முரசொலி தலையங்கம்

‘மக்களுடன் முதல்வர்’ - மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முரசொலி புகழாரம்!

மக்களுக்கும் அரசுக்குமான- மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்குமான- மக்களுக்கும் முதலமைச்சருக்குமான நெருக்கத்தை ‘மக்களுடன் முதல்வர்’ முகாம்கள் அதிகம் ஏற்படுத்தப் போகிறது.

‘மக்களுடன் முதல்வர்’ - மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-12-2023)

மக்களோடு மக்களாக...

அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்த்திட‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய புதுமையான திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவையில் தொடங்கி வைத்துள்ளார். முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஆயிரத்து 745 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாமை நோக்கி கோரிக்கை மனுக்களோடு வருகிறவர் அனைவர்க்கும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றித் தரப்பட இருக்கிறது. மக்களுக்கும் அரசுக்குமான- மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்குமான- மக்களுக்கும் முதலமைச்சருக்குமான நெருக்கத்தை இந்த முகாம்கள் அதிகம் ஏற்படுத்தப் போகிறது.

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொன்மொழி என்பது பேரறிஞர் அண்ணாவின் மொழியாகும். ‘மக்களோடு செல்– மக்களோடு வாழ்- மக்களிடம் கற்றுக்கொள்’ என்பதை உள்ளடக்கமாகக் கொண்டது அந்தப் பொன்மொழி. ஆட்சியில் இல்லாத போது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தபிறகும் தனது நடைமுறைப் பாதையாக இதனையே முதலமைச்சர் அவர்கள் வரித்துக் கொண்டார்கள்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் தீட்டி வருகிறார்கள். திட்டம் தீட்டியதோடு தனது கடமை முடிந்ததாக முதலமைச்சர் நினைக்கவில்லை. அந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். ‘டேஸ் போர்டு’ இதற்காகவே தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும் எந்தளவுக்கு நகர்ந்து வருகிறது என்பதை இந்த பலகை காட்டும்.

எப்படி நடந்து வருகிறது என்பதை அறிவதற்காக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டினார்கள். நேரடியாக மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினார்கள். இரண்டாம் - மூன்றாம் நிலை அதிகாரிகள் - அலுவலர்கள் வரை அனைவரையும் அழைத்துப் பேசினார்கள். யார் யார் எந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திவருகிறார்களோ அந்த மாவட்ட அதிகாரிகளை நேரடியாக பாராட்டினார்கள். அப்படி மாவட்டங்களுக்குச் செல்லும் போது, பணிகள் நடைபெற்று வரும் இடங்களையும் நேரடியாகப் போய்ப் பார்த்தார் முதலமைச்சர் அவர்கள்.

‘மக்களுடன் முதல்வர்’ - மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முரசொலி புகழாரம்!

குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன்மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்தார் முதலமைச்சர். துறை ரீதியான ஆய்வாக மட்டுமல்லாமல் அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருபவர்களை பாராட்டும் களமாகவும் இது அமைந்திருந்ததால் அதிகாரிகள் - அலுவலர்கள் உற்சாகமாக இதில் பங்கெடுத்தார்கள். ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டம், மக்களுக்கான திட்டங்களை அளவிடுவதாக அமைந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாகத்தான் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி பெரும்பாலான அடிப்படைச் சேவைகள் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த இணையத் தளச் சேவையை முறையாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்காகவே இந்த திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். மின் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி, ஆதிதிரவிடர்நலம், பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம், காவல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு, கூட்டுறவு சிறு, குறு நடுத்தரத் தொழில்கள், மாற்றுத்திறனாளிகள் நலம், சமூகநலன் மற்றும் மகளிர்உரிமை - ஆகிய துறைகளை நோக்கி வரும் மக்களின் கோரிக்கைகளுக்காக இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்று அனைத்துப் பொதுமக்களுக்கும் அனைத்து சேவைகளும் எளிதில் கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் கூடி மக்களின் கோரிக்கைகளைப் பெற்றுப் பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இதை நான் நேரடியாகக் கண்காணிக்க உள்ளேன். இத்திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்” என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

‘மக்களுடன் முதல்வர்’ - மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முரசொலி புகழாரம்!

“மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால்தான் அரசின் மீது ஏழைகள் கொண்டுள்ள நம்பிக்கைகள் வலுவடையும். கண்களில் கண்ணீரோடும், வாடிய முகத்தோடும், இதயத்தில் நம்பிக்கையோடும் தலைமைச் செயலகத்தில் வரிசையாகவும், பொறுமையாகவும் நின்று மனுக்கள் அளிக்கும் அகவை முதிர்ந்தோர் இன்றளவும் வருவதைக்காண முடிகிறது. பொதுமக்கள் கோட்டையை நோக்கி அணிவகுப்பதை மாவட்ட ஆட்சியர்களும், மற்ற அலுவலர்களும் குறைத்திட வேண்டும்; வட்ட அளவில் முடிய வேண்டியதை வட்ட அளவிலும் -மாவட்டத்தில் முடிய வேண்டியதை மாவட்டத்திலும் – முடித்து வைக்க போதிய முயற்சிகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்” என்றும் முதலமைச்சர் அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

மக்களோடு மக்களாக ஆகிவிட்டது அரசு. மக்களோடு மக்களாக ஆகிவிட்டார் முதலமைச்சர்.

banner

Related Stories

Related Stories