முரசொலி தலையங்கம் (08-07-2024)
உ.பி.யில் நடந்தால்...
கள்ளக்குறிச்சியில் ஒரு சம்பவம் நடந்ததும் நட்டா அதனை இந்தியப் பிரச்சினையாக ஆக்கினார். காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது? ஏன் மவுனமாக இருக்கிறது? என்று கேட்டார். ஆனால், உ.பி.யில் 121 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக பலியாகி இருப்பது நட்டா கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? என்றும், நிர்மலா சீதாராமன், கள்ளக்குறிச்சி பிரச்சினையை வைத்து அரசியல் முழக்கங்கள் செய்தாரே? உ.பி.யில் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் விட்டாரா?
நடந்தது உத்தரப்பிரதேசம். அதனால் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டு விட்டது. அதைப் பற்றியே பேசவில்லை. உத்தரப்பிரதேசத்தில் நடந்தது இந்தியாவையே கண்ணீரில் மிதக்கவைக்கும் மாபெரும் பேரழிவு அல்லவா? உத்தரப் பிரதேசத்தையே அமைதியாக மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்களே, யோகி! எங்கே போனார் யோகி? மக்களைக் காப்பாற்றாமல் எங்கே இருந்தார்? லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் காவல் துறை இருந்ததா? இத்தனை மனித உயிர்கள் இழப்புக்கு காரணமான போலே பாபா கைது செய்யப்பட்டாரா? இல்லை! எங்கே போனார்? தலைமறைவாகி விட்டார். தலைமறைவு ஆக்கப்பட்டார். ஒப்புக்கு 6 பேரைக் கைது செய்துள்ளார்கள். அவ்வளவுதான். நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் பாபா பெயரே இல்லை.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டம், சிக்கந்தராவ் தாலுகா, முகல்வடி கிராமத்தில் போலே பாபாவின் ஆன்மிகக் கூட்டம் நடந்துள்ளது. ரகசியமாக நடந்த கூட்டமல்ல இது. "விஷ்வ ஹரி" என அழைக்கப்படும் போலே பாபா வருகிறார் என்று ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. "மானவ் மங்கள் மிலான்" என்ற இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை "மானவ் மங்கள் மிலான் சத்பவன சம்மேளன சமிதி" என்ற அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.
ஆறு பேர்கள் கொண்ட குழுவாம் இது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததும் இந்த ஆறு பேரின் எண்களும் அணைத்து வைக்கப்பட்டு விட்டன. எந்த மாதிரியான ரகங்கள் இவர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அனுமதி கோரும் போது, சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள், காவல் துறையிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள். வந்தவர்கள் இரண்டரை லட்சம் பேர். ஏன் உரிய பாதுகாப்பை உ.பி. பா.ஜ.க. அரசு தரவில்லை. நிகழ்ச்சி முடிந்தபிறகு, போலே பாபாவின் கால் மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்கிறார்கள். நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழ முடியாத அளவுக்கு கூட்டம் இருந்துள்ளது.
போலே பாபா கடந்து செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டது. அவரை தரிசனம் செய்வதற்காகப் பல பெண்கள் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தனர். வழிபாடு, சொற்பொழிவு முடிந்த பிறகு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. "போலே பாபா" தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது, அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. காப்பாற்ற வழியில்லாமல் கண்ணுக்கு முன்னால் பலரும் இறந்துள்ளார்கள். நான் நான்கு மணிக்கு இங்கு வந்தேன். எங்கும் சடலங்கள் இருந்தன. ஒரு பெண் சுவாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் சிகிச்சை கிடைக்காததால் என் கண்முன்னே இறந்துவிட்டார் என்று பத்திரிகையாளர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.
இந்த போலே பாபா, பலே ஆசாமியாகத் தெரிகிறார். இறந்த பெண்ணை உயிர்த்தெழச் செய்வதாகக் கூறி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு இருப்பதாக இந்து தமிழ் திசை செய்திக் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராக இருந்துள்ளார். 1997-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளார். பின்னர் விடுதலை ஆகி இருக்கிறார். இதன்பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதன்பிறகு தனது பெயரை, "சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா" என மாற்றிக் கொண்டார். காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கினார். இவரது பேச்சுக்கு கூட்டம் கூடத் தொடங்கியது.
அதன் பிறகு அவரைப் பற்றிச் சொல்வது எல்லாம் திகில் கதையைப் போல இருக்கிறது. பாபா ஆனபிறகு ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் ஒரு கூட்டம் நடத்தினார். இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்பு பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன் மகிமையால் அப்பெண் உயிர்த்தெழுந்ததாக பொதுமக்களை நம்ப வைத்துள்ளார். பிறகு அப்பெண்ணை ஆக்ராவில் ஒரு சுடுகாட்டில் எரிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். பாபாவுடன் சேர்த்து 7 பேரை ஆக்ரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அந்த வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என பாபா விடுவிக்கப்பட்டுள்ளார் என்கிறது "இந்து தமிழ் திசை" நாளிதழ்.
பிச்சுவாவில் அமைந்துள்ள மைன்புரி ஆசிரமத்தில்தான் போலே பாபா வசித்து வருகிறார். 13 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்து உள்ள இந்த ஆசிரமத்திற்கு ஹரி நகர் என்று பெயரிட்டார். இந்த பாபாவுக்கு மாநிலம் முழுக்க 24 ஆசிரமங்கள் உள்ளன. போலே பாபா மீது ஆக்ரா, எரவாடா, காஸ்கஞ்ச், பரூக்காபாத் ஆகிய இடங்களிலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆனாலும், அவர் நாட்டு மக்களுக்கு சொற்பொழிவுகள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். 121 பேர் மரணத்துக்கு காரணமானவர், சில நாட்களில் மறக்கப்படுவார். மீண்டும் இதே சொற்பொழிவுகளைத் தொடங்கியும் விடுவார். அவரெல்லாம் உலகின் பார்வையில் குற்றம் சாட்டப்படுபவராக பார்க்கப்பட மாட்டார். அப்படி பார்த்தால் "பாவம்". "இறந்தவர்கள்" பாவம் ஆக மாட்டார்கள். ஏனென்றால், இந்த சமூகத்தில் நடக்கும் இடத்தைப் பொறுத்து நீதியும், தீர்ப்பும் மாறிவிடும்.