முரசொலி தலையங்கம் (26.6.2024)
கேட்க யோக்கியதை இருக்கிறதா?
நாற்பது தொகுதியிலும் தோற்ற பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டு, 'முதலமைச்சர் ராஜினாமாசெய்ய வேண்டும்' என்று பூனையைப் போல உருட்டுகிறார். இதைச் சொல்வதற்குஅவருக்கு குறைந்தபட்ச யோக்கியதை உண்டா? முதலில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான செந்தில்குமாரை ராஜினாமா செய்யச் சொல்லட்டும் பழனிசாமி. கள்ளக்குறிச்சியில் எந்தெந்த இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்பதை மாவட்ட எஸ்.பி.யிடம் சம்பவம் நடைபெறு வதற்கு 5 நாட்களுக்கு முன்பே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் தொலைபேசியில் புகார் அளித்ததாக இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினார் பழனிசாமி. நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 7 நாட்களுக்கே முன்பே புகார் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார். எது உண்மை?
ஒரு வாரத்திற்கு முன்பே மாவட்ட எஸ்.பி.யிடம் தங்கள் கட்சி எம்.எல்.ஏ. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பழனிசாமியே செய்தியாளர் மத்தியில் இதைச் சொல்லி இருக்கலாமே?
*1993 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் 9 பேரும், திருத்தணியில் 7 பேரும் இறந்தார்களே. அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?
*1996 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயலலிதா ஆட்சியில் உறையூரில் 10 பேர் இறந்தார்களே. ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?
*2001 ஆம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயத்துக்கு 52 பேர் பலியானார்களே? அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?
*அதே ஆண்டில் செங்குன்றம் பகுதியில் 30 பேர் இறந்தார்களே. ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? செங்குன்றம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 19 பேர் மீதான விசாரணையில் அ.தி.மு.க. ஆட்சி சரியான முறையில் செய்யாததால் 2018 ஆம் ஆண்டு 19 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம். “35 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானது வேதனையானது என்றால் அதை நிரூபிக்க அரசு தரப்பு போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை” என நீதிபதி எம்.வி.முரளிதரன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் லட்சணம் ஆகும்.
இதே பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மீடியாக்களில் வந்த தகவல்களைப் பார்ப்போமா?
*2017 ஜூலை 9 -- அன்றைய முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனை என நியூஸ் 7 செய்தி வெளியிட்டது.
*2018 மே 19 - நாகை மாவட்டம் பட்டப்பகலில் கல்லூரிக்கு அருகில் 20 ரூபாய்க்கு சாராயம் விற்கும் சிறுவர்கள் என்ற வீடியோவை நியூஸ் 18 வெளியிட்டது.
*2019 நவம்பர் 8 - கல்வராயன் மலைப் பகுதியில் பள்ளி சீருடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
*2019 நவம்பர் 14 - சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்ததாக ராஜ் டிவி செய்தி வெளியிட்டது.
*2019 ஜனவரி 11 - பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவக்குமார் மீது வழக்கு போடப்பட்டது.
*2019 ஆகஸ்ட் 27 - சீர்காழி அருகே எடக்குடி வடபாதி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும் வைத்தீஸ்வரன் கோவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவருமான அஞ்சம்மாள் கைது செய்யப்பட்டார். வைக்கோல் போரில் 47 கேன்களில் 1600 லிட்டர் சாராயத்தை அவர் வைத்திருந்தார்.
*2020 ஏப்ரல் 14 - யூடியூப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் என்ற வீடியோவை பாலிமர் சேனல் வெளியிட்டது.
*2020 ஜூன் 26 - வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே கள்ளச்சாராயக் கடத்தல் பாதையை அடைத்தவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட 3 பேர் என்ற செய்தியை தந்தி டிவி வெளியிட்டது.
*2020 ஜூலை 28 - மயிலாடுதுறையில் பாண்டி ஐஸ் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்றதாக ஜெயா ப்ளஸ் செய்தி வெளியிட்டது.
*2021 ஜூன் 26 - ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கள்ளச்சாரய ஊறல் போட்டு வைத்திருந்த அதிமுக பிரமுகர் நேரு என்பவர் கைது செய்யப்பட்டார்.
*2021 ஜூலை 27 - கோவையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 லிட்டர் சாராய ஊறல், 4 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.
இவை எல்லாம் கடந்தஅ.தி.மு.க. ஆட்சியின் அழியாத சாட்சியங்கள் ஆகும். இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்க்கு வந்த வார்த்தைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
*தேசிய குற்ற பதிவேடு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் 6 ஆவது இடத்தை எட்டியது தான் எடப்பாடி ஆட்சி காலம் ஆகும்.
*கொலைகள் அதிகம் நடந்த மாநகரங்களில் நான்காவது இடத்தை சென்னை பெற்றது எடப்பாடி ஆட்சி காலம்.
*இந்திய தண்டனைச் சட்டப்படியான குற்றங்களில் 6 ஆவது இடத்தில் தமிழ்நாட்டை கொண்டு போய் நிறுத்தியவர் பழனிசாமி.
*பொதுமக்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக அதிகம் வழக்கு போட்டதில் 4 ஆவது மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியவர் பழனிசாமி.
*பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலை அதிகம் நடக்கும் மாநிலப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் தமிழ்நாட்டை ஆக்கியவர் பழனிசாமி.
*பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் 8 இடத்தில் தமிழ்நாட்டை நிறுத்தியவர் பழனிசாமி.
*தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டை 2 ஆவது இடத்தில் நிறுத்தியது பழனிசாமி ஆட்சிகாலம்.
இவருக்கு கள்ளக்குறிச்சியைப் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா?