முரசொலி தலையங்கம்

“ஆன்மிக உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”: பாஜகவின் தோல்வியை சுட்டிக்காட்டிய முரசொலி!

மக்களின் ஆன்மிக உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு பாஜகவின் தோல்வி எடுத்துக்காட்டு.

“ஆன்மிக உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”: பாஜகவின் தோல்வியை சுட்டிக்காட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

'வெற்றி' இந்தியா!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களை ‘இந்தியா' கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 18 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது 'இந்தியா' கூட்டணி. இரண்டே இடங்களில் தான் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை தி.மு.க. வேட்பாளர் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் வைப்புத் தொகை பறிபோனது.

* மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நான்கு தொகுதிகளையும் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது.

* இமாச்சலப் பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது.

* உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

* பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஒரு தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.

* மத்தியப் பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற ஒருதொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது.

* பீகார் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வென்றிருக்கிறார்.

- இவைதான் இடைத்தேர்தல் முடிவுகள் ஆகும்.

“ஆன்மிக உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”: பாஜகவின் தோல்வியை சுட்டிக்காட்டிய முரசொலி!

காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய அனைத்தும் (இந்தியா- கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆகும். 'இந்தியா' கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மக்களின் மனநிலை என்ன என்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

'இந்தியா' கூட்டணிக்கான ஆதரவு மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை இருப்பதையும் இது தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க. தன்னிடம் இருந்த விக்கிரவாண்டி தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகள் பா.ஜ.க. வசம் இருந்த தொகுதிகள் ஆகும். அந்த தொகுதிகளின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று தொகுதிகளையும் இப்போது திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்போது பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. ஆனால் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் ஆளும் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் கட்சியே இரண்டு தொகுதி களையும் கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இப்போது இடைத்தேர்தல் நடைபெற்ற ஜலந்தர் மேற்கு தொகுதியானது ஆம் ஆத்மி வசம் இருந்தது. அங்கிருந்த எம்.எல்.ஏ. ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். அதனால் இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜ.க. தோற்று, ஆம் ஆத்மி வென்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் வென்றுள்ளது என்றாலும், வாக்கு வித்தியாசம் 3 ஆயிரம் தான். விக்கிரவாண்டியில் தி.மு.க. 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளதையும், மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரத்தில் பா.ஜ.க. வென்றுள்ளதையும் வைத்துப் பார்த்தால் வெற்றியின் வித்தியாசத்தையும் உணரலாம்.

“ஆன்மிக உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”: பாஜகவின் தோல்வியை சுட்டிக்காட்டிய முரசொலி!

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணி சார்பில் கமலாதர் பிரசாத் என்பவர் களம் இறக்கப்பட்டார். ஆனால் அங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் வென்று விட்டார். இந்த தேர்தலில் 'இந்தியா' கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் பிமா பாரதியைத் தோற்கடிக்க ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கடுமையான பரப்புரை செய்தன. ஆனால் அந்தக் கூட்டணியும் தோற்று சுயேட்சை வேட்பாளர் முன்னால் வந்துவிட்டார். இதுவும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி தான்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசம் நீங்கலாக மற்ற ஆறு மாநிலங்களிலும் பா.ஜ.க. படுதோல்வியை அடைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்களை வெல்வோம், 466 இடங்களை வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது பா.ஜ.க.. ஆட்சி அமைக்கத் தேவையான 272 என்ற எண்ணிக்கையைக் கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. 248 க்குள் முடக்கப்பட்டது பா.ஜ.க..

இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வி தான். தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சில உதிரிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளார் நரேந்திர மோடி. இந்த தோல்வியானது அவரது முகத்தில் நன்றாகத் தெரிகிறது. அந்த தோல்வி முகத்தின் தொடர்ச்சியாகவே ஏழு மாநில இடைத்தேர்தல் முடிவுகளையும் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதைப் போலவே, இந்த இடைத்தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தொகுதியிலும் பா.ஜ.க. தோற்றுள்ளது. புனித பூமி என்று சொல்லப்படுவது பத்ரிநாத் நகரம். மக்களின் ஆன்மிக உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இவை.

"தோல்விகளில் இருந்து பா.ஜ.க. பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பா.ஜ.க. இனியாவது உணர வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருப்பதை இனியாவது பா.ஜ.க. உணர வேண்டும்.

banner

Related Stories

Related Stories