முரசொலி தலையங்கம்

”திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம்” : ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கும் முரசொலி!

ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது இருபதாம் நூற்றாண்டில் திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம் ஆகும்.

”திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம்” : ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-05-2024)

திருவள்ளுவருக்கே ‘திரு’ அவமானம்

வைகாசி மாதம் அனுஷம் நடசத்திரத்தன்று திருவள்ளுவருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. “நான் இங்கு ஆளுநராக இருப்பதை விட திருவள்ளுவரின் மாணவனாக, சீடனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது இருபதாம் நூற்றாண்டில் திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம் ஆகும். இதை இழைத்தவர் மாட்சிமை தங்கிய ஆளுநர் என்பதால் மரியாதையாக ‘திரு’ அவமானம் என்று சொல்லிக் கொள்ளலாம்!

பள்ளியில் படிக்கும் போது அறிந்தாராம், தென்கோடி மாநிலத்தில் திருவள்ளுவர் என்ற மகான் வாழ்ந்ததாக அறிந்தாராம், திருக்குறள்தான் அவருக்கு உத்வேகத்தை அளித்ததாம், தமிழ்நாடு வந்ததும் அவர் வாங்கிய முதல் புத்தகம் திருக்குறள் தானாம், திருக்குறள்தான் உண்மையான தர்ம சாஸ்திரமாம். - இப்படி வரிசையாகச் சொல்லி இருக்கிறார் ஆர்.என் .ரவி.

காவிக் கறை படர்ந்த திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி இருக்கிறார் ஆர்.என்.ரவி. அவர் திருக்குறளை ஒரு வரி கூட படிக்கவில்லை என்பதற்கு இதுவொன்றே சாட்சியம். காவி இன்று எதன் அடையாளமாக இருக்கிறது? பிளவுவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. அந்தக் காவியை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவருக்கு போர்த்துவதே அவருக்கு அவமானம் இல்லையா? இவர் என்ன திருக்குறளை படித்துக் கிழித்திருப்பார்? படிக்காமல் கிழித்தெறியப் பார்க்கிறார்.

இது காலம் காலமாக இருப்பதுதான். ‘அரவணைத்து அழித்தல்’. அதைத்தான் செய்கிறார் ரவி. திருக்குறள் மேலெழுந்து வந்தபோது, கம்பராமாயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, குறளை கீழே இழுக்கப் பார்த்த கூட்டம் தமிழ்நாட்டில்தான் உண்டு. இந்தக் கூட்டம் பேசும் இலக்கியம் கூட, பக்தி இலக்கியமாக இருக்குமே தவிர, சங்க இலக்கியமாக இருக்காது. சங்கத் தமிழ்ப் பக்கம் வரமாட்டார்கள். சங்கித் தமிழ் பக்கமாக இருப்பார்கள். இந்த தடைக்கற்களை உடைத்து திருக்குறள், உலகப் பொதுமறையாக உயர்ந்ததும், வேறு வழியில்லாமல் 1330 குறளில் நான்கைந்து குறளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, ‘வேத நெறி’ இருப்பதாக புனைவுரைகளை ஆற்றி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு என்ன பேசினார் ஆளுநர்?“திருக்குறளை ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. திருவள்ளுவர் குறிப்பிட்ட தமிழர்களின் ஆதிபகவன் என்கிற ஆன்மிக ஞானத்தை சின்னாபின்னமாக்கும் காலனித்துவ நோக்கத்துடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்த ஆன்மிகத்தை முற்றிலுமாக அகற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப் குறிப்பிட்ட மதத்தின் பிரச்சாரகர் மட்டுமல்ல, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் திட்டங் களுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர். அதேசமயத்தில் தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படிக்கும் போது மகிழ்ச்சியுற்றேன்”- – என்று பேசினார்.

வள்ளுவத்தில் இறையியல் இருக்கிறது. அது, இன்றைய பா.ஜ.க. கூட்டம் கற்பிக்கும் பிரித்தாளும் இறையியல் அல்ல. ‘‘திருக்குறள் என்பது சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று. பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறையோடு திருக்குறள் ஒத்தது என்பர். இல்லை, இல்லவே இல்லை” என்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

”திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம்” : ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கும் முரசொலி!

வள்ளுவர் அறம் பேசுகிறார். அதற்கும் மனுநீதிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி?” என்று பாடியவர் மனோன்மணியம் சுந்தரனார். திருக்குறளை நன்கு உணர்ந்தவர்கள், மனுவைப் போற்றுவார்களா? என்று கேட்டுவிட்டு, போற்றமாட்டார்கள் என்று சீறியவர் சுந்தரனார். தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் அவர். ‘ஆரியம் போல் உலகவழக்கு ‘அழிந்தொழிந்து’ சிதையா உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்று சீறியவர் சுந்தரனார். வாழ்த்துப் பாடலில் ‘அழித்தொழிந்து’ என்ற சொற்கள் வேண்டாமே என்று எடுத்து விட்டு சுருக்கிக் கையாண்ட பொதுமை உள்ளம் கொண்டவராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்தார் என்பது ரவிக்களுக்குத் தெரியுமா?

“குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து - - – ஆரியக் கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும் அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும்” என்றார் தந்தை பெரியார்.

“ஆரியரல்லாத இந் நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவருக்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக் காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் நம் பெருமையை திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காரியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியுமாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக்குத்தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால் திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது” என்றும் சொன்னவர் தந்தை பெரியார்.

‘நமது மதம், குறள் மதம்’ என்றார் பெரியார். இதை அறிவாரா ஆர்.என்.ரவி. “ 130 அதிகாரங்கள்தான் திருவள்ளுவர் எழுதியதே தவிர 133 அதிகாரங்கள் அல்ல” என்றும் சொன்னவர் பழுத்த சைவரான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள். ‘மெய்யுணர்தல்’ அதிகாரத்தில் கடவுளுக்கு கூறிய இலக்கணம், ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் கடவுளுக்கு கூறிய இலக்கணம் - ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டையும் எழுதியவர் ஒருவரல்ல என்பதை அறியலாம் என்றவர் வ.உ.சி. எனவே, கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை - – ஆகிய மூன்று அதிகாரத்துக்கும் ‘இடைப்பாயிரம்’ (பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது) என்று பிரித்து விட்டார் வ.உ.சி. அவர்கள். எனவே, ஏதோ திருக்குறளை திராவிடச் சிந்தனை கொண்டவர்கள் திரித்து விட்டதைப் போல ஆளுநர் ரவி பேசுவது அபத்தம் ஆகும்.அவர்தாம், தான் வந்ததில் இருந்து தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழர் திருவிழாவாம் பொங்கல் திருநாளுடன் இணைத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இது அரசாணைகளின் படி கொண்டா டப்படுகிறது. அதனையே மாற்ற முனைகிறார் ஆளுநர். ‘தமிழ்நாடு’ என்று சட்டபூர்வமான பெயரையே பயன்படுத்த மனமில்லாதவர் அவர். இவர் எப்படி திருவள்ளுவரை மனமார்ந்து போற்றுவார்?

banner

Related Stories

Related Stories