முரசொலி தலையங்கம் (02-07-2024)
அரசியல் வெற்றியும் கொள்கை வெற்றியும்!
“எங்களது இலக்கு மிகப்பெரியது. எங்களது கொள்கை மிகமிகப் பெரியது. எனவே, எங்களது பயணமும் மிகமிக நீண்டது. நூற்றாண்டு காலத் திராவிட இயக்கத்தின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை -பேரறிஞர் அண்ணாவில் பாணியில் -தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்தி வருகிறேன். எங்களது இலக்கில் நாங்கள் வெல்வோம். நாங்கள் வென்று கொண்டே இருப்போம். நாங்கள் வென்று கொண்டே இருப்போம்” என்ற மாபெரும் கொள்கைப் பிரகடனத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைநிமிர்ந்து முழங்கி இருக்கிறார்கள்.
‘இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, ஒரு இனத்தின் ஆட்சி, ஒரு கொள்கையின் ஆட்சி’ என்று பதவியேற்ற போதே முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அதே அடிப்படையில்தான் அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வருகிறார்கள்.
“நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல் ஒவ்வொரு நாளும் –ஒவ்வொரு மணிநேரமும் - நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் 100 விழுக்காடு வெற்றி” என்று சொல்லி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை என்றும் உறுதிபட முதலமைச்சர் சொன்னார்.
“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால் தி.மு.க. கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது” என்பதையும் பெருமையுடன் சொன்னார் முதலமைச்சர்.
முதலமைச்சர் அவர்களின் உரையில் இரண்டு விதமான வெற்றிகள் பேசப்பட்டுள்ளது. ஒன்று அரசியல் வெற்றி, இன்னொன்று கொள்கை வெற்றி. அரசியல் வெற்றியை அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தது முதல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்று வருகிறார்கள்.
‘நின்ற தேர்தல் முதல் வென்ற தலைவர் கலைஞர்’ என்றால் – ‘தலைவராக வந்த காலம் முதல் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தலிலும் வென்ற தலைவராக’ மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். திட்டங்கள் -சாதனைகள் மூலமாக அரசியல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் பெற்று வருகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் சாதாரண அரசியல் கட்சியாக இருந்தால் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சாதாரண தலைவராக இருந்திருந்தால் இந்த அரசியல் வெற்றியே போதுமானது என்று நிறைவடைந்து இருக்கலாம். நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால் - பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் கொள்கை வாரிசாக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இருப்பதால் கொள்கைப் பூர்வமான வெற்றியையே தனது முழுமையான வெற்றியாக நினைக்கிறார். அதற்கான பயணத்தையே அவர் நடத்தி வருகிறார்.
நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியே போதும் என அவர் கொண்டாடவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதோடு தனது கடமை முடிந்து விடுவதாக அவர் நினைக்கவுமில்லை. ‘எங்களது இலக்கு மிகப்பெரியது. எங்களது கொள்கை மிகமிகப் பெரியது. எனவே, எங்களது பயணமும் மிகமிக நீண்டது.’ என்று சொல்வதன் மூலமாக நூற்றாண்டின் தொடர்ச்சியாக தன்னைக் கருதுகிறார் முதலமைச்சர் அவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது, ‘முதன் முறை ஆட்சிக்கு வந்துள்ளது தி.மு.க.’ என்று பத்திரிகைகள் எழுதியது. பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் திருத்தம் சொன்னார். ‘தி.மு.க. முதல் முறையாக ஆட்சிக்கு வரவில்லை. நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் நாங்கள்’ என்று வரலாற்றை பின் நோக்கிப் பார்த்துச் சொன்னார்கள்.
‘தி.மு.க.வுக்கு நீதிக்கட்சி திராவிடர் கழகமும் தாய் தந்தை போன்றவர்கள்’ என்று முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் சொன்னார்கள். பேரறிஞர் அண்ணாவுக்கு முன்னதாக நீதிக் கட்சியின் செயலாளராக இருந்தவர்தான் கி.ஆ.பெ. அவர்கள். அந்த வரலாற்றுப் பின்புலத்தை உணர்ந்து செயல்படுபவராக மட்டுமல்ல, இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு உணர்த்துபவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள்.
ஏன் இங்கே திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது, ஏன் பா.ஜ.க. போன்ற பிளவுவாத சக்திகள் வெற்றி பெறத் திணறுகின்றன என்பதை அரசியல் ரீதியாக மட்டுமல்ல, வரலாற்றுப் பின்புலத்துடன் இப்போதுதான் அகில இந்தியக் கட்சிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. பிற மாநிலக் கட்சிகள் உணரத் தொடங்கி இருக்கின்றன. இதன் அடையாளம் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் தெரிந்தது. பா.ஜ.க.வை ஒரு அரசியல் கட்சியாக மட்டுமல்லாமல் கொள்கை எதிரியாக இந்த முறை தான் பிற கட்சிகள் விமர்சித்தது. இதுதான் பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழிக்கும் என்பதை அக்கட்சிகள் உணர்ந்தன. 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க.வை எதிர்த்து பேசியதையும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உணர முடியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சித்து ராகுல் பேசியது இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும்.
கொள்கையில் வெற்றி பெற்றால், அரசியல் வெற்றி தானாக வரும். கொள்கை வெற்றியின் மூலமாகப் பெறும் அரசியல் வெற்றி, நிலையானது. ஒரு கட்சி ஆட்சி முடிந்து, இன்னொரு கட்சி ஆட்சி வருவது மாற்றமல்ல. ஒரு தத்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்னொரு தத்துவம் ஆட்சிக்கு வருவதே சரியான மாற்றம் ஆகும். ஐம்பது ஆண்டு கால அரசியல் பயணத்தைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது இயக்கத்துக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்களுக்கும் சேர்த்து வழிகாட்டும் வழிமுறயாக இது அமைந்துள்ளது.
‘எங்களது இலக்கு மிகப்பெரியது. எங்களது கொள்கை மிகமிகப் பெரியது. எனவே, எங்களது பயணமும் மிகமிக நீண்டது.’ என்ற கொள்கை வெற்றியையும் மாண்புமிகு முதலமைச்சர் அடைவார் என்பது உறுதி.