முரசொலி தலையங்கம்

“வாடிய வயிரைக் கண்ட போதெல்லாம்... வள்ளுவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி புகழாரம்!

“வாடிய வயிரைக் கண்ட போதெல்லாம்... வள்ளுவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வாடிய வயிரைக் கண்ட போதெல்லாம்....

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் அருட்திரு வள்ளலார். வாடிய வயிரைக் கண்டபோதெல்லாம் வாடி பசிப்பிணி தீர்த்து வருகிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் காலை உணவுத் திட்டத்தை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று - 2022 ஆம் ஆண்டு மதுரையில் வைத்து தொடக்கி வைத்தார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆயிரத்து 545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு தினமும் காலையில் பள்ளியில் வைத்து உணவு வழங்கப்பட்டது.

பள்ளிக் குழந்தைகளுக்கு இது மிகமிக ஊக்கமளிக்கக் கூடிய திட்டமாக அமைந்திருந்ததால் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தர விட்டார்கள். 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். இதன் மூலமாக 18 லட்சத்து 50 மாணவ, மாணவியர் காலை உணவு உண்டு வருகிறார்கள்.

“வாடிய வயிரைக் கண்ட போதெல்லாம்... வள்ளுவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி புகழாரம்!

இதுவரை காலை உணவு வழங்கப்பட்டது அனைத்தும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டும்தான். அரசு உதவி பெறும் பள்ளிகளும் இதே கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சரிடம் வைத்தார்கள். அதனையும் முதல்வர் அவர்கள் ஏற்றுக் கொண்டு இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உத்தரவிட்டார்கள். 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 பிள்ளைகள் இத்திட்டத்தின் கீழ் காலை உணவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர் பிறந்த ஜூலை 15 ஆம் நாள் இத்திட்டத்தை திருவள்ளூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். மாணவ, மாணவியருடன் உண்டு உரையாடினார் முதலமைச்சர் அவர்கள்.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி தினந்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரம் மாணவ, மாணவியர் காலை உணவுத் திட்டத்தில் இணைந்து தினந்தோறும் வயிறார உண்ட பிறகு பாடங்களைக் கவனிக்கப் போகிறார்கள். காலை உணவு சாப்பிட்ட பிள்ளைகளின் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 'கிச்சடி, பொங்கல், சாம்பார் சூப்பரா இருக்கு' என்கிறார் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிணி. ‘நீ என்னவாக ஆகப் போகிறாய்?' என்று ருத்ராஸ்ரீ என்ற மாணவியிடம் முதலமைச்சர் கேட்டதும், 'நான் உங்களைப் போல வருவேன்' என்று அந்த மாணவி சொல்லி இருக்கிறார். ‘என்னை யாரென்று தெரிகிறதா?' என்று முதலமைச்சர் கேட்டதும், 'ஸ்டாலின் தாத்தா' என்று ஒரு மாணவி சொல்கிறார். ‘தாத்தா, இல்ல ஸ்டாலின்தான்' என்று முதலமைச்சர் சொல்லி சிரிக்கிறார். வாடிய வயிரைக் கண்ட போதெல்லாம் வாடி, அவர்கள் வாட்டம் போக்கியதும் ஏற்படும் மகிழ்ச்சி முதலமைச்சரின் முகத்தில் தெரிந்தது.

"சந்தோஷமா இருந்துச்சு. தினந்தோறும் சாப்பிட மாட்டோம். ஆட்டோ சீக்கிரமா வந்துரும். அதனால சாப்பிடாம வந்திருவேன். சாப்பிடாம வந்தா வயிறு வலிக்கும். தண்ணீர் குடிச்சுக்குவேன். சி.எம். என்னோட உட்கார்ந்து தான் சாப்பிட்டாங்க. ‘நீ என்னவா ஆகப் போற'ன்னு சி.எம். கேட்டாங்க. 'நான் கலெக்டர் ஆவேன்' என்று சொன்னேன். சி.எம். படத்தை டி.வி.யில, பேனர்ல பார்த்து இருக்கேன். அவரு எனக்கு ஊட்டி விடுவாரா என்று ஏங்கினேன்” என்று நான்காம் வகுப்பு மாணவியான கிறிஸ்டியார் கேத்ரின் அளித்துள்ள பேட்டி உருக்கமாக அமைந்துள்ளது.

“வாடிய வயிரைக் கண்ட போதெல்லாம்... வள்ளுவர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - முரசொலி புகழாரம்!

“நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்காக மிகமிக பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றால் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டத்துக்கு நான் காரணமாக அமைந்து இருக்கிறேன் என்பதால்தான்” என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னதன் பொருள் இதுபோன்ற மாணவியரின் பேட்டிகளில் இருந்தே தெரிகிறது.

இது ஏழைகளுக்கான திட்டம் மட்டுமல்ல; இன்றைய சூழலுக்கான திட்டம் என்பதையும் முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ‘பெற்றோர் இருவரும் காலையிலேயே வேலைக்குப் போகும் வீடுகள் அதிகமாகி விட்டன. அதையும் மனதில் வைத்து உருவாக்கிய திட்டம் இது' என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இதனை ஒரு மாணவியின் தாயான மீனா என்பவர், ‘தினத்தந்தி' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார். “நான் வேலைக்குச் செல்வதால் காலையில் சமைக்க முடியாது. சில நேரங்களில் குழந்தைகள் சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்று விடுகிறார்கள். காலை உணவுத் திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளதால் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பு அனைவருக்கும் உருவாகி உள்ளது” என்று சொல்லி இருக்கிறார் மீனா. காலை உணவு தயாரித்து தர நேரமில்லை என்ற குடும்பங்களுக்கும் சேர்த்து பயனளிக்கும் திட்டமாக இது அமைந்துவிட்டது.

"காலைஉணவுத் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்வதை நிதி ஒதுக்கீடு என்று சொல்ல மாட்டேன், நிதி முதலீடு ஆகும்' என்று நான் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவுக்கு அரசாங்கம் செய்யும் முதலீடுதான் இந்த காலை உணவுத் திட்டம் ஆகும்” என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னது அவரது தொலைநோக்கு எண்ணத்தைக் காட்டுகிறது. தமிழ்நாட்டு அறிவுச் சொத்தான மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை ஏற்றமிக்கதாக மாற்றுவது ஆகும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி - என்கிறார் வள்ளுவர். வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்கிறார் வள்ளுவர். இது அரசாங்கத்துக்கும் பொருந்தும் என்று நினைக்கக் கூடியவராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். வள்ளுவர் வழியில்!

banner

Related Stories

Related Stories