முரசொலி தலையங்கம் (11.12.2023)
மோசடித்தனம்
...................
பா.ஜ.க. ஜனநாயகப் படுகொலையை பட்டவர்த்தனமாக நடத்தும் என்பதற்கு நேற்றைய உதாரணம் மஹூவா மொய்த்ரா! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை ஒரு கேலிக்கூத்து விசாரணைக் கமிஷன் மூலமாக வீழ்த்தி இருக்கிறது பா.ஜ.க. ஆட்சி. இது தான் ராகுல் காந்திக்கும் நடந்தது. மஹூவாவுக்கும் நடந்திருக்கிறது.
ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன நடந்தது? ‘மோடி’ என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் சொன்னாராம். 16.04. 2019 அன்று ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.--–வுமான புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 24.06.2021 அன்று இந்த வழக்கு விசாரணையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர் ஆனார். இதன் முக்கிய திருப்பு முனையாக 07.03.2022 அன்று வழக்கு தொடுத்த நபரே, வழக்கு விசாரணைக்கு தடை வாங்கினார். ஓராண்டு காலம் அதனைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை.
07.02.2023 அன்று அதானியும் பிரதமர் மோடியும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் கடுமையாக விமர்சித்தார். முன்பு வழக்கு போட்டவர் 16.2.2023 அன்று திடீரென்று குஜராத் உயர்நீதிமன்றம் சென்று, தான் பெற்ற தடை உத்தரவை திரும்பப் பெறுகிறார். இதையடுத்து, 17.03.2023 வாதங்களை தொடர சூரத் மாவட்ட நீதிபதி அனுமதிக்கிறார். ஐந்தே நாளில் அதாவது 23 ஆம் தேதியே தீர்ப்பு வருகிறது, ராகுலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறது. அதற்காகவே காத்திருந்தது போல, மறு நாளே –- 24 ஆம் தேதி அன்று அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் வந்துவிட்டார் ராகுல்.
ராகுல் பதவியைப் பறிக்க நடத்திய அவசர மோசடித் தனமே மஹூவா விவகாரத்திலும் நடந்துள்ளது. அதானியின் ரூ.13 ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி கேட்டவர் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மஹூவா மொய்த்ரா. ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் தனது வாதங்களை வைக்கக் கூடியவர் அவர். இதற்கு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வால் பதில் அளிக்க முடியவில்லை. அவரது உரை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் தனது டுவிட்டரில் பா.ஜ.க.வையும் ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் வறுத்தெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் மஹூவா. எனவே இவரை முடக்க முடிவெடுத்தார்கள்.
‘அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப தொழில் அதிபர் ஹிரா நந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் மஜூவா லஞ்சமாகப் பெற்றார்’ என்று குற்றம் சாட்டினார்கள். இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தியதாக ஜெய் ஆனந்த் தேஹத்ராய் என்பவரைக் குறிப்பிட்டார்கள். இந்த ஜெய் ஆனந்த் என்பவர் மஹூராவின் முன்னாள் காதலராம். எப்படி ஆள் பிடிக்கிறார்கள் பார்த்தீர்களா? கேவலமான இழிவழி அல்லவா இது? இருவரின் தனிப்பட்ட விவகாரத்தை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகாராகத் தருகிறார் பா.ஜ.க. எம்.பி.யான நிஷிகாந்த் துபே. இதனை நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை நடத்துகிறது. இந்தக் குழு என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் குழு மஹூவாவை விசாரித்தது. விசாரணையின் பாதியில் மஹூவா வெளியேறினார். தன்னை அநாகரிகமான கேள்விகளால் அசிங்கப்படுத்தினார்கள் என்று சொல்லி விட்டு மஹூவா வெளியேறினார்.
மஹூவாவுக்கு பணம் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஹிரா நந்தானியை நேரில் அழைத்து விசாரித்தார்களா? விசாரிக்கவில்லை. மஹூவா பணம் வாங்கியதாகக் குற்றம் சாட்டிய ஜெய் ஆனந்தை நேரில் அழைத்து விசாரித்தார்களா? விசாரிக்கவில்லை. மஹூவா பணம் வாங்கினார் என்பதற்கான ஆதாரம் காட்டப்பட்டதா? இல்லை. இதுதான் பா.ஜ.க.வின் நீதிபரிபாலன முறை. இதுதான் மோடி கோர்ட். மோசடித்தனத்தின் உச்சம் இதுதான்.
“விசாரணைக்கு வர நான் தயார். ஆனால் ஹிரா நந்தானி, ஜெய் ஆனந்த் ஆகிய இருவரையும் நான் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்” என்றார் மஹூவா. இது கடைசி வரை நடக்கவில்லை. பதவியைப் பறிக்கலாம் என்று குழு சொன்னதாம். பறித்துவிட்டார்கள். அவ்வளவுதான் விசாரணை நாடகம்.
“குழுவின் தலைவர் வினோத் சோன்கர், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விரிவான கேள்வியை, தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டார். அந்தக் கேள்விகள் என் உடைகளைப் பறிப்பதற்குச் சற்றும் குறைவானவை அல்ல. அதேநேரத்தில் விசாரணையின் போது இரண்டு பா.ஜ.க. எம்.பி.கள் அங்குதான் இருந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று மஹூவா சொல்லி இருந்தார். ஒன்றிய அரசும் பா.ஜ.க. தலைமையும் வெட்கத்தால் தலை குனிய வேண்டாமா?
“எனக்கு 49 வயது ஆகிறது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பா.ஜ.க.வுடன் மோதுவேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்த ஒரு பெண் எம்.பி.யை அடிபணிய வைக்க எவ்வளவு தொல்லைதான் தருவீர்கள்? பெண் சக்தி என்ன என்று காட்டுவேன்” என்று மஹூவா சொல்லி இருப்பது சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயகக் குரலாக இருக்கிறது.
பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க., ஒரு எதிர்கட்சி எம்.பி.யை பதவி நீக்கம் செய்வதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்வி கேட்டு துரத்தி அடிக்குமானால் மக்களால் துரத்தி அடிக்கப்பட வேண்டாமா பா.ஜ.க.?