முரசொலி தலையங்கம்

ஆர்.என். ரவி என்ன மாதிரியான ரகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்? : முரசொலி கடும் தாக்கு!

தமிழ்நாடு உயர் கல்வித் துறையில் முன்னேறிய மாநிலம்தான்.

ஆர்.என். ரவி என்ன மாதிரியான ரகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்? : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (30-05-2024)

இவர் வந்துதான் வளர்த்தாராம்?

தமிழ்நாட்டில் உயர் கல்வியே இல்லை என்பதைப் போலவும், தான் வந்து தான் பல்கலைக் கழகங்களையே வளர்த்ததைப் போலவும் பேசி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தான் ஏதோ வெட்டி முறிப்பதைப் போல எதாவது ஒரு கூட்டத்தைக் கூட்டி வைத்து எதையாவது உளறி வைப்பது ஆளுநரின் அன்றாட வேலையாக இருக்கிறது. ஊட்டிக்கு பயணம் மேற்கொண்ட ஆளுநர், அங்கே பல்கலைக் கழகத் துணை வேந்தர்களை வரவழைத்து ஏதோ ஆலோசனை செய்துள்ளார். அதில் அவர் பேசிய பேச்சைக் கேட்டால் கல்வியாளர்கள் அனைவரும் தலையில் அடித்துக் கொள்வார்கள்.

“2021 ஆம் ஆண்டு நான் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தன. சில பிரச்சினைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக் கழகமும் மற்ற பல்கலைக் கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன. அவற்றின் தரமும் குறைந்து காணப்பட்டது. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இதை ஒன்றிணைக்கவே துணைவேந்தர்கள் மாநாடு 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது” என்று திருவாய் மலர்ந்துள்ளார் ஆளுநர். மூன்று கூட்டம் போட்டதால் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் ‘ஒரே பாட்டில் முன்னேறுவதைப் போல’ முன்னேறி விடுமா? காற்றில் கயிறு சுற்றி இருக்கிறார் ஆளுநர்.

தமிழ்நாடு உயர் கல்வித் துறையில் முன்னேறிய மாநிலம்தான். பள்ளிக் கல்வி என்பது பெருந்தலைவர் காமராசர் காலம் பொற்காலம் என்றால், கல்லூரிக் கல்வியானது முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தான் செழித்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்கல்வி - ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி இருக்கிறார்.

ஆளுநர் நேற்று இப்படி பேசிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் உயர்கல்வியின் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளியாகி இருந்தது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிகிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இதெல்லாம் தெரிந்து கொண்டு துணைவேந்தர் களோடு ஆலோசனை நடத்தப் போயிருக்க வேண்டும் ஆர்.என்.ரவி.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளது.

தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.

தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது.

தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில்உள்ளது.

தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளது.

100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளது.

40 பல்மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது.

30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளது.

30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளது.

ஆர்.என். ரவி என்ன மாதிரியான ரகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்? : முரசொலி கடும் தாக்கு!

இப்படி நான் அடுக்கிக் கொண்டே போக முடியும். கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். இதெல்லாம் ஆர்.என்.ரவி நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டு உயர்கல்வி நிலைமை ஆகும்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணம். இதெல்லாம் ரவிக்குத் தெரியுமா?

தி.மு.க.வின் முதல் ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 67 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 68 தான். ஆனால் கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 காலக்கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது!

•கோவையில் வேளாண் பல்கலைக் கழகம்!

•சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்!

•சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம்!

•டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம்!

•உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம்!

•நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்!

•சேலம் பெரியார் பல்கலைக் கழகம்!

•கோவை, திருச்சி, மதுரை, நெல்லையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள்!

•ஏராளமான மருத்துவக் கல்லூரிகள்! –

– இவை அனைத்தும் உருவாக்கப்பட்டதால் தான் உயர் கல்வியில் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் இவர் வந்துதான் ஏதோ பல்கலைக் கழகங்களைச் சரி செய்து விட்டதாக பீற்றிக் கொள்கிறார்.

புதிய தேசியக் கொள்கை வந்துதான் வளர்க்கப் போகிறதாம். இவர்களது தேசியக் கொள்கை என்பது காவிக் கொள்கை. குலக்கல்விக் கொள்கை. வடிகட்டுதல் என்ற பெயரால் மாணவர்களை கல்வி நிலையங்களில் இருந்து இடைநீக்கம் செய்யும் கொள்கை. ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தில் இந்தியையும் பின்னர் சமஸ்கிருதத்தையும் உட்கார வைக்கும் கொள்கை. ‘வேல்யூஸ்’ என்று பேசிவேலை வாய்ப்பைப் பறிக்கும் கொள்கைதான் இவர்களது புதிய கல்விக் கொள்கை ஆகும்.

“தவறான கல்விக் கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர்” என்கிறார் ஆளுநர். படித்த இளைஞர்கள் மிகச் சிறந்த வேலைகளில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களது படிப்பு மேலும் மேலும் அவர்களை உயர்த்தி வருகிறது. படித்தவர்கள் யாரும் கையேந்தத் தேவையில்லை. அவர்களது பட்டமே, அவர்களை அங்கீகரிக்கும். வாழ வைக்கும். அவர்களை உயர வைக்கும். அவர்கள், தங்களது பட்டங்களின் மூலமாக இந்த மாநிலத்தை உயர்த்தி வருகிறார்கள்.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை உட்கார வைத்துக் கொண்டு படிப்பையும் பட்டத்தையும் கேவலமாகப் பேசுபவர் என்ன மாதிரியான ரகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்?

banner

Related Stories

Related Stories