முரசொலி தலையங்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? : அமித்ஷாவுக்கு முரசொலி கேள்வி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கப்போகிறாராம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? : அமித்ஷாவுக்கு முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (28-05-2024)

பாகிஸ்தான் பம்மாத்து!

இந்திய நாட்டு மக்கள் காதில் காஷ்மீரில் இருந்து கராச்சி அளவுக்கு நீளமான பாகிஸ்தான் பூவைச் சுற்றி விட்டார் உள்துறை அமைச்சர்அமித்ஷா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கப்போகிறாராம்!

திருவாளர் அமித்ஷா அவர்களே! இந்த நோக்கத்துக்காக கடந்த பத்தாண்டு காலத்தில் என்ன செய்தீர்கள் பெரியவரே? இப்போதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி உங்களுக்கு ஞாபகம் வந்ததா? வருகிறதா? இந்த பத்தாண்டு காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மறந்து போனதா? மறந்து போக என்ன காரணம்? இப்போதுதான் இந்தியாவைப் பற்றியே பா.ஜ.க.வுக்கு நினைவுக்கு வருகிறதா? கனவுலகத்தில் இருந்தீர்களா? அல்லது இந்தியாவுக்கு வெளியில் இருந்தீர்களா? வெளி நாட்டிலேயே இருந்தீர்களா?

பத்தாண்டு காலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அந்த நாட்டின் மீது தொடுத்த யுத்தம் என்ன? யுத்தம் வேண்டாம்... நடந்த பேச்சுவார்த்தைகள் என்ன? ஐக்கிய நாடுகள் அவையில் இது எழுப்பப்பட்டதா? உலக நாடுகளின் மேஜைகளில் நிபந்தனையாக வைக்கப்பட்டதா? பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏதாவது கொடுக்கப்பட்டதா?

காஷ்மீரை ஆக்கிரமித்தது பெரிய நாடுகளான அமெரிக்காவோ,சீனாவோ அல்ல. மிகமிகச் சிறிய நாடான பாகிஸ்தான். 65 இஞ்ச் பிரதமரால் ஏன் பாகிஸ்தானை எதிர்கொள்ள முடியவில்லை? இது எதையும் செய்யாமல், ஆட்சியை விட்டு இறங்குவதற்கு பத்து நாட்கள்தான் இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கப் போகிறாராம் அமித்ஷா? இதனை இந்திய நாட்டு தேசபக்தர்கள் நம்ப வேண்டுமாம்? இந்த மாதிரியான பூச்சாண்டி பம்மாத்துகளுக்கு மயங்க இந்தியாவில் இப்போது யாரும் இல்லை.

பத்தாண்டுகளுக்கு முன்னால் சமூக வலைதளங்கள் பரவாத காலத்தில் இது போன்ற பூச்சுற்றலைச் செய்தால் மக்கள் நம்புவார்கள். இப்போதெல்லாம் சொன்னால், உடனே அந்தப் பிரச்சினை என்ன என்று பார்த்து ஐந்து நிமிடத்தில் உண்மை என்ன, பொய் எது என்பதை மக்கள் உடனடியாக உணர்ந்து விடுகிறார்கள். அந்த பிரச்சினை அங்குலம் அங்குலமாக பொதுமக்கள் பார்வைக்கு போய்விடுகிறது. இன்னும் பத்தாண்டுகள் பின் தங்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஜப்பான் போட்டோவைக் காட்டி குஜராத் என்று சொன்னதைப் போல இப்போதும் சொல்லலாம் என்று நினைக்கிறார்களா?

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் பகுதிதான். அந்தப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும் சம்பவங்கள் நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்வதும் தொடர்ந்து வந்தது. பிரதமர்மோடி ஆட்சியில் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. துல்லிய தாக்குதல் மூலம் அவர்கள் இடத்துக்கே சென்று பயங்கரவாதிகளை அழித்து, பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோடியால் மட்டும்தான் பயங்கரவாதத்துக்கும் நக்சல் தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று இமாச்சலப்பிரதேசத்தில் இஷ்டத்துக்கு கதை விட்டிருக்கிறார் அமித்ஷா.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? : அமித்ஷாவுக்கு முரசொலி கேள்வி!

2019 பிப்ரவரி 14 அன்று சி.ஆர்.பி.எஃப். படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 40 பேர் பலியானார்கள். இதற்கு புல்வாமா தாக்குதல் என்று பெயர். ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியம்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்று அப்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால்மாலிக் சொன்னதை நாடு இன்னமும் மறக்கவில்லை.

*2016 சனவரி 2 ஆம் நாள் நடந்தது பதான்கோட் தாக்குதல். இதில் 7 பாதுகாப்பு படை வீரர்களும் 6 தீவிரவாதிகளும் இறந்தார்கள். தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்தார்கள். மறுநாள் கைவினை குண்டு வெடித்து மேலும் ஒரு வீரர் இறந்தார். அதற்கு மறுநாள் வான்படைத் தளத்தை மீட்கும் நடவடிக்கை நடந்தது.

*2016 பிப்ரவரியில் பொம்பொரியில் - எட்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

*2016 செப்டம்பரில் - உரியில் இருக்கும் இந்திய ராணுவத் தலைமையகத்தில் நடந்த தாக்குதலில் 19 படைவீரர்கள் பலியானார்கள்.

*2017 ஏப்ரல் 24 அன்று இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பலி.

*2017 - போபால் உஜ்ஜைனி தொடர் வண்டியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டுப் பேர் காயம்.

*2017 - அமர்நாத் கோவில் தாக்குதலில் ஏழு பேர் பலி.

*2017 - லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி.

*2019 பிப்ரவரி 14 – புல்வாமா தாக்குதல் நடந்தது. ஒரு தற்கொலை தீவிரவாதி தாக்கியதில் 40 படைவீரர்கள் பலி.

*2021 அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் 11 பேர் பலி.

*2022 ஆகஸ்ட் 11- இரஜோரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணம்.

கடந்த மே 4 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சண்டை ஏற்பட்டது. மே 19 ஷோபியான் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டார்கள். சுற்றுலா வந்தவர்கள் பலியானார்கள். மே 22 ஆம் தேதி அகமதாபாத்தில் கைதான 4 பயங்கரவாதிகள், ‘பாகிஸ்தான் உத்தரவுக்காக காத்திருந்தோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பாகிஸ்தான் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை எல்லாம் நாளிதழ்களில் வந்த செய்திகள்தான். இது எல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.

banner

Related Stories

Related Stories