முரசொலி தலையங்கம்

திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்படும் சட்டங்கள்- முரசொலி!

திராவிட மாடல் ஆட்சியில்  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்படும் சட்டங்கள்- முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (26.2.2024)

சமூகநீதியை நிலைநாட்டும் சட்டம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை 'சமத்துவ நாள்' என்று அறிவித்து அன்றைய தினம் அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த வரலாற்றுச் சாதனையின் தொடர்ச்சியாக, 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்ட சட்டம் -–2024' என்பதை 'திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிக் காட்டியிருப்பதன் மூலமாக சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் அவர்களால் கொண்டு வரப்பட்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களது மேம்பாட்டுக்காக மாநிலத்தின் மொத்த நலத் திட்டச் செலவின ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை ஒதுக்குவதற்கும் இது வழிவகை செய்கிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த வகையில் பட்டியலின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அடித்தளம் அமைத்துள்ளது இந்த சமூகநீதிச் சட்டம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் காக்க ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காகத் தொண்டாற்றி வரும் நபருக்கு ஆண்டுதோறும் ‘டாக்டர். அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் பரிசுத் தொகையாக ஐந்து லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களிடையே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24–ஆம் தேதி முதல் 30-–ஆம் தேதி வரை “மனிதநேய வாரவிழா’’ நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில்  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்படும் சட்டங்கள்- முரசொலி!

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி பிறர் போற்ற வாழவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஓராண்டில் 102 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை (Solatium) தற்போது உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சமூகக், கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரியின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர் கல்வி பயில கட்டணச் சலுகைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 2,974 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 31 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதந்திர உணவுக்கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும், கல்லூரி மாணக்கர்களுக்கு 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் இவ்வரசால் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உண்டு உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என 381 அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகள் 166 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் சாலை வசதி, சிறு கட்டுமானப் பணிகள், குடிநீர் வசதி மற்றும் சிறு பாலங்கள் கட்டுதல் முதலிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 4,624 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டமானது ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, ‘அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் பழங்குடியினர் குடியிருப்புகளில் 475 கோடி ரூபாய் செலவில் 25,262 அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில்  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்படும் சட்டங்கள்- முரசொலி!

‘தாட்கோ’வால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 10,466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதியம் 2022–-23-ஆம் நிதியாண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் துவங்கப்பட்டது.

கடந்த ஆண்டு 21 புத்தொழில் நிறுவனங்கள் 28.10 கோடி ரூபாய் பயன்பெற்ற நிலையில் இத்திட்டத்தின் சிறப்பான வெற்றியைக் கருத்தில் கொண்டு 2023--–24-ஆம் நிதியாண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்நிதியாண்டில் 5 பழங்குடியினர் மற்றும் 21 ஆதிதிராவிடர் நிறுவனங்கள் என மொத்தம் 26 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 13 நிறுவனங்கள் மகளிரால் நிர்வகிக்கப்படுபவை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைசார்ந்த புதிய தொழில் தொடங்க, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ இவ்வரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

‘தூய்மைப் பணியாளர் நல வாரியம்’ திருத்தி அமைக்கப்பட்டு, 87,327 உறுப்பினர்களுக்கு 10கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  ‘புதிரை வண்ணார் நல வாரியம்’ திருத்தி அமைக்கப்பட்டு, அம்மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள 2023-–2024 ஆம் நிதியாண்டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு அடிப்படைக் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், பழங்குடியினர் நல வாரியம் மற்றும் நரிக்குறவர் நல வாரியம் ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளன.

கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து – அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்த ஆண்டு (2023) ஏப்ரலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதன் தொடர்ச்சியாகவே ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்ட சட்டம் –- 2024’ அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories