முரசொலி தலையங்கம் 9.7.2024
நீதியரசரின் அறிக்கையும் பா.ஜ.க.வின் தீர்மானமும்
சாதி ஒழிப்புக்கு அவசியமான ஆலோசனைகளை நீதியரசர் சந்துருவின் அறிக்கை சொல்லி இருக்கிறது என்றால், சாதியைக் காக்கும் தீர்மானத்தை பா.ஜ.க.வின் செயற்குழு நிறைவேற்றி இருக்கிறது. தேசியம் என்ற பெயரால் மதவாத சாதியத்தை காப்பாற்றும் அமைப்பாகத்தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதை பட்டவர்த்தனமாகச் செய்து வருகிறது. கொஞ்சமும் கூச்சமில்லாமல்! 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்ற பள்ளி மாணவர் தாக்கப்பட்டார். சாதிய மேலாதிக்க எண்ணம் காரணமாகவே சின்னத்துரைமீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தார்கள்.
மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்டதை தனிப்பட்ட விவகாரமாக தமிழ்நாடு அரசு நினைக்கவில்லை. சின்னத்துரையை தாக்கியவர்களை கைது செய்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் அவர்கள் நினைக்கவில்லை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை ஆராய நீதியரசர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைத்து அறிக்கை கேட்டதுதான் சமூகநீதியில் அக்கறை கொண்ட ஒரு அரசின் மிகச் சரியான நிலைப்பாடு ஆகும். நீதியரசர் சந்துரு மிக முக்கியமான பல்வேறு பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருக்கிறார்கள். கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலன் ஆகிய முன்னொட்டு பெயர்களுடன் அரசுப் பள்ளிகள் இருப்பதை நீக்க வேண்டும், அரசு, தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள சாதி முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் நீக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பள்ளியின் பெயரில் சாதி இருக்கக் கூடாது, தனிமனிதர் பெயரில் வைத்திருந்தால் அந்தப் பெயரோடும் சாதி இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது, பட்டியலின சமூகத்தினர் மீதான ஆசிரியர்களின் பார்வையை மதிப்பிட வேண்டும், ஆசிரியர்களுக்கு சமூகநீதி பயிற்சி அளிக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு சாதி மற்றும் பாலியல் பிரச்சினைகள் குறித்த சட்டப்பயிற்சி தர வேண்டும், சமத்துவக் கண்ணோட்டத்துடன் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதற்காக சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அகரவரிசைப்படி மாணவர்களை அமர வைக்க வேண்டும், வருகைப் பதிவேட்டில் சாதி இடம்பெறக் கூடாது, ஊக்கத்தொகை விபரங்கள் அலுவலகங்களில் மட்டுமே இருக்க வேண்டும், மாணவரின் சாதியை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரியர் நடந்து கொண்டால் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறது இந்த ஆணையம். சாதி அடையாளம் கொண்ட குறியீடுகள் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தின் சில இடங்களில் சாதி அடையாளத்தை உணர்த்துவது போல கயிறு, மோதிரம், பல்வேறு அடையாளக் குறியீடுகள் வைத்ததன் மூலமாக சாதிய மோதல்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்படுகின்றன. இதனைத் தடுக்கவே ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 500 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளியில் பள்ளி நல அலுவலர் அமைக்க வேண்டும். அவர் இதைக் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க வேண்டும், அதனை வாரம் தோறும் திறக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சமூகநீதி மாணவர் படை அமைக்கப்பட வேண்டும், சாதி,மத பாகுபாடின்றி இவை செயல்பட வேண்டும், சமத்துவத்தை இப்படை ஊக்குவிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சாதியப் பாகுபாடுகள் உள்ள பகுதிகளைக் கண்டறிவது, சாதிப் பாகுபாட்டைத் தூண்டும் அமைப்புகளையும் நபர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பார்த்துத்தான் பா.ஜ.க. பேயறைந்ததைப் போல நிற்கிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி, மதப் பிரிவினை விதைக்கும் வேலையைத்தான் அந்தக் கட்சி செய்து வருகிறது.
சமூகநீதியும் சமத்துவமும் பள்ளி மாணவர்களிடம் உருவானால் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வேலையில்லாமல் போய்விடுமோ என்று அலறுகிறது பா.ஜ.க. "ஆங்காங்கே அவ்வப்போது தோன்றும் சில பிரச்சினைகளுக்காக ஒட்டுமொத்த மாணவர்களின் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகக் கொண்டு வரப்பட்டுள்ளதுதான் திரு.சந்துரு அவர்களின் அறிக்கை. மத அடையாளங்களை மொத்தமாக அழித்தொழிப்பது, காலம் காலமாக எந்த அடையாளங்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டிக் காத்ததோ, அந்த அடையாளங்களை அழிப்பதன் மூலம் நாட்டின், சமூகத்தின் அடையாளங்களை அழிக்கும் விதமாக ஒரு நீதிபதியின் அறிக்கை இருப்பது வேதனைக்குரியது" -- என்று பா.ஜ.க. பதறுகிறது. ஆன்மிக - இறையியல் விழுமியங்களை அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க. பயன்படுத்தத் தொடங்கிய பிறகுதான் பிளவுவாதம் வன்முறைக் கலாச்சாரமாக மாறியது. மத அடையாளங்கள், மத அடையாளமாக மட்டுமே இருந்தவரை அதனால் பிரச்சினை வரவில்லை. அதனை அரசியல் கட்சி அடையாளமாக பா.ஜ.க. பயன்படுத்திய பிறகு தான் பிரச்சினை வந்தது. அத்தகைய அடையாளங்களை, சில சாதியவாதிகள், தங்களது சாதியை வெளிப்படுத்தும் அடையாளமாக சில இடங்களில் பயன்படுத்தும் போதுதான் பிரச்சினைகள் ஏற்பட்டது.
மாணவர்களை பகடைக்காயாக யாரும் ஆக்காமல் இருக்க வேண்டுமானால் சமூகநீதி சமத்துவ பூமியாக இந்நாடு மாற வேண்டும். மாணவர்கள் மனதில் இளமையிலேயே சமூகநீதியும் சமத்துவமும் உருவானால் மதவாதம், சாதியவாதம் என்ற பிளவுசக்திகள் எந்தக் காலத்திலும் அவர்கள் மனதைக் கெடுக்க முடியாது. "கல்வி காவியமாவது மற்றும் கல்வி நிறுவனங்களில் ஊடுருவுவது, சாதி மற்றும் மத நல்லிணக்கத்தைக் குலைப்பது தொடர்பான புகார்களை விசாரிக்க வல்லுநர் குழு அல்லது ஒரு முகமை நியமிக்கப்பட்டலாம்" என்பது நீதியரசர் சந்துருவின் முக்கியமான பரிந்துரை ஆகும். இது சாதியின் மேலாண்மையை தடுக்கும். அதனால்தான் பா.ஜ.க. அலறுகிறது.