முரசொலி தலையங்கம் (25.4.2024)
சண்டிகர் முதல் சூரத் வரை
‘மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. ஜனநாயகத் தேர்தல் முறை இருக்காது’ -– என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது சொல்லி வந்தார்கள். அதை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது, சூரத் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல். சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏன்? யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லையா? இல்லை! போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரின் தகுதியை நீக்கிவிட்டார்கள். பா.ஜ.க. வேட்பாளரை வென்றவராக அறிவித்துவிட்டார்கள். இதுதான் ‘மோடி பாணி ஜனநாயகம்’ ஆகும்.
குஜராத் மாநிலம் -– சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளராக நிலேஷ் கும்பானி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவில் முன்மொழிந்தவரின் கையெழுத்தில் முரண்பாடு என்று சொல்லி காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மாற்று வேட்பாளர் இருந்தார். அவரது மனுவையும் தள்ளுபடி செய்து விட்டார்கள். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார்கள். இன்னும் இரண்டு சிறிய கட்சிகளின் வேட்பாளர்களையும் வாபஸ் வாங்க வைத்தார்கள். 4 சுயேட்சைகளை வாபஸ் வாங்க வைத்தார்கள். பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. ‘சூரத் தொகுதி தாமரைக்கு முதல் பரிசு’ என்று குஜராத் மாநிலத் தலைவர் அறிவித்தார். அவ்வளவுதான், மோடி தேர்தல் முடிந்து விட்டது!
இப்படி ஒரு அசாதாரண சூழல் என்றால் அதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல்முறைகூட செய்யப்படவில்லை. பா.ஜ.க. வேட்பாளரின் மனு தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடுவாரா? டெல்லியில் உட்கார்ந்தபடியே தலையாட்டி விடுவாரா? இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ‘மோடி பாணி’ தேர்தல்தான் சண்டிகரிலும் நடந்தது. உச்சநீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் சண்டிகர் மேயர் தேர்தல் நடந்தது. அதில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை களத்தில் இறக்கின. தேர்தல் முறையாக நடந்தால் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறும். பா.ஜ.க.வுக்கு 14 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தது. ஆம் ஆத்மி கட்சிக்கு 13 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டதால் மேயர் பதவியை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும் நிலைமை உருவானது. உடனே தேர்தலை நடத்தாமல் தள்ளி வைத்தார்கள்.
பின்னர் திடீரென்று தேர்தலை அறிவித்தார்கள். தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி 20 வாக்குகளையும், பா.ஜ.க. 16 வாக்குகளையும் பெற்றன. ஆனால் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்தார் தேர்தல் அதிகாரி. வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரியே எதையோ எழுதி கிறுக்கினார். அது வீடியோவில் இருக்கிறது. அவர் கிறுக்கிய சீட்டுகளை அவரே செல்லாது என்று ஆக்கினார். பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஆம் ஆத்மி -–- காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் குல்தீப் குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி அனில் மாஷி, வாக்குச் சீட்டில் குறியீடு செய்து செல்லாததாக ஆக்கியது உண்மைதான் என்று நீதிபதிகள் முன் ஒப்புக் கொண்டார். ‘குறியீடு மட்டும் செய்யவில்லை, அந்த வாக்குச் சீட்டில் வரி வரியாக எழுதி இருக்கிறார் தேர்தல் அதிகாரி’ என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். ‘ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் மட்டுமே இதனை தேர்தல் அதிகாரி எழுதி உள்ளதால் அதனை குற்றச்செயலாகக் கருதவேண்டும்’ என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறியது. சண்டிகர் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றியையே ரத்து செய்தது உச்சநீதிமன்றம். சிதைக்கப்பட்ட எட்டு வாக்குச் சீட்டுகளின் வாக்குகளையும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு வழங்கி அவரை வெற்றி பெற்றவராக நீதிபதிகள் அறிவித்தார்கள். இதே போலத்தான் சூரத் வழக்கும் ஆகும். ஜனநாயகப்படி சூரத்தில் தேர்தல் நடக்கும் நாள் தூரத்தில் இல்லை.
தான் அனைத்து மாநிலங்களுக்கும் போய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏழு கட்டமாகத் தேர்தல் நடத்துகிறார் மோடி என்று குற்றம் சாட்டியுள்ளார் மம்தா. தேர்தல் பத்திரங்களின் மூலமாக தனது கட்சிக்கு ரூ.9 ஆயிரம் கோடி சம்பாதித்துக் கொடுத்த மோடி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை தேர்தல் நேரத்தில் முடக்கிவிட்டார். வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் பா.ஜ.க. அல்லாத வேட்பாளர்களையும், கட்சிகளையும் மோப்பம் பிடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. என்ன வேண்டுமானாலும் பேசி எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தி வாக்குகளை அறுவடை செய்து கொள்ளுங்கள் என்று மோடிக்கு லைசென்ஸ் கொடுத்துவிட்டு மவுனித்து விட்டது தேர்தல் ஆணையம். இதற்கு மேலும் கெட்டுப் போக எதுவுமில்லை என்ற நிலைமைக்கு நாட்டைக் கொண்டு போய் நிறுத்திவிட்டார் மோடி.எதிர்காலத்தில் ‘மோடி தேர்தல்’ என்பதற்கு உதாரணமாக சண்டிகர் மேயர் தேர்தலும், சூரத் எம்.பி. தேர்தலும் இருக்கப் போகிறது. இருந்து கேவலப்படுத்தப் போகிறது.