருக்கிறார்கள். பழனிசாமியும், அண்ணாமலையும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாமா?.

banner

Related Stories

Related Stories