முரசொலி தலையங்கம்

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாரா?” - ஜனநாயக காப்பாளர்களான பா.ஜ.க.வினருக்கு முரசொலி கேள்வி !

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாரா?” - ஜனநாயக காப்பாளர்களான பா.ஜ.க.வினருக்கு முரசொலி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மாநிலப் பட்டியலில் கல்வி!

காலை உணவுத் திட்டத்தை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் சேர்க்கும் திட்டத் தொடக்கவிழாவில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய அரசை நோக்கி மிக முக்கியமான கேள்வி ஒன்றை வைத்தார்கள்.

“ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசியலுக்காக இப்போது நெருக்கடி நிலையைப் பற்றி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால் நாம் கேட்கிற கேள்வி, நெருக்கடி நிலைக் காலத்தில் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி அதிகாரத்தை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கபூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?” என்பது தான் முதலமைச்சர் அவர்கள் எழுப்பிய கேள்வி ஆகும். இதற்கு இதுவரை வாயைத் திறக்கவில்லை. திறக்கவும் மாட்டார்கள்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக, கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். அதைச் செய்தால்தான் ‘நீட்’ போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும்” என்று பேசினார்கள். எனவே, இது தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கையே ஆகும்.

பல்வேறு பிரிவினர் வாழும் நாட்டில் கல்வியானது மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலப் பட்டியலில் கல்வியை வைத்தார்கள் அரசியலமைப்புச் சட்ட மேதைகள். 1976- ஆம் ஆண்டில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்திராகாந்தி தலைமையில் இருந்த ஒன்றிய அரசாங்கம், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, வனம், வன உயிரினங்கள், பறவைகள் பாதுகாப்பு, நீதி பரிபாலனம், எடைகள் மற்றும் அளவுகள் ஆகிய துறைகளை அரசியல் சட்டத்தில் உள்ள 7--–வது அட்டவணையில் இருக்கும் பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. இதன் மூலம் கல்வி; ஒன்றிய – மாநில அரசுகள் கைகளுக்குப் போனது. சர்தார் ஸ்வரன் சிங் அளித்த அறிக்கைப்படி இதனைச் செய்தார்கள்.

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாரா?” - ஜனநாயக காப்பாளர்களான பா.ஜ.க.வினருக்கு முரசொலி கேள்வி !

பொதுப்பட்டியல் என்று சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது போன்ற தோற்றமே இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையானது அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன். ‘அறம் செய்ய விரும்பு’ தொண்டு நிறுவனம் மூலம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார். விசாரணைகள் முடிவுற்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. ‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’ என்று தனிநபர் மசோதா கொண்டு வந்திருந்தார், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்.

மருத்துவர் எழிலன் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையின் போது, ‘கல்விக்கு அதிகமாகச் செலவு செய்வது மாநில அரசுகளே’ என்ற வாதங்கள் வலுவாக வைக்கப்பட்டன. எழிலன் சார்பில் வாதங்களை வைத்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “நெருக்கடி நிலைக் காலத்தில் செய்யப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தமானது, மாநிலங்களின் சுயாட்சி அதிகாரத்தைப் பறிப்பது ஆகும். இது கூட்டாட்சிக் கொள்கையைப் பாதிக்கிறது. இப்படி கல்வியை மாற்றியபோது தமிழ்நாடு அரசு அதில் கையெழுத்திட வில்லை. மக்களவையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை” என்று வாதிட்டுள்ளார்.

மாநிலப் பட்டியலில் இருந்து எந்த அதிகாரத்தையும் எந்த நேரத்திலும் மாற்றும் அதிகாரமும் ஒன்றிய அரசிடமே இருக்கிறது. இப்படி இருந்தால், அவர்கள் அதனைத் தவறாகத் தானே பயன்படுத்துவார்கள்? பயன்படுத்திக் கொள்வார்கள்?

இந்தியாவின் அரசியலமைப்பு என்பது கூட்டாட்சித் தன்மை கொண்டது ஆகும். ஒற்றை ஒன்றிய அரசு மட்டுமே அரசல்ல, ஏராளமான மாநில அரசுகள் உள்ளன. மாநில அரசுகளின் அதிகாரங்களில், ஒன்றிய அரசு தலையிட முடியாது. அதுவே சட்டப்படி குற்றம் ஆகும். இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவான அதிகாரங்கள், ஒன்றிய அரசுக்கான அதிகாரங்கள், மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் என மூன்று வகையாக உள்ளது.

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாரா?” - ஜனநாயக காப்பாளர்களான பா.ஜ.க.வினருக்கு முரசொலி கேள்வி !

பொதுப்பட்டியலில் (Concurrent list) 47 அதிகாரங்களும், ஒன்றிய அரசுக்கான பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநிலப் பட்டியலில் 66 அதிகாரங்களும் உள்ளன. இவை எதிலும் சேர்க்கப்பட்டாத (Residuary powers) சில அதிகாரங்களையும் ஒன்றிய அரசுதான் பயன்படுத்தி வருகிறது. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசும் -– மாநில அரசும் பயன்படுத்தலாம். ஆனால் புதியக் கல்விக் கொள்கை போன்றவை, மாநிலங்களுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுபவை ஆகும். பொதுப்பட்டியல் - ஒத்திசைவுப் பட்டியல் என்று சொன்னாலும், அது ஒன்றிய அரசால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பட்டியலாகத்தான் உள்ளது.

மருத்துவர் எழிலன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியா என்பது பல மாநிலங்கள் அடங்கிய நாடு ஆகும். இங்கு ஒரு மொழி, ஒரு மதம், ஒரு பண்பாடு கொண்ட ஒற்றைச் சட்டங்களை உருவாக்க முடியாது. நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதும் பொருத்தமற்றது. கல்வி கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பே ஆகும்.

எனவே, கூட்டாட்சித் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுப் பட்டியலில் கல்வி இனியும் தொடரக்கூடாது. புதிய கல்விக் கொள்கை மூலமாக, மாநில அரசின் உரிமையில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையில் தலையிடுகிறது. மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ‘நீட்’ தேர்வை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் தான் கொண்டு வந்தார்கள். கூட்டாட்சிக் கட்டமைப்பைச் சிதைக்கும் செயலை நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நெருக்கடி நிலையை எதிர்க்கத் தொடங்கி இருக்கும் ஜனநாயகக் காப்பாளர்களான பா.ஜ.க.வினர், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றி தங்களது கொள்கை உறுதியை உலகுக்குக் காட்ட முன்வருவார்களா?

banner

Related Stories

Related Stories