முரசொலி தலையங்கம்

”தமிழ்நாட்டு மக்கள் மனதில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்த முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே ‘மகிழ்ச்சி’யைப் பொங்க வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

”தமிழ்நாட்டு மக்கள் மனதில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்த முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (13-01-2024)

மகிழ்ச்சியைப் பொங்க வைத்த முதல்வர்!

தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே ‘மகிழ்ச்சி’யைப் பொங்க வைத்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘அண்ணன் சீர் கிடைத்துவிட்டது’, ‘எங்கள் பெற்றோரைப் போலக் கவனிக்கிறார்’ என்று பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க பேட்டிகள் அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு - அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் அவர்கள் முன்கூட்டியே அறிவித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சத்து, 71 ஆயிரத்து 113 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் இந்த பரிசுத் தொகுப்பை வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை கிடைக்கும். இத்துடன் ஆயிரம் ரூபாய் பணமும் தரப்படும் என்று தாயுள்ளத்தோடு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்தப் பொருட்களும் பணமும் வழங்கும் திட்டத்தையும் சனவரி 11ஆம் தேதி ஆழ்வார் பேட்டை நியாயவிலைக் கடைக்குச் சென்று, தானே தொடங்கி வைத்துவிட்டார் முதலமைச்சர் அவர்கள்.

இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு கோடியே 77 லட்சம் வேட்டிகளும், ஒரு கோடியே 77 லட்சம் சேலைகளும் அரசால் வாங்கப்பட்டுள்ளன. இவையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் கிடைக்கப் போகிறது என்பது ஒரு பக்கம். கைத்தறி, விசைத்தறித் தொழிலாளர்கள் இதன் மூலமாகப் பயனடைகிறார்கள் என்பது இன்னொரு பக்கம் ஆகும். இரண்டு தரப்பினரும் பயனடையும் மாபெரும் திட்டமாகும் இது.

”தமிழ்நாட்டு மக்கள் மனதில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்த முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக மட்டும் 2,436.19 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். மிகுந்த நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் கனிவான உள்ளத்தோடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த முடிவு அனைத்துத் தரப்பினராலும் அவருக்கு வாழ்த்துகளை வாங்கித் தந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர்தான் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரை தமிழ்நாடு சந்தித்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் முதலிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் அதன்பிறகும் புயல் - மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - 6 ஆயிரம் ரூபாயை வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். ஒன்றிய அரசிடம் நிவாரணத் தொகை கேட்டு தமிழ்நாடு அரசு கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்து வருகிறதே தவிர, ஒன்றிய அரசிடம் இருந்து ரூபாய் 900 கோடிக்கு மேல் பணம் வரவில்லை.

கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 37,907.19 கோடி ரூபாயைக் கோரியுள்ளது. இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும்.

பிரதமர் அவர்களிடம் டெல்லி சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வைத்த கோரிக்கை இது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அன்று இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை வைத்து மூன்று வாரங்கள் ஆகப் போகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் இங்கு வந்து பார்த்துச் சென்றார். அவரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒன்றியக் குழு மூன்று நாட்கள் தங்கி ஆய்வை நடத்தியது. அவர்களிடமும் முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கைகளை வைத்தார். ஒன்றிய உள்துறை அமைச்சரைச் சந்தித்து 13 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் குழுவினர் கோரிக்கை வைக்க இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் இருந்து பணம் வரும் நாளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் - மக்களுக்குப் பணத்தை வாரி வழங்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

”தமிழ்நாட்டு மக்கள் மனதில் மகிழ்ச்சியைப் பொங்க வைத்த முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

“வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் அய்யா கொடுத்துட்டாங்க. மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வந்திருச்சு. இப்ப பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் கிடைச்சிருச்சு. மொத்தம் 8 ஆயிரம் ரூபாயை எங்க அண்ணன் மாதிரி முதலமைச்சர் அய்யா கொடுத்திருக்காங்க. இந்த பொங்கலுக்கு யார் தயவும் எனக்குத் தேவையில்லாம முதலமைச்சர் கொடுத்த பணத்திலயே பொங்கலைக் கொண்டாடிடுவேன்” என்று ஒரு பெண் அளித்துள்ள பேட்டி என்பது, முதலமைச்சர் அவர்களின் கருணையுள்ளத்தை அளவிடுவதாக அமைந்துள்ளது.

“உங்கள் வீட்டுக்கு விளக்காவேன்.நாட்டுக்குத் தொண்டனாவேன்.மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்!” - என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன்பு சொன்னார்கள். முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அதன்படி நடந்து வருகிறார்கள். கோடிக்கணக்கான தமிழ்மக்கள் சார்பில் முதலமைச்சரை வாழ்த்துவோம்! வாழ்க! வாழ்கவே!

banner

Related Stories

Related Stories