முரசொலி தலையங்கம்

40-க்கு 40 வெற்றி நாயகர் : “அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்” - முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு !

இன்றைய அரசியலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அபூர்வமான தலைவரே ஆவார். அவர் நிகழ்த்திய அற்புதமே இந்த வெற்றி!

40-க்கு 40 வெற்றி நாயகர் : “அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்” - முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

“அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்!”

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை ‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாட்டில் பெற்றது. புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றியைக் கைப்பற்றியதன் மூலமாக ‘இந்தியா’ கூட்டணியின் கோட்டையாக தமிழ்நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களில் கூட ஒரு தொகுதி, இரண்டு தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பம்மாத்து பலிக்கவில்லை. பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டப்பட்டது பா.ஜ.க.

“நாங்கள் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை” என்று பா.ஜ.க. கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கண்ணீரோடு தழுதழுக்கச் சொன்னார் நரேந்திரமோடி. ஏன் வெற்றி பெற முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லவில்லை. அதை அவரும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. உணர்ந்தாலும் சொல்லவும் மாட்டார். சொல்லவும் முடியாது.

பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக மட்டுமல்ல, தேர்தல் அரசியலுக்காக மட்டுமல்ல, கொள்கை ரீதியாக விமர்சித்து அதன் முகத்திரையைக் கிழித்து வரும் கூட்டணியாக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதுவும் இந்தத் தேர்தலுக்கு முன்னதாக உருவான கூட்டணி அல்ல இது. ஐந்தாண்டு காலமாக பாசிச பா.ஜ.க.வுக்கு எதிராக ஜனநாயகப் போர் நடத்தி வரும் கூட்டணி இது. பாசிச பா.ஜ.க.வை வளர்ப்பது, இந்தியாவுக்கே ஆபத்தானது என்பதை அடித்தளம் வரை பரப்புரை செய்து வைத்திருந்ததால்தான் இந்த வெற்றியை தமிழ்நாட்டில் பெற முடிந்தது.

40-க்கு 40 வெற்றி நாயகர் : “அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்” - முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு !

“பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது அவமானம் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்” என்று தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பரப்புரை செய்தார்கள். இதனைத் தமிழ்நாட்டு மக்கள் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதன் அடையாளம்தான் நாற்பதுக்கு நாற்பது எனப் பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றிகரமான முடிவுக்கான வெற்றி விழா தான் நேற்றைய தினம் கோவையில் நடந்த வெற்றிகரமான விழா ஆகும்.

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா -– - நாற்பதுக்கு நாற்பது வெற்றியைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா –- இந்த வெற்றிக்கு ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களை அழைத்துச் சென்ற மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு முப்பெரும் விழாவாக கோவையில் கொண்டாடப்பட்டது. இந்த மேடையிலும் 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையே புலப்பட்டது.

‘செய்கூலி, சேதாரம் இல்லாமல் முழுமையாகக் கிடைத்த வெற்றி’ என்று இதனை உருவகப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும், ‘இந்த வெற்றியை சாதித்துக் காட்டியது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தான்’ என்று புகழ் மாலை சூட்டினார்கள். ‘உங்களால் மட்டும் எப்படி முழுமையான வெற்றி சாத்தியமானது என்று அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்’ என்றார் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ‘தி.மு.க.வுக்கு செல்வாக்கான தொகுதியைக் கூட கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி, எங்களுக்கு பலவீனம் என்று தெரிந்த தொகுதியை தாங்கள் எடுத்துக் கொண்டு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்ட பாங்குதான் இந்த வெற்றிக்குக் காரணம்’ என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன். ‘இங்கே தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போலவே மற்ற மாநிலங்களிலும் தலைவர்கள் செயல்பட்டு இருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியையே பிடித்திருக்கும்’ என்றார் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்.

40-க்கு 40 வெற்றி நாயகர் : “அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்” - முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு !

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனின் உரை உணர்ச்சியின் துடிப்பாக மட்டுமல்ல, உண்மையின் வெடிப்பாக அமைந்திருந்தது. “சிதம்பரம் தொகுதியில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகிய இரண்டு அமைச்சர்களைப் போட்டார் முதலமைச்சர் அவர்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எம்.ஆர்.கே.விடம் பேசிக் கொண்டே இருந்தார் முதலமைச்சர். தங்கள் கட்சி வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். தி.மு.க. வலிமை பெற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கி, ரிஸ்க்கான தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம் என கூட்டணிக் கட்சிகளையும் தனது கட்சியாக எண்ணி வெற்றி பெற வைத்த பெருமை அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. இதுதான் அரசியலில் அபூர்வம்! அரசியலில் அற்புதம்” என்றார் தொல்.திருமா.

இவை அனைத்துக்கும் பிறகு இறுதியாக உரையாற்ற வந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த வெற்றியை தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும், ‘இந்தியா’ கூட்டணி தொண்டர்களுக்கும், அனைத்துத் தலைவர்களுக்கும் உரித்தாக்கி உயர்ந்து நின்றார். “இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி - காலத்தை தனது கடமைகளுக்காக மட்டுமே ஒப்படைத்து - 40 மட்டும்தான் நமது இலக்கு - என்ற அடிப்படையில் உழைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் - தோழன் - உடன்பிறப்பு அத்தனை பேரும் இருக்கும் திசையை நோக்கி நான் வணங்குகிறேன்” என்று தனக்கு போட்ட புகழ்மாலைகள் அனைத்தையும் தொண்டனுக்கு அணிவித்தார் தலைவர்.

“இவை தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டு அல்ல, மேடையில் இருக்கும் அனைத்துத் தலைவர்களுக்கும் உரிய பாராட்டு” என்று சொல்லி நிறைகுடமாக நின்றார் தலைவர். ஆம்! இன்றைய அரசியலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அபூர்வமான தலைவரே ஆவார். அவர் நிகழ்த்திய அற்புதமே இந்த வெற்றி!

- முரசொலி தலையங்கம்

17.06.2024

banner

Related Stories

Related Stories