முரசொலி தலையங்கம்

மாயையில் சிக்கிய பா.ஜ.க. தொண்டர்கள் : மோடியை கடுமையாக விமர்சித்த RSS - முரசொலி தலையங்கம் !

மாயையில் சிக்கிய பா.ஜ.க. தொண்டர்கள் : மோடியை கடுமையாக விமர்சித்த RSS - முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் 14.6.2024

ஆர்.எஸ்.எஸ் கோபத்தின் பின்னணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவுதான் பா.ஜ.க. பா.ஜ.க.வின் தாய் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். –- இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அடங்கிய பிள்ளையாக இல்லாமல், அதையே அடக்கும் பிள்ளையாக வளர்ந்ததால் தான் அந்த அமைப்பே மோடியைக் கைவிட்டது. விமர்சிக்கத் தொடங்கியது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்படையாக பா.ஜ.க.வுக்காகப் பணியாற்றவில்லை. அதன் தலைவரான மோகன் பகவத், மோடி மீண்டும் ஆட்சி அமைக்க ஆசீர்வாதம் எதையும் வழங்கவில்லை. ‘நாங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்போமே தவிர, யாரையும் வாக்களிக்க வைக்கப் பணியாற்ற மாட்டோம்’ என்று அந்த அமைப்பைச் சேர்ந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டர்கள் ஆங்கில ஊடகங்களில் வெளிப்படையாகவே பேட்டி அளித்தார்கள். இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க.வை, குறிப்பாக மோடியைக் கடுமையாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

மோடியின் தன்முனைப்பையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். ‘எந்த ஒற்றை மனிதரே, அனைத்தையும் தீர்த்து வைத்து விடுவார் என்று நம்புவது தவறு’ என்று தேர்தலுக்கு முன்னதாகவே மோகன் பகவத் சொன்னார். அதையேதான் இப்போதும் சொல்லி இருக்கிறார் மோகன் பகவத்.

மாயையில் சிக்கிய பா.ஜ.க. தொண்டர்கள் : மோடியை கடுமையாக விமர்சித்த RSS - முரசொலி தலையங்கம் !

புதிய பா.ஜ.க. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நாளில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டத் தொடக்க விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். “ஒரு உண்மையான சேவகர் வேலை செய்யும் போது கண்ணியமான நடத்தையைப் பராமரிக்கிறார். கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவர் தனது வேலையைச் செய்கிறார். ‘இதை நான் செய்தேன்’ என்ற அகங்காரம் இல்லை. அத்தகைய நபருக்கு மட்டுமே சேவகர் என்று அழைக்கப்பட உரிமை உண்டு. உண்மையான சேவகர்கள் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள். அவர்களிடம் ஆணவம் இருக்காது” என்று சொன்னது மோடியை மனதில் வைத்துத் தான் என்று விளக்கங்கள் பொதுவெளியில் பரவி வருகின்றன.

“தேர்தல் என்பது யுத்தம் அல்ல, பலத்தை எல்லாம் காட்டி ஆக்ரோஷமாக தேர்தல் களத்தில் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியமும், நாகரிகமும் அவசியம். இந்தத் தேர்தலில் அவை பின்பற்றப்படவில்லை. கண்ணியத்தைக் கடைப்பிடிப்பவரே உண்மையான மக்கள் சேவகர். மக்கள் பணி செய்பவரையே, அந்தப் பணி செய்யும் தலைவனை சேவகன் என்கிறோம். நான் சொல்வது மட்டுமே உண்மை, அது மட்டுமே செல்லுபடியாகும் என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை” என்று மோடியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார் மோகன் பகவத்.

தேர்தல் நேரத்தில் கண்ணியமற்ற வகையில் மோடி பேசியதன் மூலமாக, பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விமர்சிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டியும் அவர் பேசி இருக்கிறார். “தேவையில்லாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் வம்புக்கு இழுத்தார்கள். தேர்தலில் எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் அல்ல” என்றும் சொல்லி இருக்கிறார் பகவத். மோடியின் கண்ணியமற்ற உரைகளால் தனது அமைப்பும் விமர்சிக்கப்பட்டது என்று பகவத் கருதுகிறார்.

மோகன் பகவத் மறைமுகமாக விமர்சித்தார் என்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஆர்கனைசர்’ வெளிப்படையாகவே விமர்சித்து எழுதி இருக்கிறது. “நரேந்திர மோடியின் செல்வாக்கு என்ற குமிழுக்குள் வசதியாக அமர்ந்து கொண்டு, எப்படியும் 400 இடங்களை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பா.ஜ.க. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் தேர்தல் முடிவானது உண்மை நிலவரத்தை உணர்த்தி விட்டது. தேர்தல் என்றால் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவதாலோ, செல்ஃபி போடுவதாலோ வெற்றி பெற்று விட முடியாது” என்று கிண்டலடித்துள்ளது ‘ஆர்கனைசர்’.

“மாயையில் சிக்கிய பா.ஜ.க. தொண்டர்களும் தலைவர்களும் மோடியின் செல்வாக்கில் நம்பிக்கை கொண்டு, தெருக்களில் இருந்த களநிலவரத்தை காதுகொடுக்காமல் இருந்தார்கள்” என்று மண்டையில் கொட்டி இருக்கிறது அந்தப் பத்திரிகை.

மாயையில் சிக்கிய பா.ஜ.க. தொண்டர்கள் : மோடியை கடுமையாக விமர்சித்த RSS - முரசொலி தலையங்கம் !

கட்சி மாறி வந்தவர்களுக்கு அதிகமாகப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியதும் தோல்விக்குக் காரணம் என்றும் அந்தப் பத்திரிகை சொல்லி இருக்கிறது. அதுவும் உண்மைதான். 441 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 110 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. இதில் 69 பேர் தேர்தலில் தோற்றுப் போயிருக்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் பா.ஜ.க.வின் வாஷிங் மிஷின் மூலமாக மிரட்டப்பட்டு கட்சியில் இணைக்கப்பட்ட 26 பேரில் 21 பேர் தேர்தலில் தோற்றுள்ளார்கள். இதையும் ‘ஆர்கனைசர்’ விமர்சித்துள்ளது.

கட்சிகளை உடைக்கும் பா.ஜ.க.வின் கீழ்த்தரமான செயல்களை ‘ஆர்கனைசர்’ கடுமையாகக் கண்டித்துள்ளது. மராட்டியத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு இதுவே அடிப்படைக் காரணம் ஆகும் என்கிறது அந்தப் பத்திரிகை.

மோடி என்ற தனிமனிதரின் மூலமாக அனைத்தும் தீர்க்கப்பட்டு விடும், அவர் ஒருவரே போதும் என்ற தன்முனைப்பு எண்ணமும் -– மக்களின் பிரச்சினைகள் எதையும் தீர்க்காமல் சமூக வலைதளங்களில் பொய்களைப் பரப்புவதன் மூலமாக வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க. நினைத்ததும், மணிப்பூர் போன்ற பெரிய வன்முறைப் பிரச்சினைகளைக் கூட பா.ஜ.க. தீர்க்க முனைப்புக் காட்டாததும், தேர்தல் நேரத்தில் கண்ணியக் குறைவாகப் பேசியதும், கட்சிகளை உடைத்ததும், கட்சி மாறிகளுக்கு வாய்ப்பு வழங்கியதும் -– ஆகிய பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளிப்படையாக வைத்துள்ளது. இவை எதுவும் புதிய கருத்துகள் அல்ல. பொதுவெளியில் சொல்லப்பட்டவைதான். அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சொல்வதுதான் இங்கு கவனத்துக்கு உரியது.

“தேர்தல் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டால், அதை பா.ஜ.க. தலைவர்கள் தான் கேட்க வேண்டும். இந்த முறை அவர்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை’ என்கிறது ‘ஆர்கனைசர்’. தனது முகத்தைக் காட்டி 400 வென்று விடலாம் என்று மோடி நினைத்திருக்கலாம்!?

banner

Related Stories

Related Stories