முரசொலி தலையங்கம் (20-02-2024)
இணையற்ற இரண்டு தீர்மானங்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இணையற்ற இரண்டு தீர்மானங்களைக் கொண்டு நிறைவேற்றி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒன்று - இந்திய ஜனநாயகத்தைக் காக்க! மற்றொன்று - தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க!
ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பதை உருவாக்குவதன் மூலமாக அரசியல் ஒற்றைத் தன்மையை உருவாக்க பா.ஜ.க. நினைக்கிறது. மாநிலங்களையும் உள்ளாட்சி அமைப்புகளையும் அடையாளமற்று செல்லாதது ஆக்கும் முயற்சியாகும். எனவே தான், ‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ என்ற எதேச்சதிகார நடவடிக்கையை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தொகுதி மறு சீரமைப்பை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாற்றுவதன் மூலமாக குடும்பக் கட்டுப்பாட்டுத்
திட்டத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பின்னடைவைச் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரிவைச் சந்திக்க வேண்டி வரும். இதன் மூலமாக தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேசுவோர் எண்ணிக்கை குறையும். எனவே தான் இதனையும் நாம் எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இவை இரண்டையும் அரசியல் எதிர்ப்பாக, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாக மட்டும் இல்லாமல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒட்டுமொத்தமாக ஆக்கிக் காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதற்கு எதிராகவும், ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்கு எதிராகவும் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான எதிர்ப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளது.
‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ முறை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு தி.மு.க. சார்பிலான கருத்தை கழகப் பொதுச்செயலாளர் – மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் ஏற்கனவே அனுப்பி விட்டார்.
“அரசியல் சட்டத்திற்கும் - அச்சட்டம் தந்த கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக – மத்திய மாநில உறவை மட்டுமின்றி, ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் “ஒரே நாடு – ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிடு! அதிகாரவரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக்குழு – அதிகாரப் பசி கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு துணை போகாமல்– தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும்!” - என்று அந்தக் கடிதத்தில் மாண்புமிகு துரைமுருகன் குறிப்பிட்டு இருந்தார்.
2022 இல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் பாராளுமன்றம், மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால், தற்பொழுது ஒன்றிய அரசு இதை விரிவுபடுத்தி பாராளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும். மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதும் ஆகும். எனவே அனைத்து மாநில அரசுகளும் ‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ என்பதை எதிர்க்க வேண்டும்.
‘தொகுதிகளின் எண்ணிக்கை குறையக் கூடாது’ என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிக்கை விடுத்து இருந்தார். மகளிருக்கு 33 விழுக்காடு என்ற நாடகத்தை பா.ஜ.க. ஆட்சி செய்தது. சட்டத்தை நிறைவேற்றுவது போல நிறைவேற்றி, அது நடைமுறையில் நிறைவேறிவிடாத அளவுக்கு தடையையும் ஏற்படுத்தியது பா.ஜ.க. அரசு. தொகுதி வரையறை முடிந்த பிறகு தான் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ‘கட்டை’யைப் போட்டுவிட்டது பா.ஜ.க. அரசு. தொகுதி மறுவரையறை என்பது இப்போதைக்கு நடக்கும் விஷயம் அல்ல என்பதை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி இருந்தார். அது தொடர்பான அறிக்கையில், தொகுதி மறுவரையின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
“தமிழ்நாட்டின் மீது– தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்பு மிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற
உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார் முதலமைச்சர் அவர்கள். ஆனால் பா.ஜ.க. தலைமையோ, பா.ஜ.க. அரசோ இதற்கு அதிகாரப்பூர்வமான பதிலை இது வரை தரவில்லை. தமிழ்நாட்டுக்கு, தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற உத்தரவாதம் இதுவரை கிடைக்கவில்லை. எனவேதான் தமிழ்நாடு அதிகமான கவலை கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மாநிலங்களை ஒழிப்பதுதான் ஜனசங்கத்தின் வேலைத் திட்டமாக 1952 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதனைச் செய்வது தான் பா.ஜ.க. ஆட்சியின் வேலைகள் ஆகும். இதனை இறுதிவரை எதிர்த்தாக வேண்டும்.