முரசொலி தலையங்கம் (13-05-2024)
வருக அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். சூன் 1 ஆம் தேதி வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ‘இந்தியா’வைக் காக்க வேண்டிய நேரத்தில் அவர் வெளியில் வருகிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகிய நீதிபதிகள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை வழங்கி இருக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் தரப்போவதாக நீதிபதிகள் முன்பே சொன்னார்கள். ‘தேர்தல் பரப்புரை செய்வது எல்லாம் அரசியல் சட்ட உரிமை அல்ல’ என்று அமலாக்கத்துறை சார்பில் அரசியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப் புகாரைப் பற்றி கருத்துச் சொல்ல அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதே தவிர, அரசியல் சட்டத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கான உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?
பா.ஜ.க. ஆட்சியில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகள்தான் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்புகளாக ஆகிவிட்டன. இவர்களை வைத்துத்தான் பா.ஜ.க. அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறது. பா.ஜ.க.வின் வாஷிங் மிஷினைப் பயன்படுத்துபவர்கள் இவர்கள்தான்.
மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். “டெல்லி கலால் கொள்கை வழக்கில் 100 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்றால் அந்தப் பணம் எங்கே? அதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேட்டது உச்சநீதிமன்றம். இதுவரை அமலாக்கத் துறையால் ஆதாரத்தைத் தர முடியவில்லை. இருந்தால்தானே தருவார்கள்?
உச்சநீதிமன்றம் மிகமிகத் தெளிவாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வழக்கறிஞரைப் பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறுகேள்விகளைக் கேட்டார்கள்.
1.நீதிமன்ற நடைமுறைகள் ஏதுமில்லாமல் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா?
2.இந்த வழக்கில் இதுவரை ஏதாவது சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதா?
3.இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா?
4.கலால் கொள்கை வழக்கில் கைதான டெல்லி முன்னாள் முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவின் வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் எந்த இடத்தில் வருகிறார்?
5. கெஜ்ரிவால் ஜாமின் கோருவதற்கு பதிலாக தனது கைது மற்றும் காவலில் வைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். எனவே அவரை கைது செய்வதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறதா?
6.தேர்தல் நேரத்தில் எதற்காக கைது செய்தீர்கள்? -இவைதான் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள். இவை எதற்கும் அமலாக்கத்துறையால் பதில் சொல்ல முடியவில்லை.
“2023 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக அமலாக்கத்துறை சொல்லி வருகிறது. ஆனால் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி வெளியானது. உடனே மார்ச் 21ஆம் தேதி கைது செய்கிறார்கள்” என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சொன்னார்.
இன்னொரு முக்கியமான அதிர்ச்சிக்குரிய தகவலையும் நீதிமன்றத்தில் சிங்வி சொல்லி இருக்கிறார். “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரின் ஜாமீன் மனுவை முதலில் அமலாக்கத்துறை எதிர்த்தது. அவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கெஜ்ரிவால் பெயரைச் சொன்னதும் அமலாக்கத்துறை அவர்களது ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை. இந்த மாதிரியான ஆட்களின் வாக்குமூலத்தில் கெஜ்ரிவால் பெயர் ஐந்து இடத்தில் வர வைத்துள்ளார்கள்” என்று சொல்லி இருக்கிறார் சிங்வி. அமலாக்கத்துறையை எதற்காக வைத்துள்ளது பா.ஜ.க. என்று தெரிகிறதா?
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8இன் கீழ் ஒரு வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் தொடங்குவதற்கும் கைது நடவடிக்கைக்கும் அதிகபட்ச கால அளவு 365 நாட்கள் ஆகும். அதாவது ஓராண்டு காலம்தான். ஆனால் இந்த வழக்கில் நீண்ட கால இடைவெளி உள்ளது. இது நீதிமன்றத்தை கவலையடையச் செய்துள்ளது - என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கானது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதிதான் கெஜ்ரிவால் கைது செய்யப்படுகிறார். ஓராண்டு காலத்தையும் தாண்டி ஏழு மாதம் கூடுதலாக ஆகிவிட்டது. இத்தனை மாதமாக பயமுறுத்தி வந்துள்ளது பா.ஜ.க. ஆட்சி. காங்கிரஸ் கட்சியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணி அமைக்கச் சம்மதித்துவிட்டார், அதில் உறுதியாக இருந்து விட்டார் என்று தெரிந்ததும் கைது செய்துவிட்டார்கள். இதைவிடக் கேவலமான, கீழ்த்தரமான, கயமையான நடவடிக்கை இருக்க முடியுமா?
மோடியின் முகத்திரையை அவரது ஆதரவாளர்களே வெட்கப்படும் அளவுக்கு கீழித்த சம்பவம்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஆகும். வெளியில் இருந்தால் கடுமையாக பரப்புரை செய்வார் என நினைத்து உள்ளே வைத்தார்கள். உள்ளே இருந்து இன்னும் கூடுதல் பலத்துடன், கோபத்துடன் வந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். வருக, ‘இந்தியா’வைக் காக்க!