முரசொலி தலையங்கம் (15-06-2024)
குளறுபடிகள் அம்பலம் ஆகிறது!
நீட் தேர்வில் குளறுபடிகள் அம்பலம் ஆனதும், ஒன்றிய அரசு பின்வாங்கத் தொடங்கி இருக்கிறது. ஆயிரத்து 563 மாணவர்களுக்குக் கொடுத்த கருணை மதிப்பெண்ணை ரத்து செய்யப் போவதாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறி இருக்கிறது.
நீட் தேர்வில் இதுவரை ரகசியமாக நடந்த குளறுபடிகள், மோசடிகள், தகிடுதத்தங்கள் இந்த ஆண்டு வெளிப்படையாகவே நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனை மறைப்பதற்காகத்தான் ஜூன் 14 ஆம் தேதி வர வேண்டிய தேர்வு முடிவுகளை, ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் நாளன்று வெளி யிட்டு மறைக்கப் பார்த்தார்கள். “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பதைப் போல ‘நீட் திருட்டுத் தனம் மக்கள் மத்தியில் அம்பலம் ஆனது.
முன் எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண் எடுத்தார்கள். இவர்களில் 6 பேர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள். சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்துள்ளார்கள். கேட்டால், ‘என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் சில மாற்றங்கள் இருந்ததால் கொடுத்தோம்’ என்று முதலில் சொன்னார்கள். ‘தேர்வு மையத்துக்கு சில மாணவர்கள் தாமதமாக வந்தார்கள், அதனால் தேர்வு எழுதும் நேரத்தை இழந்தார்கள், அதனால் கருணை மதிப்பெண் வழங்கினோம்’ என்று தேசிய தேர்வு முகமை காதில் பூ சுத்தியது.
தேர்வு மையத்துக்கு ஒழுங்கான நேரத்துக்கு வராவிட்டால் கூடுதலாக நேரம் கொடுக்கலாமே தவிர, கூடுதல் மதிப்பெண்ணா கொடுப்பார்கள்? இந்த பஞ்சமா பாதகம் எல்லாம் பா.ஜ.க. ஆட்சியில்தான் நடக்கும்.
கருணை மதிப்பெண்ணாக எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா? 70 முதல் 80 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்கள். கருணை மதிப்பெண் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஒரு மதிப்பெண், அல்லது 2 மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால் 70 மதிப்பெண், 80 மதிப்பெண்கள் எல்லாம் எப்படி கருணை மதிப்பெண் ஆகும்? , தேசிய தேர்வு முகமை மொத்தமாக மதிப்பெண் போட்டுள்ளதாகவும், இதுதான் ‘தேசிய’ அநீதியாகும்.
20 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் ஒருசில மாணவர்களுக்குச் சாதகமாக தேசிய தேர்வு முகமை நடந்து கொண்டுள்ளது. அதனைக் கண்டுகொள்ளாமல் ஒன்றிய பா.ஜ.க. அரசும் இருந்துள்ளது. நாடறிய மாட்டிக் கொண்டதும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நல்ல பிள்ளை வேஷம் போடுகிறது.
ஆயிரத்து 563 பேரின் கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கு யாருமே கொண்டு போகவில்லை என்றால் பா.ஜ.க. அரசு இதனைச் செய்திருக்குமா? செய்திருக்காது. இத்தனை ஆண்டுகளாக நீட் தேர்வில் இப்படிப் பல மோசடிகள் நடந்துதான் வருகின்றன. அப்போதெல்லாம் பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாதம்தோறும் லட்சம் கோடிகள் சம்பாதிக்கும் பயிற்சி நிறுவனங்களின் பாதம் தாங்கிக் கிடந்தது. கார்ப்பரேட்டுகளின் ஆட்சியை கல்வித் துறையிலும் பா.ஜ.க. ஆட்சி நிலைநாட்டிக் கண்டுகொள்ளாமல் இருந்தது.
தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்தில் “நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டுக் காத்திருக்கிறோம். நீட் தேர்வை முழுமையாக விலக்குங்கள், அல்லது தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதையெல்லாம் வெறும் அரசியல் நடவடிக்கை என்று பா.ஜ.க. அரசு ஒதுக்கித் தள்ளியது.
ஆனால் இன்று, நீட் தேர்வு எழுதிய மாணவர்களே இந்த மோசடித்தனத்தை உணர்ந்துவிட்டார்கள். நீட் தேர்வு எழுதிப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். ‘கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று அந்த மாணவர்கள் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதீன் அமானுல்லா அமர்வு முன்னால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டியது தேசிய தேர்வு முகமையின் பொறுப்பு” என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். ‘நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது’ என்ற சொற்கள்தான் நீட் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் விமர்சனம் ஆகும். இந்தப் புனிதத் தன்மையைக் கெடுத்தது யார்? என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுக் குழுமம், அதனை வேடிக்கை பார்த்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஒன்றிய அரசின் சார்பிலும், என்.டி.ஏ.சார்பிலும் ஒரே வழக்கறிஞர்தான் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும், மாறுபாடும் இல்லை என்பது இதன்மூலம் விளங்குகிறது. தேசிய தேர்வுக் குழுமத்தின் முடிவுகளுக்கு ஒன்றிய அரசும் உடந்தை என்பது இதன்மூலம் தெரிகிறது. கருணை மதிப்பெண் மோசடி அம்பலம் ஆனபிறகும் அவர்கள் தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை. கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப் போகிறார்களாம். அதில் என்ன அரங்கேற இருக்கிறதோ? தெரியவில்லை. கோடிகளில் புரளும் கோச்சிங் சென்டர்களுக்காக வாதிடுகிறார்கள்!
மொத்தத்தில் நீட் தேர்வையே ரத்து செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வாக இருக்க முடியும். அப்போதுதான் கல்வித் துறையின் புனிதத்தன்மை காக்கப்படும்.