மோடிக்கு விடை கொடுப்போம் - 2
மோடி மர்மமான மனிதர் என்பதை அடையாளம் காட்டியதே பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகும். இன்று வரை அது எதற்காக நடத்தப்பட்டது என்றே சொல்லப்படவில்லை. திடீரென்று ஒரு நாள் ராத்திரியில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோடி.
கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறோம், கருப்புப் பணத்தை கண்டு பிடிக்கப் போகிறோம் என்று பிரதமர் சொன்னார். தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இதில் இருந்து தான் பணம் போகிறது என்றார். கருப்புப் பணத்தை கண்டுபிடிக்கிறோம் என்றால் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர நல்ல பணம் எல்லாத்தையுமா ஒழிப்பது? தலைவர் கலைஞர் அவர்கள் அப்போது ஒரு கதை சொன்னார்கள்... மன்னரின் அரண்மனையில் ஒரு பொருள் திருடு போய்விட்டதாம். யார் திருடியது என்று கண்டுபிடிக்க முடியவில்லையாம். உடனே மன்னர் சொன்னாராம்? நாட்டில் உள்ள அனைவருக்கும் பத்து சாட்டையடி கொடுங்கள் என்றாராம். ஏன் இப்படி அனைவரையும் அடிக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டாராம் மந்திரி. உடனே மன்னர் சொன்னாராம்: “அனைவரையும் அடிக்கச் சொன்னால், இந்தக் கூட்டத்தில் இருக்கும் திருடனுக்கும் அடி விழுந்துவிடும் அல்லவா?” என்றாராம் மன்னர். இப்படி ஒரு அதிபுத்திசாலித்தனமான நடவடிக்கைதான் பணமதிப்பிழப்பு நீக்கம் ஆகும்.
கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை கண்டு பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி 500, 1099 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார் மோடி. அப்போது இந்தியாவில் புழக்கத்தில் இருந்தது 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய். இதனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்த பிறகு திரும்பி வந்தது -- 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் தான் திரும்ப வரவில்லை. 99 சதவிகித பணம் திரும்ப வந்துவிட்டது. 98 சதவிகித பணம் திரும்பி வந்துவிட்டது. நாட்டில் அதிகப்படியான கருப்புப் பணம் இருந்திருந்தால் இவ்வளவு தொகை மறுபடி வந்திருக்குமா? இந்தக் குழப்படியான காலக்கட்டத்தில் 140 பேர் மரணம் அடைந்தார்கள்.
50 விழுக்காடு சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போனது. 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தார்கள். நாட்டின் உற்பத்தி விகிதம் குறைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறு - குறு - நடுத்தர நிறுவனங்கள் இன்று வரை மீள முடியவில்லை. மோடியின் மர்மமான பக்கம் இது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினாவே சமீபத்தில் இதனைக் கண்டித்துப் பேசினார். ஒருநாள் இரவில் 100 கோடிப்பேரின் மனநிலையைக் குலைய வைத்த மோடி தொடரலாமா?
இன்றைக்கு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்குப் பெயர் ‘மோடியின் கேரண்டி' என்பதாகும். 'வாரண்டி இல்லாத கேரண்டிகளைக் கொடுப்பதுதான் மோடியின் பாணி' என்று கிண்டலடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுவரை கொடுத்த கேரண்டிகள் எல்லாம் என்ன ஆனது?
எந்த வாக்குறுதியையாவது பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றி இருக்கிறாரா?
« வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர்கள் தலைக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் நான் செலுத்துவேன்.
« ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன்.
« விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக ஆக்குவேன்.
« அனைத்துப் பொருள்களையும் இந்தியாவில் தயாரிப்போம்.
« விலைவாசியைக் குறைப்போம்.
« இந்திய நதிகளை இணைப்போம்.
« அனைத்து நதிகளையும் சுத்தப்படுத்துவோம்.
« அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் சமையல் எரிவாயு அடுப்பு.
« அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு
« பெண்களுக்காகவே நடமாடும் வங்கி உருவாக்கப்படும்.
« இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும்.
« விளைபொருட்களை கொண்டு செல்ல சிறப்பு ரயில்கள்.
« பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவோம்.
« அத்தியாவசியப் பொருள் விலையை கட்டுப்படுத்த தனிநிதியம் ஏற்படுத்தப்படும்.
« வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
« அரசியல் தலையீடுகள் இல்லாமல் புலனாய்வு அமைப்புகள் செயல்படும்.
« அதிவேக புல்லட் ரயில் விடுவோம்.
« அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
« கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினர் வேறுபாடு இல்லாமல் பங்களிப்பு இருக்கும்.
« விவசாயத்தின் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்போம்.
« மாநில முதலமைச்சர்களை சமமாகக் கருதி தேசப் பங்களிப்பில் ஈடுபடுத்துவோம்.
« மாநில அரசுகளுக்கு அதிக அளவில் நிதி அதிகாரம் வழங்கப்படும்.
« மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில கவுன்சில்கள் அமைக்கப்படும்.
« பெருநகரங்களை இணைக்க வைர நாற்கர ரயில் திட்டம்
« கிராமங்களுக்கு 24 மணிநேரமும் மின்சார இணைப்பு தருவேன்.
- இவை அனைத்தும் 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்னால் கொடுத்த வாக்குறுதிகள். இதில் எதை நிறைவேற்றி இருக்கிறார் என்பதை பிரதமர் மோடிதான் சொல்ல வேண்டும்.
எல்லாவற்றுக்கும் நாள் குறித்தாரே! குறித்த நாளில் செய்து காட்டினாரா?
« 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் கோடி டாலராக மாறும் .
« விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்கு ஆக்குவேன்.
« 2022 ஆம் ஆண்டுக்குள் குடிநீர் - மின்சாரம் - கழிவறை கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும்.
« 2022இல் வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டார்கள்.
« 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை 5 ஆவது இடத்துக்கு 2024 ஆம் ஆண்டுக்குள் கொண்டு வருவேன்.
ஆண்டுகள் போனது, ஆனால் எதுவுமே சாதித்துக் காட்டவில்லை.
2014 ஆம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ரூபாய் 78 பைசாவாக இருந்தது. 2024 மோடி ஆட்சியில் 83 ரூபாய் 59 பைசாவாக இருக்கிறது. இதுதான் மோடி காட்டிய பொருளாதார வளர்ச்சியா?
2014 வரை இந்தியாவின் மொத்தக் கடன் என்பது ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.183 லட்சம் கோடியாக இருக்கிறது. இதுதான் மோடி காட்டிய வளர்ச்சி இந்தியாவா? தன்னைப் பற்றி தானே உருவாக்கிய புனைவுகளின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தார் மோடி. அது சரியத் தொடங்கிய காட்சியை இந்தியா முழுவதும் பார்க்கிறோம்!
- தொடரும்